“ஹர்கின்ஸ்” என்று ஆதிக்குடிகளால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்த மூத்தவர், செரோக்கியின் பரம்பரையின் முதற்குடி!
வாலிப முறுக்கேறி - திடகாதத்திரமாக வளர்ந்திருந்த அவரை, கொடூர மனிதக் கும்பலொன்று இழுத்துச் சென்று கப்பலொன்றில் ஏற்றி நீண்டதூரக் கடற்பயணத்தின் பின்னர் - எங்கோ ஓர் இடத்தில் இறக்கிவிட்டு, கடுமையாக வேலை வாங்கியிருக்கின்றது!
செரோக்கி கடலையோ கப்பலையோ கண்டதில்லை!
இவற்றை அவன் வெறும் வார்த்தைகளில் மட்டும்தான் கேட்கின்றான்! மூத்தவர் பற்றி, அவர் கூறிச் சென்றவைகள் பரம்பரை பரம்பரையாக செவிவழிச் செய்தியாக தொடர்ந்து வந்துள்ளது!
வேலைத் தளத்தில் வெறும் அரைவயிற்றுக் கஞ்சி மூத்தவருக்கும், அவரோடிருந்த ஆயிரக் கணக்கானோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றது! அவர்கள் வேலைக் களைப்பால் சிறிது ஓய்வெடுத்தாலும் கூட - சாட்டை கொண்டு துவைத்தெடுக்கப்பட்டுள்ளார்கள்!
இந்தக் கொடுமையிலிருந்து தப்பிவிட வேண்டுமென்று சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அவர் சூசகமாகத் தப்பி, நூற்றுக்கணக்கான மைல்கள் தூரம் கடற்கரை வழியாகவும், வனாந்திரங்களில் நடந்து வந்து - இந்த வனத்தில் தான் கண்ட ஒரு குகைக்குள் நுழைந்து, அது தனக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்ற நிலையில், தனது வாழ்நாள் முழுவதையும் அங்கேயே கழித்து விடுகின்றார்!
பக்கத்திலிருந்த நீருற்றில் கொட்டிக் கொண்டிந்த நீரைப்பருகியே பல நாட்கள் தனது பசி-தாகம் தனித்துக் கொண்டார்! . அப்போது அவருக்கு இந்த வனம், நந்தவனமாகத் தெரிந்ததால், இறக்கும்வரை குகைக்குள்ளேயே வாழ்ந்து விடுகின்றார்!
வனத்தில் ஆங்காங்கே வாழ்ந்து கொண்டிருந்த ஆதிக்குடிகள் என்ன நினைத்தார்களோ தெரியாது, அவர்மீது இரக்கப்பட்டு, அவரை அரவணைத்துக் கொண்டனர்!
அவர் தான் வாழ்ந்துவந்த இடத்துக்கு புரோகோனிஷ் என்று பெயர் சூட்டிக்கொண்டார்! காலப்போக்கில் அதுவே பரந்துபட்ட கிராமத்தின் பெயராகாவும் மாறிவிட்டது!
வனவாசிகள் பழங்கள், கிழங்குகள், விதைகள் போன்றவற்றை வெறுமனே உண்டு வாழ்ந்து வந்த காலகட்டத்தில்தான் இப்பிரதேசத்துக்கு வந்துசேர்ந்த மூத்தவர், குகைகளில் வாழ்ந்தவர்களைக் கொட்டில்களில் வாழவைத்தும், இலைகளை உடுத்தி வாழ்ந்தவர்களை பஞ்சு மரம் தேடி, ஆடை நெய்து உடுத்தவைத்தும் “சீர்திருத்தம்” பண்ணினார்.
“அமேசான்” என்ற இப்பெரும் வனப்பகுதி, உலகின் நுரைஈரல் என்று கருதப்படுகின்றது! இங்கே சிதறி வாழும் மனிதர்கள் பலநூறு கோத்திரங்களாகப் பிரிந்து வாழ்கின்ற போதிலும், “புரோகோனிஷ்” பகுதியினரைத் தனித்துவமாக வாழவைத்த பெருமை மூத்தவரையே சாரும்!
