காலம் விரைவாக நகர்ந்து கொண்டிருந்தது. செரோக்கியும் வளர்ந்து கொண்டிருந்தான். தினமும் தனது தந்தையுடன் வனத்திற்குப் போவதும் வருவதுமாக இருந்தான்.
இடையில் நேரம் கிடைக்கின்ற போதும் - தனது தந்தை அவரது நண்பர்களுடன் மீன்பிடிப்பதற்கென செல்கிறபோதும் - தனது அணில் பிள்ளையோடு ரெங்க்மாவின் ஜாகைக்குப்போய் மங்குவையும் சேர்த்துக் கொண்டு அங்கிருந்த "ஹந்துந்திவியா" மற்றும் கோழிகள்
பன்றிகளோடு சேர்ந்து விளையாடுவதும் - மரங்களில் தாவி பழங்களைப் பிய்த்து உண்பதுமாகக் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தான்!
மழலைத் தானத்திலிருந்து விடுபட்டு - சிறுமி ஸ்தானத்தை எட்டியிருந்த ரெங்க்மா - “குமாரி” நிலைக்குத் தாவ முற்பட்டுக் கொண்டிருந்தாள்.
தூர நாடொன்றிலிருந்து கடத்தப்பட்டு, பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் அங்கிருந்து காததூரம் நடந்துவந்து, இந்த வனத்தை நந்தவனமாக நினைத்து தஞ்சமடைந்த - “ஹர்கின்ஸ்" என்று கிராம மக்களால் அன்போடழைக்கப்பட்ட மூத்தவரால் பெயர் சூட்டப்பட்ட "புரோகோனிஷ்" கிராமம், செரோக்கியின் ஜாகையிலிருந்தே ஆரம்பமாகின்றது!
அவனது ஜாகையைச் சுற்றி கூப்பிடு தூரத்தில் சில கொட்டில்கள் காணப்பட்டாலும், சிறிது தூரத்தில், ரெங்க்மாவின் ஜாகைக்கு அருகில்தான் கிராமத்தின் ஏனைய ஜாகைகளும், கொட்டில்களும் காணப்படுகின்றன.
செரோக்கியின் தந்தையின் தங்கையை இந்த வனத்துக்கு வந்து சேர்ந்த "நாகலாந்து" தேசத்து வழித்தோன்றல் ஒருவருக்கு மணமுடித்துக் கொடுத்து, அவர்களது குடும்பத்தை புரோகோனிஷ் கிராமத்தின் அமேசான் வனப்பகுதி தொடங்கும் எல்லையில் - அம்புளுவாக் காட்டுக்கருகில் வாழவைத்துவிட்டு, செரோக்கியின் பட்டன் மறைந்து போனார்.
செரோக்கியின் தந்தை அவரது தங்கையின் கணவர் உயிரோடிருந்த காலத்தில் அவரோடு அடிக்கடி வேட்டையாட வனத்துக்குள் செல்வதுண்டு.
செரோக்கியின் அத்தையான சொர்யாவின் பிரசவத்தின்போது, நாகலாந்தை நினைவு கூருமுகமாக ”ரெங்க்மா" என்று பிறந்த குழந்தைக்குப் பெயரிட்டது அவர்தான்!
எவ்வித மறுப்புமின்றி அதனை சொர்யாவும் அவளது கணவரும் ஒத்துக் கொண்டார்கள். அந்த நாட்களில் அவர்களுக்குள் அந்தளவு பிணைப்பு!
அமேசான் வனத்திலேயே "புரோகோனிஷ்" கிராமம் தனித்துவமிக்கதாகக் காணப்பட்டமைக்கு மூத்தவர் காரணகர்த்தாவாக விளங்குகின்றார்.
நீண்டு செல்கின்ற பாதையில் இடது பக்கமாகச் சென்றால் கிராமத்துக்குள் நுழையலாம். வலது பக்கமாக நேராக - இயற்கையிலேயே உருவான அகன்ற பாதையொன்று சென்று அது ஒரு முச்சந்தியில் தரிக்கின்றது.
