'மாபேரிய' என்பது மாத்தளை மாவட்டத்தின், உக்குவலைப் பட்டணத்திற்கு அருகாமையில் காணப்படும் மிகப்பழைமையான ஒரு முஸ்லிம் குடியேற்றமாகும்.
சுமார் ஐந்து நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்ட உக்குவலைப் பிரதேசத்தில் அக்காலமுதல் மாபேரிய, பறகஹவெல, மானம்பொட, ரைத்தலாவல ஆகிய கிராமங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
நான் பிறந்ததும், ஆறு வயதாகும் வரை வாழ்ந்ததும், 'மாபேரிய' என்ற சிற்றூரிலாகும். இதற்குள் இணைந்த சிறு கிராமமாக திகனச்சேனை அடையாளப் படுத்தப் படுகின்றது.
14ம் நூற்றாண்டில், துருக்கியிலிருந்து வந்த நான்கு குடும்பத்தினர் உக்குவலைப் பிரதேசத்துக்கு வந்தபோது, ஒரு குடும்பம் மட்டும், 'மாபேரிய' என்ற இடத்தில் தங்கிவிட்டதாகவும், மற்ற மூன்று குடும்பத்தினரும் மானாம்பொடை, வரக்காமுறை, கோட்டகொடை ஆகிய மூன்று இடங்களிலும் குடியேறியதாகக் கூறப் படுகின்றது.
மாபேரிய கிராமத்தின் எல்லைகளாக, கிழக்கே தெஹிதெனிய கிராமமும், மேற்கே மானாம்பொடையும், தெற்கே கல்லோயாவும் வடக்கே மாருக்கொன என்ற கிராமமும் உள்ளன.
"மாபேரி" என்பது துருக்கிய மொழியில் "சுத்தமான நீர்" என்ற பொருள்படுவதாகும்.
எனது பாட்டி துருக்கிய சாயல் கொண்டவராக இருந்ததை என்னால் இப்போது நினைவுக்குக் கொண்டுவர முடிகின்றது! அன்னாரது உருவத்தையும், அழகிய பொன்னிற மேனியையும் கொண்டு, அவரின் பூர்வீகம் துருக்கியாக இருக்கலாமோ என்று இப்போதுதான் எனக்குள் ஓர் எண்ணம் துளிர்விடுகின்றது.
கி.பி. 1762ம் ஆண்டு கண்டி மன்னன் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனைச் சந்திக்க வந்த ஆங்கிலேயத் தூதுவரான ஜோன் பைபஸ் தான் கண்ட கிராமங்கள் பற்றி குறிப்புக்களை எழுதியுள்ளதாகவும், அதிலிருந்து இப்பாரிய பிரதேசம் குறைந்த சனத்தொகை உடையதாகவே இருந்ததாகவும்,விரல் விட்டு எண்ணக்கூடிய ஓலைக் குடிசைகள் மாத்திரமே இங்கு காணப்பட்டதாகவும், கற்சுவர் கொண்ட ஒரு வீடாவது இங்கு இருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளதாகவும், தான் தங்குவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த வீடு, 'கேவலமான, அசுத்தமான ஓலை வேயப்பட்ட ஒரு குடிசை" எனவும் அவர் விவரித்துள்ளதாக, இணையப் பதிவொன்றில் மாபேரிய கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது அக்ரம் என்பவர் குறிப்பிடுகின்றார்.
(John Pybus, a member of the Madras Council, was dispatched on an embassy to Kandy, in view of the future action.The Englishman who arrived in Kandy and met the king in 1762 AD.)
தொடர்ந்து வந்த காலங்களில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து விரட்டப்பட்டு மலையகப் பகுதியை நாடிவந்த முஸ்லிம்களுட் சிலரும் 'மாபேரிய'ப் பகுதியில் தமது குடியேற்றங்களை அமைத்துக் கொண்டதால் இங்கு மக்கள் தொகை மெல்ல மெல்ல அதிகரிக்கலானது.
மாத்தளை உப-ராஜியத்தின் அரசனான 'விஜயபாலா' காலத்தில் மாபேரிய பள்ளிவாசல், 'மாருக்கொன முதியான்ஸே' என்பவரால் கட்டப்பட்டதாகக் கூறும் அக்குறிப்பில், மானாம்பொடையில் அவரால் குளமொன்றும் வெட்டப்பட்டதாகவும், 1635ம் ஆண்டில் அவரது தந்தை சேனரத்தின் மரணத்திற்குப் பிறகு, மாத்தளை உபராஜியத்தின் அரசனான விஜயபாலாவின் ஆட்சி குறுகிய காலமே நீடித்ததாகவும் தகவல் தரும் முஹம்மது அக்ரம், இவ்வாறு உக்குவலைப் பிரதேசத்துக்கு வந்து குடியேறியவர்கள் வியாபாரத்தில் ஈடுபடக் கூடிய அளவிற்கு இப்பிரதேசம் வளர்ச்சியடைந்திருக்கவில்லை என்றும் குறிப்பிடுகின்றார்!