தனது பிறந்த இடமான “அண்டிகோனிஷ்” ஐ அவர்
ஒருபோதும் மறந்ததில்லை. துறைமுகமும் ஆலயங்களும் நிறைந்த ரம்மியமான இடம்! மீன்கள் செறிந்து வாழும் நீர் நிலைகளும், வானுயர ஓங்கி வளர்ந்த மரங்கள் நிரம்பியிருந்ததுமான பீடபூமி!
நெப்போலியனின் யுத்தத்தின் முடிவு காலம்; மரப்பலகைகளின் கேள்வி பிரித்தானியாவுக்கு அதிகமாக இருந்த காலப்பகுதி! தனது தந்தை, அவருக்குச் சொந்தமான பண்ணையிலுள்ள மரங்களை வெட்டி பிரித்தானியாவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்!
'மூத்தவர்' இளைஞராக இருந்த காலத்தில், தான் கற்கின்ற நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் தந்தைக்கு ஒத்தாசையாக, அவரது மரஆலையில் வேலை செய்து கொண்டிருந்தார்!
அவர் அன்டிகோனிஷில் வாழ்ந்த காலத்தில் பல்கலைக் கழகங்களோ, கல்லூரிகளோ அங்கு இருந்ததில்லை! வைத்தியர்கள் என்போர் உலகில் அரிதாக இருந்த காலமது! தன் மகன் வைத்தியராக வரவேண்டுமென்று தந்தை கனவு கண்டு கொண்டிருந்தார்!
அவர் தனது மகனை சில மைல்கள் தூரத்திலிருந்த, வைத்திய மூதறிஞர் ஒருவரிடம் கற்பதற்காக அனுப்பிக் கொண்டிருந்தார். மூத்தவரும் மிகவும் ஆர்வத்தோடு அங்கு சென்று கற்று வரலானார்!
ஒருநாள் கடற்கரை வழியே அவர் வந்து கொண்டிருந்த
போது, “கொடூர மனிதக் கும்பல்” ஒன்று அவரை வழிமறித்துக் கடத்திக் கப்பல் ஒன்றில் ஏற்றிச் சென்று எங்கோ ஓரிடத்தில் அவரை அடிமையாக விற்றுவிட்டது!
அந்த இடம் “அண்டிகுவா” என்பது பின்னர்தான் அவருக்குத் தெரியவந்தது!
அடிமை வியாபாரம் வெகு ஜோராக நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது! அக்காலத்தில் ஆபிரிக்க நாடுகளிலிருந்தே அதிகமாக நல்ல மனிதர்கள் பலாத்காரமாக இழுத்து வரப்பட்டு, கப்பல்களில் ஏற்றி எங்காவதொரு இடத்தில் இறக்கப்பட்டு, கடுமையாக வேலை வாங்கப்பட்டுக் கொண்டிருந்தனர்!
வெள்ளையர்கள் மிகச்சொற்பமானவர்களே அடிமையாக்கப் பட்டுள்ளனர். அவர்கள் தமது சுய அறிவைப் பயன்படுத்தித் தப்பிக் கொள்வதுண்டு! அப்படியாகத் தப்பியவர்களுள் மூத்தவரும் ஒருவர்!
தப்பிவந்த அவர் வழி தவறிவிட்டதால், தன் பெற்றோரிடம் போய்ச்சேரும் பாக்கியம் இழந்தார். அதனால்தான் தன் பெற்றோரையும், பிறந்தகத்தையும் நினைவு படுத்துமுகமாக, தான் பிறந்த இடமான "அன்டிகோனிஷ்” என்பதைத் திரிவுபடுத்தி, வனத்தில் தான் வாழ்ந்து வந்த இப்பகுதிக்கு “புரோகோனிஷ்” என்று பெயர் சூட்டிக்கொண்டார்!
