Ticker

6/recent/ticker-posts

குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில்


சிவஞானம் தான் முதலில் ஆர்மியின் பிடியில் சிக்கினான். உப்பளங்களின் எல்லையினை ஒட்டி மணற்குன்றுகளின் மேலேறி புதர்களின் மறைவில் நாங்கள் மூவரும் முன்னேறிக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு சிறுநீர் உபாதை ஏற்பட்டது. 

“என்னங்க”, நான் கணவனை பின்னால் இருந்து அழைத்தேன். குள்ளமான நிழல்களை செங்குத்தாகப் பதித்து மதிய வேளை தளர்ந்துதேங்கி நின்றுக்கொண்டிருந்தது. காற்றில் வழக்கமான புழுக்கம். புதர்களின் ஊடே ஒன்றோடொன்று இணைந்துக் கொண்டும் விட்டு விலகிச் சென்றும் ஏராளமான ஒற்றையடிப் பாதைகள் உள்ளன. இரத்த ஓட்டம் நிலைத்த நரம்புகள் போல அவை கண்முன்னே அவையெல்லாம் நீண்டு செல்கின்றன. அது எங்கே செல்கிறது என எனக்குத் தெரியாது. கணவனையும் தமபியையும் பின் தொடரும் வெறும் ஒரு நிழலன்றி நான்  வேறு எதுவுமில்லை. வடக்கு மாகாணக்காரர்கள்தான் நாங்கள் எனினும் இப்பகுதி நாங்கள் யாருக்கும் பரிச்சயமானதல்ல. 

நீரும் நிலமுமாக கூடிக்கலந்து தொடுவானம் வரை விரிந்து கிடக்கும் உப்பங்கழி தொலைவிலல்லாது கண்ணில் தெரிகிறது. அதை ஒட்டி இருக்கும் சதுப்புநிலத்தின் ஓரமாக வளைந்துநெளிந்து தொலைவை நோக்கிச் செல்லும் செம்மண்பாதைகளில் ஆளரவம் ஏதும் தெரியவில்லை. சுழல்காற்றில் மேலெழும்பும் மண் பலநேரங்களில் ஆளை மறைக்கும் உயரம் கொண்டதாக இருந்தது. யுத்தம் முடிவுற்ற போதிலும் ஆர்மியின் லாரிகள் புழுதியெழுப்பியும் குலுங்கியாடியும் ரோந்து சுற்றும் வாடிக்கை இன்னமும் மாறவில்லை. இடைவெளிகளின் நீளம் அதிகமாகியிருப்பது மட்டும்தான். அந்த மாதிரி ஊர்திகளின் கண்ணில் படாமலிருக்க இந்தப் பயணத்தின் பல நேரங்களில் எல்லையற்று காத்திருக்க நேர்ந்ததுண்டு எங்களுக்கு. ஆர்மியின் சோதனைச் சாவடிகள் பலவும் கைவிடப்பட்டிருந்தாலும் சில இடங்களில் அவை உள்ளூர் போலீஸ்காரர்களைத் தாங்கி நின்றிருந்தன. அவற்றையும் தவிர்த்துதான் நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம். 

“அங்கே போகலாம்.” போரில் மேற்கூரை இடிந்து ஆள்புழக்கமின்றி காலியாகக் கிடந்த ஒரு கட்டிடத்தைக் சுட்டிக் காட்டி கணவர் சொன்னார். பயணத்தின் போது வீடுகளின் இதுபோன்ற எலும்புக்கூடுகளை காண்பது இது முதல் முறை இல்லை. கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் இல்லாமல் இப்படிப்பட்ட  நிறைய வீடுகள் இருப்பதாக தம்பி சிவஞானம் சொன்னான். வரப்போகும் எங்களுடைய நெடும்பயணத்திற்கான முன்னேற்பாடுகளுக்காக இந்தப் பாதைகளை அவன் கடந்து செல்வது இது முதல்முறை அல்ல என்பது அப்பொழுதுதான் எனக்குத் தெரிய வந்தது. 

