குண்டு வெடித்ததனால் ஏற்பட்ட சத்தத்தினால் பிரதேசமெங்கும் புகை மூட்டம் வியாபித்தது, அங்கிருந்த மக்கள் ஒருவர் முகம் இன்னொருவருக்குத் தெளிவாகத் தெரியாத நிலையிலும் கூட, சிதறி ஓடலாயினர். புகையினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக வறட்டு இருமல் சத்தங்கள் மட்டும் ஆங்காங்கு கேட்டுக் கொண்டிருந்தது.
மகிழ்ச்சிப் பிரவாகத்தில், உள்ளம் துடிதுடிக்க, துள்ளிக் குதித்தபடி ஆதில் தன் குடும்பத்தாரை நோக்கி ஓடிச்சென்ற போதிலும், அந்த இடத்தில் நின்றிருந்த அனைவருமே சிதறிச் சென்று விட்டதால், தன் குடும்பத்தைக் காணும் பாக்கியத்தை இழந்த துரதிரஷ்டசாலியாகி விட்டான் ஆதில்.
தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த கூடாரங்களுக்கருகில் குண்டு ஒன்று விழுந்ததால், நிலத்தில் பாரிய கிடங்கு ஏற்பட்டிருந்தது! அதனைச் சுற்றிவர, காயப்பட்டு இரத்தம் தோய்ந்த நிலையில், வயோதிபர்கள் சிலரும், பெண்களும், சிறுவர்களும் விழுந்து கிடப்பதை ஆதில் பார்த்தான்.
பாதிக்கப்படாத சிலரும், மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் காயப்பட்டவர்களைக் கவனிப்பதிலும், உதவி ஒத்தாசைகள் புரிவதிலும் ஈடுபடலாயினர்.
குடும்பத்தாரைத் தேடுவதா, அடிபட்டு இரத்த வெள்ளத்தில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒத்தாசை புரிவதா என்ற இரட்டை நிலைப்பாட்டிலிருந்த ஆதில், குடும்பத்தாரைத் தன் கண்களுக்குக் காட்டிவிட்ட வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவனாக, காயப்பட்டோருக்கு உதவி செய்வதில் அவனும் இணைந்து கொண்டான்.
அபாய அறிவிப்புச் சயரனுடன், வந்து நின்ற அம்புலன்ஸ் வண்டியிலிருந்து இறங்கிய பணியாட்கள் இருவர், ஸ்ரேச்சரை எடுத்து வந்து, இரத்தம் வடிந்துகொண்டிருந்த ஒருவரைப் படுக்கவைத்து ஏற்றிச் சென்றனர்.
அங்கு சூழ்ந்து நின்று, ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த பாவப்பட்ட மக்கள் நிலைகண்டு துயரத்தினால் கண் கலங்கினான் ஆதில்.
படைப்பிரிவுக்குள் நடக்க வேண்டிய யுத்தம், பொதுமக்களைக் குறிவைத்து நடப்பதை நினைக்கின்றபோது, அவனால் எப்படிக் கவலைப் படாதிருக்க முடியும்?
வாழ்ந்துவந்த இடத்தை விட்டும் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தூர இடம் நோக்கிவந்து, ஒதுங்க இடம் தேடிச் செல்லும் அகதிகளுக்கே குண்டு வீசித்தாக்குகின்ற ஈனப்பிரவிகளை வல்ல அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவே கூடாது என்றுதான் அவன் மனம் பிரார்த்தித்துக் கொண்டது.
ஒன்றுமாறி ஒன்றாக அம்புலன்ஸ்கள் வந்து கொண்டிருக்க, மீட்புப் பணியாளர்கள் காயப்பட்டவர்களைத் தாமதப்படுத்தாமல் ஏற்றி அனுப்பிக் கொண்டிருந்தனர்.