முச்சந்தின் இடதுபக்கமாகச் சென்றாலும் வலது பக்கமாகச் சென்றாலும் வெளியுலக மக்கள் வாழும் பிரதேசங்களுக்குச் செல்லலாம்!
இடது பக்கம் சென்றால் தென்படும் அழகான மைதானங்களில் நாகரிகமாக உடுத்திய சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
அவர்களோடு வந்தவர்கள் அங்கே அமைக்கப் பட்டிருக்கின்ற இருக்கைகளில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருப்பார்கள். நாகரிகமானஅவர்கள் நல்லவர்கள்!
அங்கிருந்து தூரத்தே நோக்கினால் வானுயர்ந்த கட்டிடங்கள் தென்படும்!
ஒருநாள் தனது தந்தை மூங்கில் ஒன்றைப் பிளந்து அழகாகப் பதப்படுத்தி உருட்டி விளையாடுவதற்கென செய்து தந்த உருளையைத் தடி ஒன்றால் தட்டியபடி செரோக்கி முச்சந்திக்கு வந்து சேர்ந்தான். வலது பக்கம் செல்வதா இடது பக்கம் செல்வதா என்பதில் அவனுக்கு ஏற்பட்ட தடுமாற்றத்தில்...
'சரி, இன்றைக்கு இடது பக்கமாகச் செல்வோம் இன்னொரு நாள் வலது பக்கமாகச் செல்லலாம்' என்று நினைத்தவனாக உருளையை உருட்டிக் கொண்டு இடது பக்கமாக சென்றான்! -
வெகுதூரம் சென்றபோது - அவன் கண்ட பிரதேசம் அவனைப் பிரமிக்கச் செய்துவிட்டது. அவன் அங்கு கண்ட எல்லாமே அவனுக்குப் புதுமையாகத் தெரிந்தன!
விசாலமான மைதானம் - அதற்குள் ஆண்களும் பெண்களுமாக ஓடியாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அங்கே அவர்களை விளையாட விட்டுப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த நாகரிக உடையணிந்த மனிதர்கள்!
ஏறி இறங்கியும் ஓடியாடியும் மகிழ்ச்சிப் பிரவாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைக் கண்டதும் அவன் திகைத்துப் போனான். தானும் அவர்களுடன் சென்று விளையாடலாமா என்று கூட ஒருகணம்... ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்த்தான்!
தனிமைப்படுத்தப்பட்ட, ஒரு வரையறைக்குட்பட்ட சமுதாயத்திற்குள் வாழும் அவனுக்கு இவை புதுமையாகத் தெரிந்ததில் வியப்பொன்றுமில்லை!
தான் உருட்டி வந்தது போன்ற கரிய - பெரிய சில்லுகள் நான்கில் நகரக்கூடிய பல்வேறு வர்ணங்களிலான ஊர்திகளின் கதவுகளைத் திறந்து - ஏறி இறங்கிக் கொண்டிருந்த அலங்கார ஆடை அணிந்த மனிதர்களை அவன் அப்போதுதான் காண்கின்றான்.
ஊர்திகளுக்குப் பொதுவான பெயர் ஒன்றை அப்போதைக்கு அவனே வைத்துக் கொண்டான். அதுதான் “த்ரக்கு”. “த்ரக்கு”கள் மீதும், அந்த மனிதர்கள் அணிந்திருந்த ஆடைகள் மீதும் அவனுக்கு ஆசை ஆசையாக வந்தது!
இவற்றையெல்லாம் கண்டு பிரமித்துப்போன செரோக்கி தமது பழங்குடிகள் படும் கஷ்டங்களை நினைத்து வருந்துவதா அல்லது தனது முன்னோர்களை நொந்து கொள்வதா என்பதில் தனது மனதைத் தடுமாறச் செய்துவிட்டான்!
(தொடரும்)
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments