Ticker

6/recent/ticker-posts

ஆழ்கடலில் மர்ம தங்க முட்டை! ஏலியன் முட்டையா? ராக்கெட் பாகமா?


நமது கடல் பல மர்மங்கள் நிறைந்தது. அமெரிக்காவின் அலாஸ்கா கடற்கரை அருகே உள்ள கடலில் விசித்திரமான ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

 
அதாவது கடலுக்கு அடியில் தங்க முட்டை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தையும், அதேநேரத்தில் பல்வேறு குழப்பங்களையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த மர்மமான பொருள் என்னவென்று கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். வாருங்கள் அதுப்பற்றி விரிவாக இப்போது பார்க்கலாம்.

NOAA என்ற அமெரிக்க அரசின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் ஆழ்கடல் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து வருகிறது. இந்த அமைப்பு சார்பில் 48 ஆய்வாளர்களுடன் அலாஸ்காவிற்கு அருகிலுள்ள ஆழ்கடலை ஆராய்ச்சி செய்வதற்காக ஐந்து மாதங்கள் கப்பல் பயணம் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி அமெரிக்காவின் அலாஸ்கா வளைகுடாவில் உள்ள கடற்கரையில் ஆராய்ச்சி மேற்கொண்ட போது ஒரு தங்க நிற பொருளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அது வெள்ளை பாசிகளின் நடுவே தங்க நிறத்தில் முட்டை போன்ற வடிவத்தில், அதன் அடிபுறத்தில் துளையுடன் ஏதோ ஒன்று பாறையில் ஒட்டிக் கொண்டிருப்பதை அவர்கள் பார்த்துள்ளனர். பின்னர் அதை 6000 கிலோமீட்டர் ஆழம் சென்று படம் பிடிக்கக்கூடிய அதிநவீன அண்டர் வாட்டர் கேமராவை வைத்து ஜூம் செய்து பார்த்தும் கூட ஆராய்ச்சியாளர்களால் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒளிரும் அந்த கல்லுக்கு தங்க முட்டை என்று பெயரிட்டனர்.

இதன் பின்னர் விஞ்ஞானிகள் ரிமோட் மூலம் இயக்கப்படும் கையை பயன்படுத்தி விசித்திரமான தங்க முட்டையை (Golden Egg) அந்த பாறையில் இருந்து அகற்றி, அதன்பின்னர் ஒரு குழாய் மூலம் மேற்பரப்புக்கு கொண்டுவரப்பட்டது. இது பற்றி விவரித்துள்ள NOAA விஞ்ஞானிகள், தங்க நிறத்தில் இருக்கும் முட்டை வடிவிலான அதன் அமைப்பு பளபளப்பாக இருக்கிறது என்றும் தொடுவதற்கு மென்மையானது நமது தோல் திசுக்களை போன்றது எனத் தெரிவித்துள்ளனர்.

இதுப்பற்றி பேசியுள்ள தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக ஒருங்கிணைப்பாளர் சாம் கேண்டியோ கூறுகையில், "ஆழ் கடல் என்பது மகிழ்ச்சிகரமானது மற்றும் விசித்திரமானது என்றும், எங்களால் தங்க உருண்டையை சேகரித்து கப்பலில் எடுத்து வர முடிந்தாலும், அது ஒரு உயிரினம் என்பதை தாண்டி வேறு எதையும் எங்களால் அடையாளம் காண முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தான் சோசியல் மீடியாக்களில் பேசு பொருளாக உள்ளது. சிலர் இது ஏலியன் முட்டையாக இருக்கலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர், மற்றும் சிலரோ இது ராக்கெட்டில் இருந்து விழுந்த பாகம் என்று கூறி வருகின்றனர்.

இதே வேளையில், இந்த விசித்திர தங்க முட்டை இதுவரை அறியப்படாத புதிய உயிரினமா அல்லது ஏற்கனவே உள்ள ஒன்றின் அறியப்படாத வாழ்க்கை நிலையை குறிக்கிறதா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் அதன் மர்மங்களை வெளிக்கொணரும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கூடிய சீக்கிரம் இதற்கு விடை கிடைக்கும் என்பதை நம்பலாம்.

Source:zeenews


 



Post a Comment

0 Comments