Ticker

6/recent/ticker-posts

10 ஆண்டுகள் ஆகிவிட்டன....மாயமான MH370 விமானத்தைத் தேடச் சொல்லி மீண்டும் குரல்கொடுத்த குடும்பத்தினர்


10 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான MH370 விமானத்தைத் தேடச்சொல்லி அதில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தார் மீண்டும் குரல் எழுப்பியுள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி 239 பேரை ஏற்றியிருந்த அந்த Boeing 777 ரக விமானம் கோலாலம்பூரில் இருந்து பெய்ச்சிங் செல்லும் வழியில் காணாமல் போனது.

அந்த விமானத்தைத் தேடும் பணிகள் மிகத் தீவிரமாகவும் விரிவாகவும் மேற்கொள்ளப்பட்டன. விமானம் இருக்கும் இடம் இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினர், அவர்களது ஆதரவாளர்கள் எனச் சுமார் 500 பேர் இன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பேரங்காடி முன்னால் திரண்டு விமானத்தைத் தேடச் சொல்லி மீண்டும் குரல்கொடுத்தனர்.

அவர்களில் சிலர் சீனாவிலிருந்து வந்தவர்கள் என்று AFP செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் விமானம் சுமார் 3 ஆண்டுகளாகத் தேடப்பட்டது. இந்தியப் பெருங்கடலில் 120,000 சதுர கிலோமீட்டர் அளவுக்குத் தேடியும் விமானத்தைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

ஆஸ்திரேலியக் குழு தலைமையேற்றிருந்த அந்தத் தேடல் பணிகள் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டது.

பின்னர் 2018ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று தனிப்பட்ட முறையில் MH370 விமானத்தைத் தேடும் முயற்சியில் இறங்கியது.

பல மாதங்களுக்குப் பிறகு எந்தப் பலனும் இல்லாததால் அந்த முயற்சியை நிறுவனம் கைவிட்டது.

seithi


 



Post a Comment

0 Comments