Ticker

6/recent/ticker-posts

நடுக்கடலில் பற்றி எரிந்த கப்பல்.. தீக்கிரையான 3,000 கார்கள்.. இந்திய மாலுமி மரணம்

டச்சு கடல் பகுதியில், 3,000 வாகனங்களை ஏற்றி சென்ற கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டின் நேரப்படி, கடந்த ஜூலை 25ஆம் தேதி நள்ளிரவில் ஃப்ரேமண்டில் ஹைவே (Fremantle Highway) என பெயர் கொண்ட இந்த சரக்கு கப்பலில் தீ பிடித்துள்ளது.
 
இந்தக் கப்பல் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கப்பலில் தீ பிடித்த சமயத்தில் 25 பேர் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக இருந்துள்ளனர். கப்பல் ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது. கப்பலில் தீ பிடித்ததை அறிந்ததும் ஆரம்பத்தில் தீயை அணைக்க முயன்றவர்கள், பின்னர் அது முடியாது என தெரிந்ததும் கப்பலில் இருந்த உயிர் பாதுகாப்பு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களில் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

சிலர் கடலில் குதித்து உயிர் தப்பிய நிலையில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கப்பலில் இருந்த மாலுமி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்து விட்டதாகவும், அவர் இந்தியாவை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.

ஃப்ரேமண்டில் ஹைவே கப்பலில் தீ இன்னமும் எரிந்து கொண்டுத்தான் இருக்கிறது. தீ முழுவதுமாக அணைந்த பின் கப்பலை வேறொரு கப்பலின் உதவியுடன் கரைக்கு இழுத்து வருவதோ அல்லது கப்பலை அங்கேயே கடலில் மூழ்கடிக்க செய்யவோ மட்டுமே முடியும். மற்றப்படி கப்பலை இயக்க முடியாது என நெதர்லாந்து நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கப்பலில் எலக்ட்ரிக் கார்களும் இருப்பதால் அதன் பேட்டரிகள் தீப்பற்றினால் இன்னும் நிலைமை மோசமாகும் என்றும் கூறப்படுகிறது. தீ கொளுந்துவிட்டு எரிவதனால் கப்பலில் ஏரி தீயை அணைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. தீயில் எரிந்து கப்பலின் சில பாகங்கள் சாம்பலாகி விட்டன. ஆதலால், தீயை அணைத்தாலும் கப்பல் கடலில் மிதப்பதற்கு எந்த அளவிற்கு நிலைத்தன்மை உடன் இருக்கும் என்பது தெரியாது.

இதன் காரணமாகவே, தீயை அணைத்தாலும் கப்பலை இயக்க முடியாது, கப்பலை அங்கேயே கடலுக்குள் விட்டு விட்டு வர வேண்டிய நிலைமை கூட ஏற்படலாம் என கூறும் நெதர்லாந்து நாட்டு அரசாங்கம், ஆட்களை பாதிக்கப்பட்ட கப்பலில் ஏற்றவும் தயங்குகிறது.

பனாமா நாட்டு கொடியுடன் இருக்கும் இந்த சரக்கு கப்பல் எகிப்தில் இருக்கும் சைடு துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. இதற்கிடையில், ஜெர்மனியின் பிரேமெர்ஹவென் துறைமுகத்தில் கடைசியாக நிறுத்தப்பட்டது. பின்னர் பயணத்தை மீண்டும் துவங்கிய நிலையில், நெதர்லாந்து நாட்டை கடக்கும் போது இந்த தீ விபத்து நடந்துள்ளது.

தீயில் சிக்கி இருக்கும் ஃப்ரேமண்டில் ஹைவே கப்பலில் கிட்டத்தட்ட 3,000 கார்கள் உள்ளதாகவும், இதில் எலக்ட்ரிக் கார்களும் உள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கப்பல் எரிவதால் அந்தப் பகுதியில் கடல் வளம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அஞ்சப்படுகிறது.

news18


 



Post a Comment

0 Comments