Ticker

6/recent/ticker-posts

சுய பெருமை!


கோலி விளையாடினேன்
பின்னந்தலையை தாக்கியது
சின்னச் சின்ன குட்டுகள்
கில்லி விளையாடினேன்
கை மணிக்கட்டினை
மிதமாக பதம் பார்த்தது
கில்லி குச்சி

பம்பரம் விளையாடினேன்
வரிவரியாய் 
கைகளை சிவக்க செய்தது
மூன்றாக மடிக்கப்பட்ட
பம்பரக் கயிறு

தூண்டிலால் மீன் பிடித்தேன்
பின்னங்கால்களில் 
விளையாடியது
உடையும் வரை
தூண்டில் கம்பு

சின்ன மனக்கசப்பு
எட்டி உதைத்தான் 
நண்பனொருவன் 
" அவங்கிட்ட ஏன் வம்புக்கு போன?"
இலவசமாய் கிடைத்தது
இன்னும் இரண்டு மிதி

கல்லெறிந்து விளையாடிய 
அண்ணன் ஒருவனால்
இடது புருவத்தினருகில்
இரத்தம் கசிந்தது 
" அவங்கூட ஏன் விளையாடப் போன?"
முதுகில் சப்தமிட்டு
விழுந்தன அடிகள்

மிதிவண்டி பழகி
தவறி விழுந்தேன் 
வீக்கம் கண்டது
வலது கன்னம்

" எம் மகன பார்த்தீங்களா?
ஊர் பசங்களோடு சேரமாட்டான்
எந்த வம்பு தும்புக்கும்
போகமாட்டான்
கெட்டப் பழக்கமே கிடையாது
நான் போட்ட கோட்ட
தாண்ட மாட்டான்
கட்டுப்பாட்டோடு 
வளர்த்திருக்கிறேன்
என் மேல அவ்வளவு மரியாதை"

சக நண்பர்களோடு
சுய பெருமை பேசுவார்
அடிக்கடி அப்பா

எனது எல்லைகளில்
இரகசியமாக வளர்ந்து
கிளை பரப்பி நிற்கிற
உச்ச பயத்தின்
உண்மை புரியாமல்...

ஐ.தர்மசிங்
நாகர்கோவில் 


 



Post a Comment

0 Comments