பதினாறாவது ஆசியக் கோப்பையின் இறுதிநாள் இறுதிப்போட்டியில் இந்திய - இலங்கை அணிகள், கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் களமிறங்கின.
இந்த போட்டியில் நாணயற் சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் முதலில் ஆட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்திய பந்துவீச்சாளர்கள்
ஒட்டுமொத்த இரசிகர் கணிப்புக்களையும் தவிடு பொடியாக்கும் விதமாக இந்திய பந்துவீச்சாளர்கள் செயல்பட்டார்கள்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இலங்கை அணியின் சரிவை முதல் ஓவரின் மூன்றாவது பந்திலிருந்து ஆரம்பித்தார்.
பும்ரா உடைய பந்துவீச்சுடன், பார்ட்னர் முகமது சிராஜ் ஆட்டத்தின் நான்காவது ஓவரிலேயே இலங்கை அணியின் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, இறுதிப்போட்டியின் முடிவுரையை எழுதிவிட்டு, மேலும் இரண்டு விக்கட்டுக்களையும் வீழ்த்தினார்.
இவர்களுக்கு அடுத்து பந்து வீச வந்த மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்டியா தன் பங்குக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதியாக 15.2 ஓவர்களில் இலங்கை அணி வீரர்கள் ஆட்டமிழந்தனர்.
முகமது சிராஜ்
இந்த போட்டியில் முகமது சிராஜ் ஏழு ஓவர்களுக்கு 21 ரன்களைக் கொடுத்து, ஆறு விக்கெட்டுக்களைக் கைப்பற்றி மிகச்சிறந்த பந்துவீச்சாளரானார்.
இந்த ஆட்டத்தின் மூலமும், நியூசிலாந்து அணியுடன் இடம்பெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிறந்த பந்து வீச்சுப் பெறுபேற்றைப் பதிவு செய்ததன் பயனாகவும், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிறந்த பந்து வீச்சாளருக்கான பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இதற்கு முன்னர், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் முதலாம் இடத்தை நியூசிலாந்து அணியின் ட்ரன்ட் போல்ட் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது!
ஆட்டநாயகன் விருது பெற்ற முகமது சிராஜ் பேசும்பொழுது “....வேகப்பந்துவீச்சாளர்களிடையே நல்ல பிணைப்பு இருக்கும் பொழுது அது அணிக்கு உதவியாக மாறுகிறது. நான் பவுண்டரி கொடுக்கக் கூடாது என்ற நினைப்பிலேயே ஆட்டத்தைத் தொடங்கினேன்.
எனக்கு கிடைத்திருக்கும் ஆட்டநாயகன் விருதுக்கான பணத்தை மைதான ஊழியர்களுக்கு அன்பளிப்பாக்குகின்றேன். அவர்களின் தியாக உணர்வு இல்லாமல் இந்த போட்டி நடந்திருக்காது!” என்று கூறினார்!
ஹைதராபாத்தில் 1994, மார்ச் 13ம் திகதி பிறந்தவரான முகமது சிராஜின் தந்தை முகமது கயாஸ், தாய் ஷபானா பேகம் ஆவார்கள். மிகவும் எளிமையான குடும்பத்திலிருந்து வந்த முகமது சிராஜின் தந்தை ஹைதராபாத்தில் ஆட்டோ ஓட்டுநராக இருந்தவராவார்.
2021ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிலிருந்தபோது
அவரது தந்தை மரணமடைந்தார். அணியில் வேறு வேகப்பந்து வீச்சாளர் இல்லாத நிலையில், பொறுப்புணர்ந்து செயல்பட்ட சிராஜ், தனது தந்தையின் ஜனாஸா நல்லடக்கத்தை செய்யச் சொல்லிவிட்டு, ஆஸ்திரேலியா கோப்பையை வென்றுகொண்டு நாடுதிரும்பிவந்து, விமான நிலையத்திலிருந்து நேரடியாக தந்தையின் அடக்கஸ்தலம் சென்று துஆப் பிரார்த்தனை செய்தமை குறிப்பிடத்தக்கது!
முகமது சிராஜின் தந்தை முகமது கயாஸ், தாய் ஷபானா பேகம்
ஐசிசி 2023 உலக கோப்பைக்கு ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் நடைபெற்ற, ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இலங்கை அணியை வெறும் 50 ரன்களுக்கு all out செய்து சாம்பியன் பட்டத்தை, ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் 23 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பழிதீர்த்துள்ளது.
2000ம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்ற "கோகோகோலா சாம்பியன்ஸ் ட்றூபி" தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதிக்கொண்டான.
ஜெயசூரியா தலைமையில் இலங்கை அணி களமிறங்கியபோது, இந்திய அணிக்கு கங்குலி தலைமை வகித்தார்.
அந்தப் போட்டியில் கேப்டன் ஜெயசூர்யா முன் நின்று 161 பந்துகளில் 21 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உட்பட 189 ரன்களை விளாசித்தள்ளினார்.
இதனால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ரன்கள் சேர்த்தது.
300 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணியின் கங்குலி - சச்சின் இணைந்து களமிறங்கினர். ஆனால் கங்குலி 3 ரன்களிலும், சச்சின் 5 ரன்களிலும் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த யுவராஜ் சிங் 3 ரன்களில் ஆட்டமிழந்ததோடு, வினோத் காம்ப்ளி 3 ரன்களிலும், ஹேமங் பதானி 9 ரன்களிலும், விஜய் தாஹியா 4 ரன்களிலும், ராபின் சிங் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து வந்த அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தபோதிலும், ராபின் சிங் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்களைப் பெற்றார்.
இதனால் இந்திய அணி 26.3 ஓவர்களுக்கு 54 ரன்கள் எடுத்து all out ஆகியது.
இதன் மூலம் இலங்கை அணி 245 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது!
23 ஆண்டுகளுக்கு பின்
அன்று அடைந்த அவமானகரமான தோல்விக்கு, இந்திய அணி 23 ஆண்டுகளுக்கு பின், இலங்கை அணியிடம் சொந்த மண்ணில் வைத்தே பழிதீர்த்துள்ளது!
இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற நிலையில், தனக்கான பரிசுப்பணத்தை மைதான ஊழியர்களுக்கு வழங்கியுள்ள ஆட்ட நாயகன் சிறாஜை ரசிகர்கள் பல கோணங்களிலும் சமூகவலைத் தளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.
முகமது சிராஜுக்கு மஹிந்திரா நிறுவனம் தார் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தை பரிசாக வழங்கவுள்ளதாக பரவிய செய்திக்கு, நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமூக ஊடகமொன்றின் மூலம் தெரிவித்துள்ள கருத்தின்படி, மஹிந்திரா சார்பில் முகமது சிராஜுக்கு ஏற்கனவே தார் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம் வழங்கப்பட்டு விட்டதாக அறிய முடிகின்றது. கடந்த சில வருடங்களாக விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு மஹிந்திரா சார்பில் கார்கள் பரிசாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது!
ஆட்ட நாயகன் விருதாக இந்திய பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ், தனக்குக் கிடைத்த 5000 அமெரிக்க டாலர்களை மைதானத்தை மழை இடர்பாடுகளின் போது கடும்பாடுபட்டு தயார்படுத்திய மைதான ஊழியர்களுக்கே வழங்கியுள்ளமை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்!
ஐ. ஏ.ஸத்தார்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments