Ticker

6/recent/ticker-posts

தேர்தல் விதி மீறல்: மோடி, நிர்மலா சீதாராமன் மீது பரபர புகார்... நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம் ?


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், அதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை தமிழ்நாட்டில் தொடர்ந்து 5-வது முறையாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று கோவையில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சாலை வழியாக பயணம் (Road Show) நடத்தினார். அந்த சமயத்தில் இவரை வரவேற்கும் விதமாக பள்ளி மாணவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பாக எழுந்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டபோது, அது அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் என்று தெரியவந்தது.

மேலும் தேர்தல் ஆணைய விதிகளின்படி, தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரை பயன்படுத்தக்கூடாது. ஆனால் பாஜகவினரோ அதனை மீறி, குழந்தைகளை பிரசாரத்திற்காக பயன்படுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அணுப்பப்பட்டுள்ளது.

அதோடு இது குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் செயல் என்றும் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இதுகுறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தில் திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புகார் மனு அளித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறிய பாஜக மீதும், மோடி மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சென்னையில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத ரீதியாகவும் பிரசாரம் மேற்கொண்டார். இது தொடர்பாகவும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆந்திராவில் மோடி பிரசாரம் மேற்கொள்ள செல்லும்போது இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரை பயன்படுத்தியுள்ளார். தேர்தல் ஆணைய விதிப்படி, அரசு சார்ந்த எந்த ஒரு வாகனத்தையும் கட்சிக்காக பயன்படுத்தக்கூடாது. ஆனால் அதையும் மீறி பிரதமர் பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பாகவும் அவர் மீது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே புகார் மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

kalaignarseithigal


 



Post a Comment

0 Comments