Ticker

6/recent/ticker-posts

நாவூற வைக்கும் சுவையான 'மீன் பிரியாணி' - வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?


பிரியாணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவுகளில் இதுவும் ஒன்று. அதேபோல் கடல் உணவுகளில் மீன் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். எனவே அனைத்து வயதினருக்கும் பிடித்த பிரியாணி மற்றும் மீன் சேர்த்து சுவையான மீன் பிரியாணி செய்து கொடுத்தால் எப்படி இருக்கும்.?

ஆம் இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபியில் நாவூறும் வைக்கும் சுவையான மீன் பிரியாணியை வீட்டிலேயே எளிதாக எப்படி தயாரிக்கலாம் என்று தான். எனவே இந்த வீக் எண்டு ஸ்பெஷலாக வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்த சுவையான ‘வஞ்சரம் மீன் பிரியாணி’ செய்து கொடுத்து அசத்துங்கள்.


தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 1/2 கிலோ
வஞ்சரம் மீன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
பழுத்த தக்காளி - 3
தேங்காய் பால் - அரை கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 1/2 டீஸ்பூன்
கிராம்பு - 3
பட்டை - 1
ஏலக்காய் - 3
பிரியாணி இலை - 1
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு

அரைக்க தேவையானவை :
துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்
பச்சமிளகாய் - 2
காய்ந்த சிகப்பு மிளகாய் - 2
சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
இஞ்சி துண்டு - 1
பூண்டு - 6 பல்

செய்முறை :

முதலில் பாசுமதி அரிசியை இரண்டு மூன்று முறை அலசி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சுமார் அரை மணிநேரம் வரை ஊறவைத்து கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சோம்பு, பச்சை மிளகாய், காய்ந்த சிகப்பு மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மைய விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து குக்கர் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் சிறிதளவு நெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

பிறகு அதில் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் அதில் புதினா மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

அதன் பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

தக்காளி மென்மையாக வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

குறிப்பு : ஏற்கனவே பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த சிகப்பு மிளகாய் சேர்த்து அரைத்துள்ளதால் மிளகாய் தூளை பார்த்து சேர்த்து கொள்ளுங்கள்.

மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் அலசிய வஞ்சரம் மீன் துண்டுகளை சேர்த்து கவனமாக கிளறவும்.

பின்னர் அதில் உறவைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து அதனுடன் தேங்காய் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு 2 விசில் வரும் வரை வேகவிடவும்.

குறிப்பு : ருசி பார்த்து தேவையென்றால் உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.

குக்கரில் பிரஷர் தானாக அடங்கியவுடன் மூடியை திறந்து பார்த்தால் சுவையான மீன் பிரியாணி சாப்பிட தயாராக இருக்கும்.

இதை சுடசுட தட்டில் போட்டு வெங்காய பச்சடி வைத்து சாப்பிட்டால் சுவையாக அள்ளும்.

news18


 



Post a Comment

0 Comments