Ticker

6/recent/ticker-posts

பொன்விழா கண்ட பேருவளை ஜாமிஆ நளீமிய்யா!


சீனன்கோட்டை மக்கள்,  கடந்த மாதம் ஜாமிய்யா நளீமிய்யாவில் ஒன்றுகூடி அதன் பொன் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இது பற்றிய செய்தியை, எமது பேருவளைப் பிராந்திய  எழுத்தாளர் ஹில்மியின் கட்டுரை வடிவில் "வேட்டை"  அப்போதே பதிவிட்டது!

Naleemiyya Institute of Islamic Studies என்ற பெயரில் உருவான "ஜாமிய்யா நளீமிய்யா",  இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் ஆரம்பிக்கப்பட்ட அதிஉயர் கல்விபீடமாகும். பிரபல மாணிக்கக் கல் வர்த்தகரும், கொடைவள்ளலுமான மர்ஹூம் எம்.ஐ.எம்.நளீம் ஹாஜியார் அவர்களது எண்ணக் கருவில், 1973ம் ஆண்டு இக்கல்விபீடம் உருவானது.
இதுவரை  நளீமிய்யாவில் உள்வாங்கப்பட்டவர்களுள் 1500 க்கும் மேற்பட்டோர் பட்டம் பெற்றுள்ளனர்; அவர்களுட் சிலர் முதுகலை மற்றும் PHD முடித்தனர்.

கல்ஹின்னையிலிருந்து 1981ம் ஆண்டு உள்வாங்கப்பட்டு, கற்றுத் தேர்ந்து, அங்கிருந்து 1988ல்  வெளியேறிய  M.H. முஹம்மது ஸமீல், பல அமைச்சுக்களில்  பொறுப்பான பதவிகளை வகித்து வந்துள்ளார் என்பது மகிழ்ச்சி தரும் விடயமாகும்.

1966ம் ஆண்டு பிறந்த இவர்,  க.பொ.த சாதாரண தரம் வரை கல்ஹின்னை அல்மனாரில் கற்றபின், 1981ம் ஆண்டு ஜாமிஆ நளீமிய்யாவில் இணைந்தார். 1987ம் ஆண்டில்  கலைத்துறைப் பட்டத்தைப் பெற்று, 1988ம் ஆண்டில் அங்கிருந்து வெளியாகி,  ஒன்பது வருட காலம் உதவியாசிரியாராகப் பணிபுரிந்த பின்னர் 1998ல் நிர்வாக சேவை பரீட்சையில் (SLAS) சித்தியடைந்தார்.

1998 - 2000 காலப்பகுதியில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகப் பணிபுரிந்துள்ள இவர், அதனைத் தொடர்ந்து, 2003ம் ஆண்டு வரை பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் கல்விச்சேவைக் குழுவின் உதவிச்செயலாளராகப் பணியாற்றினார்.2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு செப்டெம்பர் வரை பொதுச்சேவைகள் ஆணைக்குழுவில் உதவிச் செயலாளராகவும் பிரதிச் செயலாளராகவும் பணிபுரிந்தார்.

2004/2005ம் ஆண்டுகளில் புதுடில்லி குருகோபிந் இந்திரப்பிரசாத் பல்கலைக்கழகத்தில், மனிதவள திட்டமிடல் மற்றும் அபிவிருத்தித்துறையில் முதுமாணி பட்டம்  பெற்ற அல்ஹாஜ் முஹம்மது ஸமீல் அவர்கள், தொடர்ந்து அரசாங்க சேவைகள் ஆணைக்குழு, சமூக சேவை திணைக்களம் மற்றும் சமூகசேவை அமைச்சு என்பவற்றில் பிரதிச் செயலாளர், மேலதிகப் பணிப்பாளர் மற்றும் பணிப்பாளர் போன்ற பதவிகளை வகித்து வந்தார்.
2013 - 2017 பெப்ரவரி வரை இலங்கை முஸ்லிம்களுக்கான  அரச நிறுவனமான, முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளராகவும்  பணிபுரிந்துள்ள  இவர்,  2017 பெப்ரவரி முதல் இன்று வரை இலங்கை நிதி அமைச்சின் கீழ் காணப்படும் கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தில் மேலதிக பணிப்பாளர் நாயகமாக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவரைப் போன்ற பலர், ஜாமிய்யா நளீமிய்யாவில் உள்வாங்கப்பட்டு, வெற்றிகரமாகக் கற்றுத்தேறி அங்கிருந்து   வெளியேறி,  அமைச்சுக்களின் செயலாளர்கள், சுங்க அதிகாரிகள், குடிவரவு-குடியகல்வு அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள்,  அதிபர்கள் மற்றும் அதிபர்கள் என இலங்கையின் பொருளாதாரத்திற்கான ஒரு பாரிய பங்களிப்பைச் செய்து வருகின்றனர். 

நூற்றாண்டை நோக்கிய அடுத்த ஐம்பதாண்டைய இன்றைய பயணம் ஜாமிஆ நளீமிய்யாவின் பாரிய பல கல்வித்திட்டங்களுடன் முன்னெடுப்புப்பெற எமது  நல்லாசிகள்!

ஐம்பதாண்டு நிறைவை அற்புதமான நிகழ்வாக ஏற்பாடு செய்த பேருவளை 'ராபிதா' கிளை உறுப்பினர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்!

நளீம் ஹாஜியாரின் புதல்வர்கள் உட்பட குடும்பத்தினர்கள்,  உருவாக்கத்தில் உறுதுணை நின்று கொண்டிருக்கும் உறுப்பினர்கள் அனைவரும்  நளீமிய்யாவை  நூற்றாண்டு காலங்கள் தொடர்ந்து கொண்டு செல்ல, அனைத்தையும் சாத்தியப் படுத்தித்தர வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

நளீமிய்யாவின்  அனைத்து வெற்றிகளுக்கும் வாழ்த்துக்கள்! 

ஐ. ஏ. ஸத்தார்,
முன்னைநாள் வெளியீட்டுப் பணியாளர்,
நளீமிய்யா வெளியீட்டுப் பணியகம், 
பேருவளை.




 ===


 



Post a Comment

0 Comments