அதனால், மாபேரிய, பரகஹவெல, மானாம்பொட, மாருகொன, நிதுல்கஹ கொட்டுவ, ரைத்தலாவெல, வரக்காமுறை போன்ற கிராமங்களில் சுதுகங்கை நீர் வசதியை அடிப்படையாக வைத்தும், 'மாருக்கொன முதியான்ஸே' என்பவரால் வெட்டப்பட்ட குளத்து நீரைக் கொண்டும் அவர்கள் விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்தனர் என்று கருதமுடிகின்றது!
எனது சிறு பிராயத்தில் இப்பிரதேசம் முழுவதிலும் பெருந்தோட்டப் பயிர்களான தேயிலை, இறப்பர், கோப்பி, கொக்கோ செழித்து வளர்ந்திருந்ததைப் பார்த்திருக்கின்றேன்.
1815ம் ஆண்டு ஆங்கிலேயர் இலங்கை முழுவதையும் தமது கைக்குள் கொண்டு வந்தனர். அவர்களது வருகைக்குப் பின்னர் நாடு முழுவதிலும் பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டு, ஏற்றுமதிப்பயிர்கள் பயிரிடப்பட்டன.
அந்த வகையில், இப்பகுதிகளிலும் பெருந்தோட்டங்களை உருவாகி, ஏற்றுமதிப் பயிர்கள் பயிர் செய்யப்படலாயின!
கிராமத்து மக்கள் கோக்கோ, கோப்பி போன்ற பயிர்களைத் தமக்குரிய சிறு காணித் துண்டுகளில் நட்டி, ஜீவனாம்சத்தைத் தேடிக்கொள்ள ஆரம்பித்தனர்.
எனது பாட்டிக்குச் சொந்தமாக இருந்த திகனச்சேனைக் காணியிலும், அதனைச் சுற்றியிருந்த காணிகளிலும் கொக்கோ மற்றும் கோப்பி மரங்கள் செழித்து வளர்ந்திருந்ததை நான் பார்த்துள்ளேன்!
அதிகாலையில் எழுந்து, அட்டை வராதிருக்க கால்களுக்கு சவர்க்காரமிட்டுக்கொண்டு, தோட்டத்துக்குள் சென்று கொக்கோப் பழங்களைத் தேடிப்பிடித்துப் பறித்துவந்து, வீட்டில் ஒரு பகுதியில் குவித்து வைத்து, நேரம் கிடைக்கும்போது, அவற்றிலிருந்து விதைகளை வேறாக்கி வெய்யிலில் காயவிடுவதை அவர் தனது தினசரி
வேலைகளில் ஒன்றாகக் கொண்டிருந்தார். ஆங்காங்கே வளர்ந்திருந்த கோப்பி மரங்களிலும், முதிர்வடைந்துவரும் கோப்பிக் காய்களைப் பறித்து, தோல் நீக்கிக் காயவிட்டுப் பணமாக்கிக் கொள்வதையும் எனது பாட்டனும், பாட்டியும் தமது ஜீவனோபயத் தொழிலாகவே கொண்டிருந்தனர். இவ்வாறே அப்பகுதியில் ஏனையவர்களும் கொக்கோ, கோப்பிப் பயிர்களை நட்டி, தமது வாழ்வாதாரத்தைத் தேடிக் கொண்டனர்! தற்போது இப்பகுதிகளில் கொக்கோ கோப்பி மரங்களைக் காண்பது மிகவும் அரிதாக உள்ளது.
இது தவிர, மனாம்பொடை, மாருக்கொனைப் பிரதேசங்களில் இறப்பர் தோட்டங்களும், தேயிலைத் தோட்டங்களும் செழிப்பாக வளர்ந்திருந்ததையும் நான் பார்த்திருக்கின்றேன்.
கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டு, கி.பி. 1814ம் ஆண்டில் உக்குவலை பிரதேசம் முழுவதிலும் மொத்தமாக 130 முஸ்லிம்களே வாழ்ந்துள்ளனர்.
