Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-10


அந்தி சாய்ந்து விட்டதால் வனத்திலிருந்து குறுக்கு வழி ஒன்றால் அவர்கள் தங்களது ஜாகைக்கு வந்து சேர்ந்தார்கள். அதனால் குட்டி ரெங்க்மாவின் ஜாகைக்குப் போகும் செரோக்கியின் எண்ணம் நிறைவேறாமல் போய்விட்டது!  

ஒருவகையில் செரோக்கிக்கு இது கவலையாக இருந்தாலும், இன்னொருநாள் போகலாம் என்ற நினைப்பில் தன் மனதைத் தேற்றிக் கொண்டான்!

வனத்திலிருந்து எடுத்து வந்தவைகளைக் கிடங்கில் போட்டுவிட்டு,  கை - கால்கள் அலம்பிக்கொண்டவர்களாக ஜாகைக்கு வெளியேயிருந்த கருங்கல்லின் மீது தந்தையும், மகனும் அமர்ந்து கொண்டனர்!

ஜாகையின் பின்புலத்தில்  தன் வேலையில் ஈடுபட்டிருந்த செரோக்கியின் தாய் ஓட்டமும் நடையுமாக வந்து, நீருற்றுக்கு அருகிலிருந்த பாத்திரங்களிரண்டில்  நீரை நிரப்பி தந்தைக்கும் மகனுக்கும் கொடுத்துவிட்டு அங்கிருந்து  நகர்ந்தார்!

மறுபடி சிறிது நேரம் கழித்து வந்த அவள்  அவ்விருவரையும்  ஜாகைக்குள் அழைத்தார். இருவரும் உட்சென்று விரிப்பில் ஆயாசமாக அமர்ந்து கொண்டனர்!

சுட்டெடுத்த கிழங்கு வகை ஒன்றினை அவர் தந்தைக்கும் மகனுக்கும் பரிமாறினார்!  தொட்டுக் கொள்வதற்காக காரமான “கிரேவி” ஒன்றையும் கொண்டு வந்து வைத்தார். 

அது மீன் வாடையோடு கூடிய  புளிப்பாக இருந்தது! சில நாட்களுக்கு முன் தந்தை தனது நண்பர்களோடு  ”ரியோ நீக்ரோ” வில் “ஒரிநோகோ” கலக்கின்ற மையத்திற்குச் சென்று மீன் பிடித்து வந்திருந்தார்!

அவற்றைச் சுத்தப்படுத்திக் கழுவுவதற்கு தனது தாய்க்கு செரோக்கியும் துணையாக இருந்தான்! அந்த மீன்  கொண்டுதான் தனது தாய் 'கிரேவி' செய்திருக்க வேண்டும்! மீன் வாசனை வருகின்றதே தவிர அங்கு மீன் துண்டுகளைக் காணவில்லை. எது எப்படியிருந்தாலும் கிரேவி ருசியாகத்தானிருந்தது!

மாலை மங்கி, இருட்டு மெல்லத் தலை தூக்கியது! காட்டுக்குள் நுழைந்து நடையாய் நடந்து வந்த களைப்பு தந்தையையும் மகனையும் அப்படியே… விரிப்பில்  உறங்கச் செய்து விட்டது!

செரோக்கி தனது மச்சினி ரெங்க்மாவுக்கென்று ஆசை ஆசையாய் கொண்டு வந்த  பழங்களைத் தனது தலைமாட்டில் வைத்துவிட்டு அப்படியே தூங்கிவிட்டான்!

செரோக்கியின் தாய், காலியான ஏனங்களை வேகவேகமாக அங்கிருந்து அகற்றிவிட்டு, “பண்போர்வை” ஒன்றைக் கொண்டுவந்து தந்தையும் தமையனையும் போர்த்திவிட்டு, சற்றுத் தூரமாக ஓரிடத்தில்  அவளும்  ஒதுங்கி உறங்கிக் கொண்டாள்!

காலையில் எழுந்ததும்  செரோக்கி வழமைபோல் முகத்தை அலம்பிவிட்டு வனத்தில் பறித்துவந்த பழங்களை எடுத்துக் கொண்டு  வேகமாக  ரெங்க்மாவின்  ஜாகையை நோக்கி ஓடினான்!

முன்றலில் நின்றவன்… அதிர்ச்சியாகி விட்டான்!
ஜாகை மூடப்பட்டிருந்தது! ஓரிரு பன்றிகளும்,  சில கோழிகளும் வீட்டைச் சுற்றி அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தன! தூரத்தே பழங்குடியினர் போவதும் வருவதுமாக இருந்தனர்!

ஜாகை திறக்கப்படும் வரை அவன் அங்கிருந்த கல்மேல் அமர்ந்து கொண்டு வளவைச் சுற்றி நோட்டம் விட்டான்!

ஒரு புறத்தில் வாழை மரங்களும் கொய்யா மரங்களும் நிறைந்து காணப்பட்டன! மறுபுறத்தில் வரிசையாக பலாமரங்களும் மாமரங்களும் காணப்பட்டன! எல்லாவற்றிலும் காய்களும் கனிகளும் தொங்கிக் கொண்டிருந்தன!

அவன் வனத்திலிருந்து பறித்து வந்த புளிப்பேரை வனங்களில் மாத்திரம் சிறு செடிகளாக கற்களுக்கு இடையில் வளர்கின்ற சிறிய இனப்பழ வகையாகும். மற்றது காடுகளில் வளர்கின்ற முசுக்கொட்டை இனத்தைச் சேர்ந்த பழமாகும். இவற்றையெல்லாம் ரெங்க்மாவுக்குக் கொடுக்க வேண்டும்! அவளோடு விளையாட வேண்டும் என்று அவன் தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்!

நேற்று அவன் அத்தையின் வீட்டுக்குப் போனபோது, அவரது  கணவர் அங்கிருக்கவில்லை! அவர் எப்படி இருப்பார்? தனக்கு வேட்டையாடப் பயிற்சி தருவாரா? அல்லது மறுத்துவிடுவாரா? இப்படியாக அவன் பலதையும் அசைபோட்டுக் கொண்டிருந்தான்.

(தொடரும்)

 செம்மைத்துளியான்


 



Post a Comment

0 Comments