மண்பாதைக்கு குறுக்காக குனிந்து ஓடி நானும் கணவரும் முற்றத்தில் வளர்ந்து நின்ற காட்டுச் செடிகளைத் தாண்டி எப்படியோ வீட்டினுள் புகுந்தோம். அப்பொழுது தம்பி சிவஞானம் கிழிந்து தைத்த ‘பேக்’கினை மார்போடணைத்து அந்த புதர்க்காட்டில் பதுங்கி அமர்ந்திருந்தான். வெய்யிலும் இறந்தகாலமும் சேர்ந்து கரி பூசியிருந்த அவன் முகத்தில் கடைசியாக பார்த்தபோது என்ன தெரிந்தது? எதிர்பார்ப்பு, சலிப்பு, பயம், மரணம்? தெரியவில்லை. விளையாட்டின் இறுதியில் போடப்படும் தவிர்க்கமுடியாத கோல் தான் மரணம் என அப்பா சொல்வதுண்டு. அதை எதிர்பார்த்து நிற்கும் கோல்கீபரின் முகம் தானே அப்பொழுது தம்பிக்கு இருந்தது. 

பல நாட்களாக துவைக்க முடியாததால் கடைசி சொட்டுகள் விழுந்து துளை போட்டிருந்தது உள்ளாடையில். அதை கழற்றாமலே கூட வேலை முடிக்கக்கூடிய நிலைமையில் தான் இருந்தது. தோட்டாக்கள் துளைத்து இடிந்து போன சுவரின் மறைவில் சிறிதுகாலம் முன்புதான் யாரோ பயன்படுத்தியிருந்த தரையில் நான் சிறுநீர் கழித்தேன். பாதி அழிந்த ஒரு அரிசிமாவுக் கோலம் இருந்தது. அதன் மீது படிந்திருந்த கறை அநேகமாக இரத்தமாகத் தான் இருக்கவேண்டும். அதன் மீது போக சங்கடப்பட்டு சிறிது நேரம் தயங்கியதும் ‘சீக்கிரம்’ என துரிதப்படுத்தினார் கணவர். இடம் மாறி அமரக்கூட அவர் அனுமதிக்கவில்லை. இடிந்த சுவர்களுக்கும் ஜன்னல்கள் கழன்ற இடைவெளிகளுக்கும் ஊடாக வெளியே இருந்து பார்த்தால் தெரியாத அப்படியான ஒரு மறைவிடம் வேறு இருக்கவில்லை. இருந்தாலும் அதைக் கண்டுபிடிக்கும் சாவகாசம் எங்களுக்கில்லை. கோலத்தின் மேலாக படிந்திருந்த இரத்தக் கறையின் மீது நான் வெகு நேரமாக அடக்கி வைத்திருந்த மூத்திரம் பெய்தேன். அப்பொழுது சிறிதும் எதிர்பார்த்திராத கொஞ்சமும் விருப்பப்படாத மாதாந்திர விலகலின் உதிரத்தின் சாயல் தெரிந்தது. ‘அடக் கடவுளே’ என்றேன்  என்னையுமறியாமல். ஒருபோதும் தங்கி நிற்கும் வாயப்பின்றி வெறுமனே கடந்து போக எதற்கு இந்த ஒழுக்கையும் சுமந்து அலையவேண்டும்? பகல்நிலவைப்போல பின்னால் தெரிந்த கோலத்தின் நிழலின் மேல்  படிந்திருந்த இரத்தக்கறையின் மீது என் இரத்தத்தையும் கூட வீழ்த்தினேன். இதுபோன்ற நேரங்களில் வழக்கமான வலி வாளைச் சுழற்றியபடி அடிவயிற்றில் புகுந்தது. பேக்கில் அடுக்கி வைத்திருந்த  துணிகளில் இருந்து இழுத்தெடுத்த போது கையில் கிடைத்தது தலை துவட்டும் துண்டாக இருந்தது. அதை நீளவாக்கில் கிழித்து உள்ளாடையின் முன்பக்க திறப்புகளை மறைத்தபடி இரு முனைகளையும் செங்குத்தாக  அரைஞாண் கயிற்றில் இறுக்கிக் கட்டினேன். 

அந்த நேரம் தான் புதர்க்காட்டிலிருந்து ஏதோ சத்தம் கேட்டது. எழத்துணிந்த என் தோள்களைப் பற்றி கீழே இழுத்தார் அவர். 

“எழுந்திருக்காதே.”

“நம்ம தம்பி..”

புதர்க்காட்டின் திசையில் ஓரக்கண்ணால் பார்க்கவும் துணிவற்று நாங்கள் அந்தத் தரையில் குறுகி அமர்ந்திருந்தோம். உண்மையைச் சொன்னால் அப்பொழுது தம்பியை எண்ணியில்லை நாங்கள் பயந்தது, தம்பியை கண்டவர்கள் யாராக இருப்பினும் அவன் வழியாக அவர்கள் எங்களையும் கண்டுபிடித்து விடுவார்களோ என்பதாகத் தான் பயந்தோம். உயிரை கையில் பிடித்து ஓடிக்கொண்டிருக்கும் மனிதனுக்கு பெரிய மகத்துவம் ஏதும் இருக்க முடியாது. 