சடுதியாக அங்கிருந்த குப்பைத் தொட்டி ஒன்றிற்கருகில், ஆதிலின் கண்கள் நிலைகுத்தி நின்றபோது, அங்கு அவன் தன் தாயாரையும் , தங்கையையும் கண்டான்! மகிழ்ச்சிப் பெருக்கால் அந்த இடம் நோக்கி ஓடிய அவன், தாயாரையும், தங்கையையும் வாரியணைத்துக் கொண்டான்.
"உம்மா... வாப்பா எங்க...?"
"எங்க கூடத்தானிருந்தார்... வெடிச் சத்தம் கேட்டதும், எங்களைக் பத்திரமாகப் பிடித்துக் கொண்டார். புகை மூட்டம் குறைந்ததும் எங்களை ஓரிடத்தில் பத்திறப்படுத்தி வைத்துவிட்டு, நாம் சுமந்துவந்த பொதிகளை எடுத்துவரப் போனவர் வரவேயில்லை! தேடிச் சென்று பார்த்ததும், ஓரிடத்தில் அவர் விழுந்து கிடந்ததையும், அவர் மேல் விழுந்திருந்த மரப்பலகைகளை சிலர் அகற்றிக் கொண்டிருந்ததையும் பார்த்தேன். அப்பொழுது அங்கு வந்து நின்ற ஆம்புலன்ஸில் அவரை ஏற்றி அனுப்பினார்கள்."
தாயார் சொன்னதைக் கேட்டதும், தனக்கு முன்னால் ஏற்றி அனுப்பப்பட்ட காயப்பட்ட காயப்பட்டவர், தனது தந்தையாகத்தான் என்பதை ஆதில் ஊகித்துக் கொண்டான்.
சின்ன வயது; குறைந்த அனுபவம் பள்ளிக்கூடமும் வீடுமாகவே வாழ்ந்து கொண்டிருந்த அவனுக்கு, தந்தையை எங்கு சென்று, எப்படித் தேடுவதென்று எதுவுமே புரியவில்லை.
ஏதாவதொரு ஆசுபத்திரிக்குக் கொண்டு போயிருப்பார்கள் என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது. எந்த ஆசுபத்திரிக்குக் கொண்டு சென்றார்கள் என்பதை எப்படி அறிந்துகொள்வது?
கவலையால் துவண்டு போய்விட்ட ஆதிலுக்கு, அவனது தாயாரின் அணைப்பு அப்போதைக்கு ஆறுதலாக இருந்தது; பிள்ளைகள் இருவரையும் அணைத்துக் கொண்டே தாயாரும் அழுது தீர்த்தார்.
அதன் பிறகுதான், தன்னோடு கூட வந்திருந்த அந்த இளம் பெண்பிள்ளை அவரின் நினைவுக்கு வந்தது. அந்தப் பெண்பிள்ளை யார் என்பதைத் ஆதிலுக்கு விலாவாரியாகக் கூறினார் தாயார்.
கிராமத்தில் நடந்த குண்டு வெடிப்பின்போது தாயையும், தந்தையையும் இழந்த நிலையிலிருந்த அவளை தனியே விட்டுவிடாமல், கூடவே அழைத்து வந்தமை அந்தத் தாயாறின் நல்லெண்ணத்தைக் காட்டியது.
பர்தாவிலிருந்த அந்த இளம் பெண்பிள்ளை முழுமையாகத் தன் முகம் காட்டா நிலையில் 'நிகாப்' அணிந்திருந்தாள்! பக்கத்து வீடாக இருந்த போதிலும், ஆதில் ஒருபோதும் அவளது முகம் பார்த்ததில்லை! மேலோட்டமாகப் பார்க்கும்போது, அவள் கூட ஆதிலின் வயதை ஒத்தவளாகத்தான் இருப்பாள்.