தான் கடந்து வந்த பாதைகள் – பட்டு வந்த துயரங்கள் அனைத்தையும் சம்பவங்களாக்கி மூத்தவர் செரோக்கியின் பூட்டனிடம் கூறிச் சென்றுள்ளார்! அவற்றை பூட்டன் முப்பாட்டனிடம் கூற, முப்பாட்டன் பாட்டனுக்குக் கூறி, பாட்டன் செரோக்கியின் தந்தையிடம் கூறவே, செவிவழிச் செய்திகளான இவை, வரலாறாக மாற்றம் பெற்றது!
அதனால்தான், வளர்ச்சியடைந்த நாடொன்றில் பிறந்த மூத்தவரால், அறிவு ரீதியாக யோசித்து அக்காலத்தில் கானகத்தில் கிடைத்த கற்கள், தடிகள், கூரான இன்ன பலவற்றை உபயோகித்து மிருகங்களை வேட்டையாடும் யுக்தியையும், கற்களை உராய்ந்து நெருப்பை மூட்டும் முறையையும் வனவாசிகளுக்குச் சொல்லிக் கொடுக்க முடிந்தது!
வருடத்தில் ஒருநாளைத் தீ வைப்பு தினமாகக் கொண்டாட வைத்ததும், அத்தினத்தையே வனவாசிகளின் பண்டிகைத் தினமாக அணுசரிக்கச்செய்த பெருமையும் அவரையே சாரும்!
வேட்டையாடிய மிருகங்கள் - பறவைகளைப் பச்சையாக உண்டு வந்த ஆதிக்குடிகளுக்கு, அவற்றை நெருப்பிலிட்டு உண்ணும் முறையைக் கற்றுக் கொடுத்ததும் அவர்தான்! தான் கற்றிருந்த வைத்தியத்துறை, மறந்துபோகாதிருக்க அதனை மூலிகை வைத்தியத்துடன் இணைத்து, பல்வேறு ஆய்வுகளைச் தன்னிச்சையாகச் செய்து அங்கு வாழ்ந்து வந்த மக்களுக்கு நோய்கள் ஏற்படுகின்ற போதெல்லாம் வைத்தியமும் அவர் செய்து வந்ததால், அம்மக்கள் மனதில் அவர் நீங்கா இடம் பிடித்துக் கொண்டார்!
அவர் வனப்பகுதிக்கு வந்த காலமுதல் அடிக்கடி “ஹர்கின்ஸ்” என்ற சொல்லை முணுமுணுத்துக் கொண்டிருப்பதைக் கண்ட வனவாசிகள் அவரை அப்பெயர் கொண்டே அழைக்கலாயினர்!
யாரிந்த “ஹர்கின்ஸ்”? ஏன் அந்தப் பெயரை மூத்தவர் அடிக்கடி உச்சரிக்கின்றார்? ஆதிக்குடிகளுக்கு அதுவோர் புரியாத புதிராகவே இருந்து வந்துள்ளது!
அவரைக் கடத்திவந்த கப்பலின் கட்டளையிடும் அதிகாரியாக “ஹர்கின்ஸ்” என்பவன் இருந்துள்ளான்!
கப்பலில் நல்லவனாகப் பெயர் வாங்கிக் கொண்டிருந்த அவன் மிகவும் கெட்டவன் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்!
கெட்டவன் நல்லவனாகப் பெயர் வாங்குவது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்த மூத்தவர், வனத்துக்கு வந்த புதிதில் அவனது பெயர் மறக்காதிருப்பதற்காக, அடிக்கடி அதனை முணுமுணுத்துக் கொண்டிருந்தார்! அதுவே காலப்போக்கில் தன் பெயராக மாறிவிடும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார்!
நீண்ட காலப்புரிந்துணர்வுக்குப் பின் - அவர் அந்த ஆதிக்குடிகளின் ஒருத்தியைத் துணையாக்கிக் கொண்ட சிறிது காலத்தில் செரோக்கியின் பூட்டன் பிறந்தார்!
(தொடரும்)
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments