Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!


மறைந்த தலைவர் எம் எச் எம் அஷ்ரஃப் அவர்கள் கட்சியைப் பலப்படுத்துவதற்கு என்ன செய்தாரோ அதைப் பின்பற்றப் போவதாக மறைந்த தலைவரின் இருபத்து மூன்றாவது நினைவேந்தலில் சபதம் எடுத்திருக்கிறது தற்போதையத் தலைமை. 

 

கட்சிக்கு எதிரிகள் என்று யாரும் இருக்கக் கூடாது அனைவரையும் கட்சிக்குள் உள்வாங்க வேண்டும் என்று 23 வருடங்களுக்கு முன்னர் தலைவர் செய்த விடையங்களைக் 'கையில் இருந்த பூனைகளை எல்லாம் சிதறி ஓட விட்டு விட்டு "பேஸ்.... பேஸ்...." என்கின்ற கதையாக' ஆரம்பித்திருக்கின்றார் தற்போதையத் தலைவர். "கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்"

கட்சியின் ஸ்தாபகத் தலைவர் சென்று அழைத்தபோது மறுப்புக் கூற முடியாமல்  மற்றவர்கள் கட்சியில் இணைந்து கொண்டார்கள் என்றால் அது முன்னாள் தலைவரின் தலைமைத்துவத்திற்கும், ஆளுமைக்கும், அவர் செய்து காட்டிய அரசியலுக்கும் சான்று. ஆனால் நீங்கள் செய்கின்ற அரசியலுக்குப் பின்னால் அவ்வாறே எல்லோரும் ஓடி வந்து இணைந்து கொள்வார்கள் என்று நினைத்தால் அது வெறும் பகற்கனவு. 
முன்னாள் தலைவர் உயிரோடு இருந்தபோது அந்தத் தலைவருக்கு நிகரான ஆளுமையாகக் கட்சியின் தவிசாளராக இருந்த  சேகு இஸத்தீன் கட்சியில் இருந்து பிரிந்து சென்று உருவாக்கிய தராசுச் சின்னக் கட்சியானது அக்கரைப்பற்றைத் தாண்டி ஒரு அங்குலம் கூட வளர முடியாமல் திக்கு முக்காடிச் சிதைந்து போனது அன்றைய வரலாறு. அதுதான் மறைந்த தலைமை கட்சியை வலுப்படுத்திய முறைமை. 

ஆனால் 12 ஆசனங்களோடு தற்போதையத் தலைவரிடம் கையளிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது இன்று உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதையாக 5 ஆசனங்களுடன் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சி என்று மார் தட்டிக் கொள்கின்றது. 

தற்போதையத் தலைவர் ஆவேசமாகப் பேசுகின்ற போது இந்த கட்சி தன்னிகரில்லாப் பெருந்தலைமை அஷ்ரஃப் அவர்களைத் தலைமையாகப் பெற்ற கட்சி அந்தக் கட்சியை மலினப்படுத்தவோ சிறுமைப்படுத்தவோ சீரழிக்கவோ எவராலும் முடியாது என்ற நம்பிக்கையுள்ள போராளிகள் இருக்கும் வரை இந்தக் கட்சியை யாரும் அசைக்க முடியாது என்று சூழுரைத்தார். (பாவம் அந்தப் போராளிகள்)உண்மையில், மாபெரும் மக்கள் இயக்கமாக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மலினப்படுத்தியதும் சிறுமைப்படுத்தியதும் சீரழிவுக்கு உள்ளாக்கியதும் தற்போதைய தலைவர் அன்றி வேறு யாருமில்லை. 

கட்சிக்குள்ளே இருக்கின்ற உறுப்பினர்களுக்கிடையில் ஏதாவது மனக்கசப்பு முறுகல் ஏற்பட்டதை அறிந்தால், பகிரங்கமாக மேடையிலே இருவரையும் ஏற்றி ஒருவருக்கொருவர் முஸாபஹா செய்து கொள்ள வைத்து, அம்முறுகலுக்கு அந்த இடத்திலேயே முற்றுப்புள்ளியிட்டு, ஒற்றுமையே கட்சியின் முதற்பலம் என்ற உண்மையைப் பறைசாற்றும் அழகிய முன்மாதிரியைக் காட்டித்தந்த பெருந்தலைமையின் கட்சி இன்று குரங்கின் கைப்பூ மாலையாகிச் சிதறுண்டு, சிதைவடைந்து போனதற்கு சுயநலம் பிடித்த, பொறுப்பற்ற தற்போதைய தலைமை அன்றி வேறு யாரும் காரணம் அல்ல. 

பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, உணர்ச்சிக் கீதங்கள் பாடி, மறைந்த தலைமையின் முகவரியை விற்று, கிழக்கு மக்களை மடையர்களாக்கி வாக்குச் சம்பாதித்துக் கொண்டு அரசியல் வியாபாரம் செய்கின்ற தலைமையிடம் எப்போது இந்தக் கட்சி கையளிக்கப்பட்டதோ அன்றிலிருந்து 23 வருடங்கள் சிறிது சிறிதாகச் சிதைக்கப்பட்டு சின்னாபின்னப்பட்டுப் போய் நிற்கின்றது. 

