Ticker

6/recent/ticker-posts

43/3 என சரிந்தும் விட்டுக் கொடுக்காத ஆட்டம்.. பதிலுக்கு வங்கதேசத்தை அடித்து சமமான பதிலடி கொடுத்த இலங்கை


வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அங்கு முதலாவதாக நடந்த டி20 கிரிக்கெட் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்றது. அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்ற வங்கதேசம் அதற்கு பதிலடி கொடுத்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி மார்ச் 15ஆம் தேதி சட்டோகிராம் நகரில் நடைபெற்றது. 

அந்தப் போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இலங்கை டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் 50 ஓவர்களில் அசத்தலாக விளையாடி 286/7 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு லிட்டன் தாஸ், முகமதுல்லா ஆகிய நட்சத்திர வீரர்கள் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

ஆனால் சௌமியா சர்க்கார் 68, கேப்டன் சாந்தோ 40 ரன்கள் எடுத்து அசத்திய நிலையில் மிடில் ஆர்டரில் தவ்ஹீத் ஹ்ரிடாய் சிறப்பாக விளையாடி அதிகபட்சமாக 96* ரன்கள் குவித்தார். இலங்கை சார்பில் அதிகபட்சமாக வணிந்து ஹசரங்கா 4, தில்சன் மதுசங்கா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 287 ரன்களை துரத்திய இலங்கைக்கு அவிஷ்கா பெர்னாண்டோ ஆரம்பத்திலேயே சோரிஃபுல் இஸ்லாம் வேகத்தில் கோல்டன் அவுட்டானார்.

அப்போது வந்த கேப்டன் குசால் மெண்டிஸ் 16, சமரவிக்கிரமா 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 43/3 என தடுமாற்ற துவக்கத்தை பெற்ற இலங்கைக்கு மற்றொரு துவக்க வீரர் பதும் நிசாங்கா எதிர்ப்புறம் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் அடுத்ததாக வந்து ஜோடி சேர்ந்த சரித் அசலங்கா தன்னுடைய பங்கிற்கு நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

அந்த வகையில் 7வது ஓவரில் இணைந்த அந்த ஜோடி 37 ஓவர்கள் வரை வங்கதேச பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்து 185 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இலங்கையை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது. அதில் அசத்தலாக விளையாடிய நிசாங்கா சதமடித்து 114 (113) ரன்களில் அவுட்டாக அடுத்த ஓவரிலேயே மறுபுறம் சதத்தை நழுவ விட்ட அசலங்கா 91 (102) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அப்போது வந்த லியாங்கே 9 ரன்களில் அவுட்டானலும் ஹசரங்கா அதிரடியாக 25 (16) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் வெல்லலாகே 15* ரன்கள் எடுத்ததால் 47.1 ஓவரிலேயே 287/7 ரன்கள் எடுத்த இலங்கை போராடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக தஸ்கின் அகமது மற்றும் சோரிஃபுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் வாழ்வா சாவா போட்டியில் வெற்றி கண்ட இலங்கை 1 – 1* (3) என்ற கணக்கில் இத்தடரை சமன் செய்து வங்கதேசத்துக்கு பதிலடி கொடுத்துள்ளது.

crictamil


 



Post a Comment

0 Comments