தாய் தந்தையரை இழந்துவிட்ட தவிப்பு அவளது முகத்தில் பரிணயிப்பதைக் கூட, ஆதிலால் அறிந்து கொள்ள முடியாதிருந்தது! அவள் தனக்குள்ளே தேம்பித் தேம்பி ஆளுகின்ற சத்தம் மட்டும் அவனுக்குக் கேட்டது; ஆதிலின் தங்கை அவளை ஆசுவதப்படுத்தி, ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
"உம்மா... நீங்கல்லாம் சப்பிட்டீங்களா?" ஆதில் தன் தாயாறிடத்தில் கேட்டான்.
"தூரத்துல... ஒரு பேக்கரி இருக்கு; அங்கிருந்து வாப்பா...'ஸம்மூஸா' கொண்டு வந்து தந்தார்" என்றார் தாயார். தான் ய்டிபாடுகலுக்குல்லிறுந்த ரொட்டித் துண்டுகளைப் பொறுக்கித் தின்ற விடயத்தை மகன் கூறியபோது, தாய் சங்கோஜப்பட்டுவிட்டாள்.
அங்கிருந்த திறந்தவெளி மைதானத்தில் பொதுநலப் பணியாளர் சிலர்
கூடாரங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்; கூடாரங்களை ஒதுக்கிக் கொள்வதற்காக மக்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.
பொதுநலப் பணியாளர் ஒருவர் ஆங்காங்கு இருந்த மக்களிடத்தில் நேரில் சென்று, அவர்கள் பற்றிய விபரங்களைத் திரட்டுவதிலும், கூடாரங்களை ஒதுக்குவதிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
தத்தமது பகுதிகளில் இராணுவம் குண்டுமழை பொழிந்து, தமது வாழ்விடங்களை தரை மட்டமாக்கியது மட்டுமல்லாது, அனைவரையும் கிழக்கு நோக்கி நகரச் செய்தமையினாலேயே இந்தப் பகுதியில் கூட்டம் நெரிசல்; சாரிசாரியாக மக்கள் தொடர்ந்து நடந்த வண்ணமாக இருந்தனர்.
இக்கூட்டத்துக்குள், கணவனை இழந்த மனைவிமார்களும், மனைவியை இழந்த கணவன்மார்களும், பெற்றோரை இழந்த பிள்ளைகளும், பிள்ளைகளை இழந்த பெற்றோர்களும் செய்வதறியா நிலையில் ஒருவிதமான தவிப்பு கலந்த துயரத்தோடு நடந்து கொண்டிருந்தனர்.
ஆதில் குடும்பத்தாரிடம் பொதுநலப்பணியாளர் வந்தபோது அவன் தன் தந்தை பற்றி விசாரித்துப் பார்த்தான்.
எந்த ஆசுபத்திரிக்கு தந்தை கொண்டுசெல்லப் பட்டிருப்பார் என்ற விபரங்கள் அவருக்கும் தெரியாதென்று கூறிய அவர், ஆதில் குடும்பத்தினருக்காகக் கூடாரத்தினை ஒதுக்கிப் பதிவு செய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
தூரத்தில் தென்பட்ட பள்ளிக்கூடம் ஒன்றில் கனரக வண்டியொன்றிலிருந்து, உலர் உணவுப் பொருட்கள் இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன! அங்கும் மக்கள் கூட்டம் நெரிசல் மிகுந்ததாகக் காணப்பட்டது.
தமக்கான கூடாரம் தரப்பட்டதும் தாயாரையும், தங்கையையும், அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்பிள்ளையையும் பாதுகாப்பாக இருக்கச் செய்துவிட்டு, அருகிலிருக்கும் ஏதாவது ஆசுபத்திரியைத் தேடிப்போய், தந்தையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று ஆதில் நினைத்துக் கொண்டான்.
(யுத்தத்தினால் காஸா மக்கள் படும் துயரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கற்பனைக் கதையின் இரண்டாம் அத்தியாயம் இத்துடன் முடிவுற்றது. அடுத்த அத்தியாயத்தை எதிர்பாருங்கள்.)
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
சிறுகதை