திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-81

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-81


குறள் 240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.

மருமவன.. ஒருத்தன் வாழும்போது அவம் மேல எந்த பழியும் வராம பாத்துக் கிட்டாம்னா, அவந் தான் உயிர் வாழ்றவன்.
வாழும் போது எந்த புகழும் வராத மாதிரி வாழ்ந்தாம்னா, அவன் உயிர் வாழாதவன் மாதிரிதான் மருமவன. 

குறள் 366
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

மாப்ள.. ஆசை இருக்கே.. அது ஒருத்தன வஞ்சித்து கெடுத்துரும். அதுனால ஆசைக்கு பயந்துகிட்டு வாழ்றது தான் நல்ல வாழ்க்கை மாப்ள. 

குறள் 733
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.

அரசுக்கு தாங்க முடியாத சுமைகள் எம்புட்டு வேணாலும் வரலாம். அப்பமுல்லாம், அது எல்லாத்தியும் தாங்கி அரசுக்கு தோள் கொடுத்து உதவுவது தான் சிறந்த நாடு.

குறள் 790
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று

புனையினும் புல்லென்னும் நட்பு.

தம்பி.. ஏஞ் சேக்காளி இப்படிப்பட்டவனாக்கும், அதுபோல நானும் அவனுக்கு இப்படிப்பட்டவனாக்கும். இப்பிடில்லாம் ஒருத்தனை ஒருத்தன் செயற்கையா புகழ்ந்து பேசினானுவொன்னா அதுனால அந்த நட்புக்கு பெருமை கிடையாது தம்பி.

குறள் 791
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு.

ஒருத்தங்கிட்ட பழகுனதுக்கு பொறவு அந்த பழக்கத்தை விட்டுட்டு வாரது அத்தனை லேசுப்பட்டது இல்லை. அதுனால யார்கிட்டேயும் பழகுத்துக்கு முன்னாலயே அந்த ஆளைப் பத்தி நல்ல விசாரிக்காம பழகுனா அதுனால கெடுதல் தான் வரும்.
(தொடரும்)






 



Post a Comment

Previous Post Next Post