ஒரு பேரியக்கத்தில் இருந்து; எதிர்க் கேள்வி கேட்காமல், சமூகம் பற்றி பேசாமல் தலைமை செய்கின்ற வியாபாரத்திற்கு ஒத்தூதுபவர்களை மட்டும் தன்னகத்தே வைத்துக்கொண்டு மற்ற அனைத்து ஆளுமைகளும் உதிர்ந்து போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, இன்று மக்கள் விழித்துக் கொண்டார்கள் என்று தெரிந்த பின் அனைவருக்குமாகக் கட்சியின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன என்று வேதாந்தம் பேசுவது அருவருப்பைத் தருகின்றது.

இன்னமும் மறைந்த தலைவரின் முகத்தை காட்டி மக்களை ஏமாற்றி விடலாம் என்று தற்போதையத் தலைவர் எண்ணிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அவரது உரையே சாட்சி. 

முஸ்லிம் சமூகத்தின் இருப்பு, பாதுகாப்பு, முன்னேற்றம், ஆரோக்கியமான எதிர்காலம் போன்றவற்றை இலக்காகக் கொண்டு இப்பாரிய மக்கள் இயக்கத்தை உருவாக்கித் தந்த பெருந்தலைவரின் நினைவேந்தலில், முஸ்லிம் சமூகம் தொடர்பாகப் பேசுவதற்கு எவ்வளவோ விடயங்கள் இருந்தும், இன்று முஸ்லிம் சமூகம், குறிப்பாக கிழக்கு முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு எத்தனை விடயங்கள் இருந்தும், அவைபற்றி வாயே திறக்காமல், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து எந்தப் பிரகடனங்களும் செய்யப்படாமல்,
வெறுமனே திகாமடுல்ல மாவட்டத்தில் எதிர்வருகின்ற தேர்தலில் கட்சிக்கு மூன்று ஆசனங்களைச் சேர்ப்பதை மட்டும் இலக்காக வைத்துப் பெருந்தலைவரின் நினைவேந்தல் நிறைவேறியதை என்னவென்று கூறுவது?

மஹ்ஷரில் இவர் மறைந்த தலைவரைச் சந்திக்கும் காட்சி எப்படி இருக்கும் என எண்ணிப் பார்க்கின்றேன்.

முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றைப் பெருந்தலைவர் அஷ்ரஃபுக்கு முந்திய காலம் அஃஷ்ரபுக்கு பிந்திய காலம் என்று பிரிக்கலாம் என்றும், அப்பேர்ப்பட்ட மாமனிதரைத் தலைவராக கொண்ட கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்றும் அந்தக் கட்சியை பலப்படுத்த மறைந்த தலைவர் அன்று என்ன செய்தாரோ அதை இன்று செய்ய வேண்டும் என்று வெட்கம் இன்றிப்  பேசுகின்றார். 

இரத்தம் சிந்தி, தலைவர் உட்படப் பல உயிர்களைத் தியாகம் செய்து வளர்க்கப்பட்ட கட்சியைச் சுயநலத்திற்காகச் சீரழித்துவிட்டுக் குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றிப் பேசிக்கொண்டிருக்கின்றார். நாமும் கேட்டுக்கொண்டு வாழாவிருக்கின்றோம்.

தலைவர் மரணித்து 23 ஆண்டுகள் கடந்தும், அந்தத் தலைவரை விற்றே அரசியல் பிழைப்பு நடத்த வேண்டி இருப்பது தற்போதைய தலைவரின் வங்குரோத்து நிலை அன்றி வேறு என்ன? 

வெறும் பத்து பதினைந்து வருடங்களில் மக்களுக்கான பேரியக்கம் ஒன்றை ஆரம்பித்து வழிநடத்தி அதில் உச்சம் தொட்டு, பாராளுமன்றத்தில் 12 ஆசனங்களைத் தமதாக்கிக்காட்டி, அகால மரணம் எய்திய தலைமையின் முதுசொமாகத் தனது கையில் கொடுக்கப்பட்ட இப்பேரியக்கத்தை 23 ஆண்டுகள் அப்பம்தட்டிக் கூளாக்கிவிட்டுத் தான் செய்த சாதனை என்று எதையும் கூற வக்கில்லாமல் இன்னும் பெருந்தலைமையை வைத்துப் பிழைப்பு நடத்த எத்தனிப்பது எம்மை மூடர் கூட்டம் என்று எண்ணிக் கொண்டால் அன்றி எப்படி சாத்தியமாகும்? 

பசப்பு வார்த்தைகள் பேசி மக்களை மாக்களாக மாற்ற முயற்சிக்கின்ற இவரது ஏமாற்று வித்தைகள் இன்னும் எத்தனை நாள் அரங்கேறுமோ?

சட்டத்தரணி 
ஷிபானா ஷரீபுத்தீன்


 



Post a Comment

0 Comments