Ticker

6/recent/ticker-posts

323 சதுர அடியில் 2 BHK வீடு... நெட்டிசன்களை வியக்க வைத்த வைரல் வீடியோ


சொந்த வீடு என்பது ஒவ்வொரு சாமானிய மக்களின் பெரிய கனவு ஆகும். இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள் என்றால் தனியாக இடம் வாங்கி வீடு கட்டி விடலாம். ஆனால், மாபெரும் நகரங்கள் என்றால் அது தனி இடம் வாங்குவது என்பதெல்லாம் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்கள்.

அதிலும் நாட்டிலேயே டெல்லி, பெங்களூரு, மும்பை போன்ற மாநகரங்கள் விலையில் உச்சத்தில் இருப்பவை. இங்கு பல அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவது என்றாலே பெரும் கஷ்டம் தான். அப்படியே வீடு வாங்கினாலும் அது மிக சிறியதாகத்தான் இருக்கும். ஆனால், அதன் விலை மட்டும் மலையளவு இருக்கும்.

மும்பை மாநகரில் உள்ள வீட்டின் விற்பனை குறித்து சமூக வலைதளத்தில் சமீபத்தில் வெளியான விளம்பரமும் இதுபோலத்தான் இருக்கிறது. மும்பை காண்டிவாலி கிழக்குப் பகுதியில் உள்ள 23 மாடிக் கட்டடத்தில் இந்த 2BHK உள்ளது. வீட்டின் மொத்த பரப்பளவு 323 சதுர அடிகள் தான்.

அந்த வீட்டின் சிறப்பு அம்சங்கள் குறித்து இளம் பெண் ஒருவர் வீடியோவில் விவரித்துச் சொல்கிறார். பெட்ரூம் மிக சிறியதாகவும், கழிவறை ஒரு நபர் மட்டுமே நிற்கும்படியாகவும் மிக சிறிய அளவில் காணப்படுகிறது. ஆனால், வீட்டின் உள்ளரங்கு அழகு வேலைப்பாடுகள் சற்று தூக்கலாக செய்யப்பட்டுள்ளன.
இந்த வீடியோவை தினேஷ் என்ற நபர், எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். அவரது பதிவில், “மும்பை காண்டிவாலி கிழக்குப் பகுதியில் நீங்கள் 2BHK வீடு வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், உங்கள் கையில் 1BHK வீடு வாங்குவதற்கான பட்ஜெட் மட்டுமே இருக்கிறது என்றால், உங்களுக்கு இந்த வீடு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். ஏனென்றால் 1BHK பட்ஜெட்டிலேயே 2BHK வீட்டை நீங்கள் வாங்கிவிட முடியும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ வைரலான நிலையில், சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் பலரும் தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளனர். ஒருவர் கமெண்டில், “ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஆனால், மும்பையில் வாழுகின்ற மக்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பெரும் நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு சொந்த வீடு என்பது கனவாகவே இருந்துவருகிறது.

news18


 



Post a Comment

0 Comments