மூங்கிலைப் பிளந்து, தன் தந்தையோடு இணைந்து செய்த வில்லொன்றை வைத்துக் கொண்டு, செரோக்கி தன் ஜாகை முன்றலில் தனியாக விளையாடிக் கொண்டிருப்பான்!
பக்கத்தில் உள்ள புதர்களில் பதுங்கி வாழும் மிருகங்களுக்கும், ஓங்கி வளர்ந்த மரங்களின் மேல் கீச்சிட்டுக் கொண்டிருக்கும் பறவைகளுக்கும் அம்பு எய்துவான்! ஆனால் இதுவரை அவன் ஒரு மிருகத்தையோ, பறவையையோ வேட்டையாடிச் சாய்த்தது கிடையாது! அவன் எய்தும் அம்புகள் குறிதவறி எங்கேயோ போய்விடுகின்றன!
தந்தையின் தங்கையது கணவரிடம் குறிதவறாமல் அம்பெய்தி வேட்டையாடும் நுட்பத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற நினைப்பு இப்போது அவன் மனதில் தோன்றியது!
சிறிது தூரம் நடந்து வந்ததும், தந்தை தூரத்திலிருந்து சுட்டிக் காட்டிய அந்த ஜாகையின் முன்றலுக்குள் தந்தையும் மகனும் வந்து சேர்ந்தார்கள்.
பெரியதும், சிறியதுமாக இரண்டு பெண்கள் வாசலில் நின்றிருப்பதை செரோக்கி கண்டான்! பெரிய பெண் தனது தந்தையின் தங்கையாகத்தானிருக்க வேண்டும் என்பதை ஊகித்துக்கொள்ள அவனுக்கு நீண்ட நேரம்பிடிக்கவில்லை!
அப்படியானால், பெரிய பெண்ணின் இடையைத் தனது கரத்தினால் சுற்றி வளைத்துக் கொண்டு நின்றிருந்த, அந்தப் பெண்குட்டி தந்தையின் தங்கையினது மகளாகத்தானிருக்க வேண்டும்!
நீண்டதொரு இடைவெளிக்குப் பின் தனது சகோதரனையும், அவரின் மகனையும் சந்தித்ததில் அந்தப் பெரிய பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி பிரவாகித்தது!
மருமகன் செரோக்கி பிறந்த வேளையில், அவனைக் கைத்தாங்கி, கொஞ்சி மகிழ்ந்த ஞாபகம் அவளது கண்களைவிட்டும் மறைந்துவிடவில்லை. அவன் இப்போது பையனாகி அவள் முன் நிற்கின்றான்!
ஜாகையின் முன்றலில் வரிசையாக நின்றிருந்த கருங்கற்களில் ஒன்றின்மேல் அமர முற்பட்ட அவர்களை ஜாகைக்குள் அன்போடு அழைத்துச் சென்று விரிப்பில் அமர வைத்தாள் சுரையா!
மூங்கில்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிய சுவர்கள் கொண்ட அலங்காரமான ஜாகையைப் பார்த்ததும் செரோக்கி வியப்படைந்தான்!
அலங்கார வேலைப்பாடுகளோடு கூடிய பொருட்கள் சில அந்த மூங்கிற் சுவர்களில் மாட்டப்பட்டிருந்தன. வளைந்து நெளிந்த கொம்புகளோடு கூடிய மிருகங்களின் மண்டையோடுகளும் ஆங்காங்கே சுவர்களில் தொங்கிக் கொண்டிருந்தன!
தரையின் மத்தியில் மிருகத்தோல் விரிக்கப்பட்டிருந்தது. தந்தையும் மகனும் அதன்மேல் அமர்ந்து கொண்டனர்!
ஓரளவுக்குத் தந்தையின் சாயலை ஒத்திருந்த அவரது தங்கை பார்ப்பதற்கு அழகாகவும், மற்ற வனவாசிப் பெண்களிலிருந்தும் மாறுபட்டும் காணப்பட்டார்! அது ஏன்?
அவனுக்கு இப்போது புரியாவிட்டாலும், பின்நாட்களில் அவன் புரிந்து கொள்வான்!
விரிப்பில் அமர்ந்து கொண்டிருந்த தன் சகோதரனையும், மருமகனையும் அன்பு கனிந்த பார்வை கொண்டு ஒருமுறை நோக்கிவிட்டு, அலங்காரமான சிரட்டைகளில் மூலிகைக்கஞ்சை ஏந்தி வந்து பரிமாறினாள்.
சிறிது நேரம் செல்ல இறைச்சித் தட்டொன்றை ஏந்தி வந்து விரிப்பில் வைத்தார்! தீயிட்டுச் சுட்டவாடை மூக்கைத் துளைத்ததால், தும்மல் வந்து விடுமோ என்று பயந்தான் செரோக்கி!
தட்டிலிருந்து எடுத்த இறச்சித் துண்டிலொன்றைத் தானும் எடுத்துக் கொண்டு, செரோக்கிக்கும் ஒன்றை நீட்டினார் தந்தை!
செரோக்கி மெதுமெதுவாக அதனை மெல்லத் தொடங்கினான். இந்த வகை இறைச்சி, செரோக்கி இதற்கு முன் உண்டதில்லை என்பது அவனது தந்தைக்குத் தெரியும்!
தந்தையின் முகத்தை அவனது கண்கள் ஊடுருவியதில், மகனின் பார்வையின் இரகசியத்தைப் புரிந்துகொண்ட அவர், “இது மான் இறைச்சி! சுவையாக இருக்கும், இன்னொரு துண்டு எடுத்துச் சாப்பிடு!” என்று கூறிய போதுதான், அவன் முதன் முதலாக மானிறைச்சி உண்பதை உணர்ந்தான்!
கையிலிருந்த இறைச்சித் துண்டை ஆசை ஆசையாக சாப்பிட்டுவிட்டு, தட்டில் பெரிதாகத் தெரிந்த மற்றொரு துண்டை எடுத்துச் சுவைக்கத் தொடங்கினான் செரோக்கி!
தந்தையின் தங்கை மறுபடியும் அங்கு வந்து, பழக்கூடை ஒன்றை விரிப்பில் வைத்துவிட்டு நகர்ந்தார்!
அவர் குனிந்தபோது, பலவர்ண மணிகளால் தொகுத்தெடுத்து கழுத்தில் அணிந்திருந்த அழகான மாலை செரோக்கியின் கண்களைத் தொட்டது!
தனது தாய்க்கும் இப்படியானதொரு மணிமாலை இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒருமுறை தனக்குள் நினைத்துக்க் கொண்டான்!
(தொடரும்)
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments