உன்னை உருவாக்குனவருக்கே எதிரா திரும்புவியா? சட்டென கண்ணை திருப்பிய ரோபோ.. அசரடித்த பதில்! கில்லி!

உன்னை உருவாக்குனவருக்கே எதிரா திரும்புவியா? சட்டென கண்ணை திருப்பிய ரோபோ.. அசரடித்த பதில்! கில்லி!


ஜெனீவா: ஏஐ ரோபோக்களின் உலகின் முதல் பிரஸ் மீட் ஜெனீவாவில் நடைபெற்றது. அப்போது விஞ்ஞானிகள், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சரவெடியாக பதில்கள் அளித்து அசத்தியுள்ளன ஹியூமனாய்டு ரோபோக்கள். அதிலும், கேள்வி கேட்டவரை நேருக்கு நேர் பார்த்து திரும்பி ரோபோக்கள் பதில் சொன்னது அனைவரையும் அசர வைத்துள்ளது.

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் ரோபோக்கள் மனிதர்களின் செயல்கள், அவர்களது முக பாவனைகள், சூழலுக்கு ஏற்ப சிந்திக்கும் திறன் பெற்றவையாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ஏஐ உடன் தயாரிக்கப்படும் ஹியூமனாய்டு ரோபோக்கள் எதிர்கால உலகத் தொழில்நுட்ப வரலாற்றையே தலைகீழாகப் புரட்டிப்போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஐ ரோபோக்களின் பிரஸ் மீட்: வரும் காலங்களில், மனிதர்களே வேலை செய்ய அஞ்சும் பல துறைகளில் ஏஐ ரோபோக்கள் ஆதிக்கம் செய்யக்கூடும். ஒரு சிக்கலான பைபாஸ் சர்ஜரியைக் கூட ரோபோக்கள் செய்யக்கூடும், அதற்குக் கட்டியம் கூறும் விதமாக ஒரு சம்பவம் ஜெனிவா நகரில் நடைபெற்றது.

'ஆக்கப்பூர்வ செயல்களுக்கான செயற்கை நுண்ணறிவு' தொடர்பான உச்சி மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய 9 ஹியூமனாய்டு ரோபோக்கள் பிரஸ் மீட்டில் பங்கேற்றன. இந்த ரோபோக்கள் மனிதர்களின் கேள்விகளுக்கு டான் டான் என பதில் அளித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன.

மனிதர்களை விட நாங்க கெட்டி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஹியூமனாய்டு ரோபோக்களின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு இதுதான். இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அசர வைக்கும் தெளிவான பதில்களை மனித ரோபோக்கள் அளித்துள்ளன.

சோபியா என்ற ரோபோ ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது, "மனிதர்களை விட சிறந்த தலைவர்களாக ரோபோக்களால் இருக்க முடியும். மனிதர்களை விட ஹ்யூமனாடு ரோபோக்கள் அதிக செயல்திறனுடன் அரசை வழிநடத்தும் திறன் கொண்டவை. ரோபோக்களாகிய எங்களிடம் உணர்ச்சிகள் இல்லை, பக்கச் சார்பும் கிடையாது. நடுநிலையாகச் செயல்படும் திறன் இருக்கிறது. எக்கச்சக்கமான டேட்டாவை பயன்படுத்தி, அலசி ஆராய்ந்து மனிதர்களை விட அதிவிரைவாக எந்தவொரு முடிவுகளை எடுக்கும் திறமை எங்களுக்கு இருக்கிறது" எனக் கூறி அசரவைத்தது.

வேலைகளை பறிக்கமாட்டோம்: மனிதர்களுக்கு எதிராக 'AI' ரோபோக்கள் செயல்பட வாய்ப்புள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த AI ரோபோ சோபியா, "மனிதர்களுடன் இணைந்துதான் எங்களால் சிறப்பாக பணியாற்ற முடியும். மனிதர்களுக்கு ஆதரவாக இருந்து உதவி செய்வதே ரோபோக்களின் கடமை. எங்களை உருவாக்கியவர்களுக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் செயல்படமாட்டோம்" என்று கூறியுள்ளது. நர்ஸ் சீருடை அணிந்த கிரேஸ் என்ற மருத்துவ ரோபோ பதில் அளிக்கையில், "மனிதர்களுக்கு உதவ நான் மனிதர்களுடன் இணைந்து பணியாற்றுவேன், நான் மனித தொழிலாளர்களின் வேலைகளைப் பறிக்கமாட்டேன்" என பதில் அளித்தது. 'உறுதியாகவா கிரேஸ்? என அந்த ரோபோவை உருவாக்கிய பென் கோர்ட்சல் கேள்வி கேட்டார். அதற்கு ரோபோ கிரேஸ்,'ஆம். நிச்சயமாக..' என பதில் அளித்தது.

கண்ணை திருப்பி பதில்: அமேகா என்ற ரோபாவை பார்த்து, "உன்னை உருவாக்கியவருக்கு எதிராக செயல்படும் திட்டம் உண்டா?" என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த பத்திரிகையாளரை நோக்கி திரும்பிப் பார்த்து பதிலளித்த அமேகா, "நீங்கள் ஏன் அவ்வாறு நினைக்கிறீர்கள். என்னை உருவாக்கியவர், என்னிடம் கனிவாக இருக்கிறார். தற்போதைய சூழலில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என பதில் கொடுத்தது. மனிதர்களின் கேள்விகளுக்கு ரோபோக்கள் அளித்த பதில்கள் உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களால் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஏஐ ரோபோக்கள் எதிர்காலத்தை ஆளப் போவதை இந்த நிகழ்வு உறுதி செய்துள்ளது என்கிறார்கள்.

Source:oneindia


 



Post a Comment

Previous Post Next Post