1891ம் ஆண்டு 'மாபேரிய' கிராமத்தில் மட்டும் 30 ஆண்களும், 23 பெண்களுமாக மொத்தம் 53 பேர்களும், நிதுல்கஹகொட்டுவ கிராமத்தில் 8 ஆண்களும் 25 பெண்களுமாக மொத்தம் 33 பேர்களும் வாழ்ந்துள்ளதாக, முஹம்மது அக்ரம் தான் திரட்டிய தகவல்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தவகையில், சுதந்திரத்துக்குப் பின்னர், பிரித்தானியர் மெல்லமெல்ல நாட்டை விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்படவே, அவர்களுக்குச் சொந்தமான பெருந்தோட்டங்களை உள்நாட்டில் பணம் படைத்தோர் வாங்கலாயினர்!
உக்குவலைப் பிரதேசத்து இறப்பர் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள் காஸீம் ஹாஜியார் என்பவர் வாங்கி, மாருக்கொனைத் தேயிலைத் தோட்டம், தேயிலைத் தொழிற்சலை, இறப்பர் தோட்டம் என்வற்றை 1953ம் ஆண்டில் தான் இறக்கும் வரை தனது பராமரிப்பிலேயே வைத்திருந்தார்.
ஹனீபா ஹாஜியார்
அதன் பின்னர், கல்ஹின்னையில் பிறந்து, வளர்ந்த ஹனீபா ஹாஜியார் என்ற அவரது மகன் இவற்றின் நிர்வாகப் பொறுப்புக்களை ஏற்றுள்ளார்.
1950ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி முதல் 1953ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி வரை வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையில் இடம் பெற்றுவந்த
போர் காரணமாக, இறப்பர் விலை உயர்ந்தபோது, இறப்பர் தோட்டங்கள் இலங்கை முழுவதிலும் பொன்கொழிக்கும் பூமிகளாக மாறவே, ஹனீபா ஹாஜியார் அபரிதமான வருமானத்தை ஈட்டி, பிரதேசத்தில் பெரும் செல்வந்தராக மாறியுள்ளார்.
1932ம் ஆண்டு பிறந்துள்ள ஹனீபா, மாத்தலையில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்று, கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பொற்காலமான, 1952ம் ஆண்டில் கல்லூரியின் சிறந்த மாணவனுக்கான உயர் விருதினைப் பெற்றபோதிலும், தந்தையாரின் இறப்பிற்குப்பின் தோட்டங்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தத்தினால், தனது படிப்பைத் தொடர முடியாத நிலைக்கு ஆளானார்.
ஹனீபா ஹாஜியார் பெருந்தோட்டங்களை நிர்வகித்துக் கொண்டே அரசியலிலும் ஈடுபட்டவறாவார். சுமார் 20 ஆண்டுகள் அவர் மாத்தலை மாநகர சபையில் அங்கம் வகித்துள்ளபோதிலும், அரசியலில் அவர் தோல்விக்கு மேல் தோல்விகளையே கண்டுள்ளார்.
உக்குவலை குறுனவெல அக்கிரபோதி விஹாரைக்கு இரண்டரை ஏக்கர் நிலமும், மாருக்கொனை ஜும்ஆப் பள்ளிவாசலுக்கான நிலமும், ஹிந்து கோவில்களுக்கான பல்வேறு உதவிகளையும் அவர் செய்துள்ளதாகவும், மாத்தலை ஸாஹிராக் கல்லூரிக்கு 13 வகுப்பறைகள் கொண்ட 220 அடி நீளமான கட்டடத் தொகுதி ஒன்றை "காஸீம் மண்டபம்" என்ற பெயரில் இவரே கட்டிக் கொடுத்துள்ளதாகவும், 'கவிஞர் சுபைர் நினைவு மலர்' என்ற நூலில், முன்னாள் அதிபரான அல்ஹாஜ் ஏ. ஏ .எம். புவாஜி அவர்கள் எழுதுகின்றார்.
ஏதோ ஒரு காரணத்தால் தீப்பிடித்து எரிந்த மாருக்கொனைத் தேயிலைத் தொழிற்சாலை, இன்றுவரை இயங்காமல் இருப்பதைக் காண முடிகின்றது. இன்று தொழிற்சாலைச் சுற்று வட்டாரத்திலும், பிரதேசத்திலிருந்த பெருவாரியான தேயிலைத் தோட்டங்களிலும் வீடுகள் கட்டப்பட்டு, குடியேற்றங்களாக மாறியுள்ளதைக் காண முடிகின்றது!
ஒரு காலத்தில் பெருந்தோட்டகளாக இருந்த நிலங்கள், இப்போது குடியிருப்பு நிலங்களாக மாறிவருவது இந்நாட்டின் பொருளாதாரத்துக்கு ஒரு சவாலாக அமைந்துவிட்டது! ஏற்றுமதி வருவாய் குறைந்ததால் இன்று நாடு அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை எவரும் மறுக்க முடியாது!
ஐ. ஏ. ஸத்தார்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments