Ticker

6/recent/ticker-posts

”பாலியல் புகாருக்கு உள்ளான கூட்டத்தைக் காப்பாற்றி பெண்ணினத்துக்கு துரோகம் செய்த பா.ஜ.க”: முரசொலி!

முரசொலி தலையங்கம் (26-12-2023)
பெண்ணினத் துரோகமும் பாலியல் நட்பும்

  • மல்யுத்தத்தில் இருந்து விடை பெற்று விட்டார் சாக்சி மாலிக்!
  • பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்து விட்டார் பஜ்ரங் புனியா!
  • பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது இதுவரை நடவடிக்கை இல்லை!
  • பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உதவியாளர் சஞ்சய் சிங் – இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் புதிய தலைவர் ஆகிவிட்டார்!
  • பாலியல் புகாருக்கு உள்ளான கூட்டத்தைக் காப்பாற்றி விட்டது பா.ஜ.க.!
  • இதன் மூலமாக பெண்ணினத்துக்குச் செய்த துரோகம் அம்பலமாகிவிட்டது!
  • பெண் ஷக்தி என்று பேசும் தகுதியை பா.ஜ.க. இழந்துவிட்டது!
இதைவிடக் கேவலம், மகாக்கேவலம், மகாமகா கேவலம் இருக்க முடியுமா?

ஒரே ஒரு தனிமனிதன்தான் பிரிஜ் பூஷன் சரண் சிங். அவரைக் காப்பாற்ற எவ்வளவு கேவலமான முடிவையும் எடுப்போம் என்றால் பா.ஜ.க. தலைமையின் மனதுக்குள் எந்தளவுக்கு அறமற்ற சிந்தனை அரங்கேறி இருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் நடந்தது.

2023 ஆம் ஆண்டு முடியப் போகிறது. 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த ஜனவரி 18 ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகட், சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் பா.ஜ.க. எம்.பி.யும், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினர். பிரிஜ் பூஷண் சிங்கும், பயிற்சியாளரும், தேசிய முகாமில் பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக வினேஷ் போகட் அழுதுகொண்டே கூறினார். மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினார்கள்.

ஊடகங்களில் இது பெரிதாக ஆனதும், வேறு வழியில்லாமல் ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தார்கள். இந்தக் குழுவை அமைப்பதற்கே ஒருவார காலம் ஆனது. இந்த குழுவின் தலைவராக மூத்த குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி.மேரி கோம் தேர்வு செய்யப்பட்டார். விசாரணையை நான்கு வாரங்களுக்குள் முடிக்குமாறு குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. குழு அமைக்கப்பட்டது ஜனவரி 23 ஆம் தேதி. அப்படியானால் பிப்ரவரி 23 ஆம் தேதிக்குள் குழுவின் அறிக்கை கொடுக்கப்பட்டு நடவடிக்கை பாய்ந்திருக்க வேண்டும். குழு தனது அறிக்கையைக் கொடுத்ததே தவிர, அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை பொதுவெளியில் சொல்லவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டம் நடத்தினார்கள்.

நேரடியாகவே, ஏப்ரல் 21 ஆம் தேதி, பிரிஜ்பூஷண் சிங்குக்கு எதிராக கனாட் பிளேஸ் காவல் நிலையத்திற்கு புகார் செய்ய மல்யுத்த வீராங்கனைகள் சென்றார்கள். ஆனால் போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை. ஏப்ரல் 23 ஆம் தேதி ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், வினேஷ் போகட் தலைமையில் மல்யுத்த வீரர்கள் இரண்டாவது முறையாக பிரிஜ்பூஷண் ஷரண்சிங்குக்கு எதிராக களமிறங்கினார்கள். அந்தப் போராட்டம் பல மாதங்கள் தொடர்ந்தது. பிரியங்கா காந்தி, போராட்டக் களத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். ஏன் வழக்கு பதியவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். உடனே, ஏப்ரல் 29 ஆம் தேதி பா.ஜ.க. எம்.பி. மீது டெல்லி கனோட் ப்ளேஸ் காவல் நிலையத்தில் இரண்டு எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டது. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மூத்த கிரிக்கெட் வீரர் கபில் தேவ், ஒலிம்பியன் அபினவ் பிந்த்ரா ஆகியோர் இந்த வீராங்கனைகளுக்கு ஆதரவு அளித்தார்கள்.

அதன்பிறகாவது விசாரணை முறையாக நடந்ததா என்றால் இல்லை. போக்சோ சட்டத்தில் பதியப்பட்ட வழக்கை வாபஸ் வாங்க வைத்துவிட்டார்கள். பா.ஜ.க. எம்.பி.யை கைது செய்யாமலேயே வழக்கு விசாரணை நடத்தி வருவதாக நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் பிரிஜ் பூஷன் சரண் சிங் ஆதிக்கம் தொடரவே செய்தது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவருக்கான தேர்தலில் பிரிஜ் பூஷன் சரண்சிங்கின் உதவியாளர் சஞ்சய் சிங் தேர்வாகி இருக்கிறார். இதை விட அசிங்கம் இருக்க முடியாது.

“நாங்கள் எங்கள் இதயத்தில் இருந்து போராடினோம். ஆனால் பிரிஜ் பூஷனின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங்கே இப்போது தலைவராக தேர்வாகி இருக்கிறார். இதனால் நான் மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன். நாங்கள் ஒரு பெண் தலைவராக வர வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை” என்று கண்ணீர் மல்கச் சொல்லி விட்டு தனது ஷூவை செய்தியாளர்கள் முன்னால் வைத்து விட்டு மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் வெளியேறி இருக்கிறார். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான பதக்கம் வென்று தந்தவர் இவர். 2009 முதல் பல்வேறு பதக்கங்களைப் பெற்றவர் இவர்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் புனியா. அவரும் மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார். “அன்புள்ள பிரதமரே! ஜனவரி மாதம் பிரிஜ் பூஷனுக்கு எதிராக 19 பேர் புகார் சொன்னார்கள். அந்த எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 7 ஆக குறைந்தது. 12 பேரை மிரட்டி விட்டார் பிரஜ் பூஷன். நாங்கள் போராட்டம் நடத்திய தளம் இடிக்கப்பட்டது. போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. நாங்கள் வென்ற பதக்கங்களை கங்கையில் வீச முடிவெடுத்தோம். இப்போது பிரஜ் பூஷனின் கூட்டாளியே தலைவராக வந்துவிட்டார். இந்த தேர்வால் நான் மல்யுத்தத்தை கைவிடுகிறேன். எனது பத்மஸ்ரீ விருதையும் திருப்பி ஒப்படைக்கிறேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். பெண் ஷக்தி என்று பேசும் தகுதியை பா.ஜ.க. இழந்துவிட்டது! இதைவிடக் கேவலம், மகா கேவலம், மகா மகா கேவலம் இருக்க முடியுமா?

kalaignarseithigal


 



Post a Comment

0 Comments