 தாக்குதலின் சில கூக்குரல்கள் எழுந்தாலும், நிசப்தத்தில் அலையும் காற்றின் கிசுகிசுப்பில் ஒடுங்கும் வழக்கமான அமைதிக்கு சுற்றுப்புறம் திரும்ப அதிக நேரம் பிடிக்கவில்லை. 

நிறைய நேரத்திற்கு பிறகு தான் நாங்கள் மீண்டும் புதர்க்காட்டுக்குள் போனோம். அப்பொழுது சிவஞானத்தை அங்கே காணவில்லை. செடிகள் முறிந்தும் மடங்கியும் கிடந்தன. மணல் நிலத்தில் இழுத்துச் செல்லப்பட்ட தாரைகள் தெரிந்தன. அவன் அங்கே எங்கேயுமில்லை. 

ரோந்து சுற்றிக்கொண்டிருந்த படைகள் அவனை கண்டுபிடித்திருக்கிறது. 

“சத்தம் போடக்கூடாது.”

அழுகைக்கு முன்னோடியாக என் முகம் கோணுவதைக் கண்ட கணவர் என் வாய் பொத்தினார். வெளியுலகிற்கு உரிததான எல்லா கூப்பாடுகளையும் உள்ளுக்கள்ளேயே அடக்கத் தொடங்கி காலம் பலவாயிற்று. இப்போதைக்கு யுத்தம் மட்டும் தான் முடிவிற்கு வந்துள்ளது. அது தந்த வலியும் வடுக்களும் இன்னமும் மீந்திருக்கின்றன. அப்படியும் தம்பியில்லாத வெறுமை என்னை உடைத்துப் போட்டது. 

 “பாக்கறதைவிட பாக்காம இருக்கறதுதான் நல்லது.” கணவர் ஆறுதல் சொன்னார்.

பார்க்கமுடியாத கோலத்தில் தம்பியைப் பார்ப்பதை விட பார்க்காமல் இருப்பது தான்  நல்லது. மனிதனுக்கு எப்படியாகிலும் கொஞ்சம் நிம்மதி தேவைப்படுகிறதே. 

“வேகமா நட” கணவர் அவசரப்படுத்தினார்.

அவர் என்னை பெயர் சொல்லி விளித்த காலம் கடந்து விட்டது. இப்படியே போனால் மதிவதனி என அழகாக அழைக்கக் கூடிய அந்தப் பெயரை நானே கூட மறந்து போகக் கூடும். சென்னை லயோலா கல்லூரி வராந்தாக்களில் தோழிகளின் நீண்ட அழைப்புகளின் நினைவுகளாக அது ஒடுங்கியிருக்கிறது. வாழ்க்கை தலைகீழாக மறிந்ததும் பெயரும் மறந்து போய் மறைந்து விட்டது. 

சிவஞானத்தை இழுத்துச் சென்ற அடையாளங்களைப் பார்த்து அதே திசையில் தான் அவர் நடந்துக் கொண்டிருந்தார். மண்பாதைக்கு இணையாக புதர்க்காட்டின் மறைவில் நாங்கள் முன்னேறினோம். வழியில் எங்காவது ஆர்மியின் லாரியை நாங்கள் எதிர்பார்த்தோம். லாரியை நெருங்கும்போது அநேகமாக தம்பியின் உடலை விட்டு உயிர் அதுபாட்டுக்கு பறந்திருக்கும். அப்படி ஏதாவது மிச்சமிருந்தாலும் அது வெறும் உயிர் மட்டுமாகத்தான் இருக்கும். மணல் தரையில் மல்லாக்கப்போட்டு கையையும் காலையும் இழுத்துப்பிடித்து கழுத்து நெரித்துக் கொல்வது எளிது. மரணம் நிகழும் அதே திசையில் மணல் தரையின் மேல் துடிக்கையில் ஆதாகவே தனக்குத்தானே ஒரு குழியினையும் தயார் செய்து தரும். அடையாள அட்டை கைவசமில்லாதவர்கள்  ஆள் நடமாட்டமற்ற இடங்களில் யார் கவனத்தையும் ஈர்க்காதவாறு சிக்கினால் ஆர்மியாட்கள் ஒருபோதும் அவர்களுக்காக துப்பாக்கி குண்டுகளை வீணாக்குவதில்லை. துப்பாக்கி குண்டு அதிகாரபூர்வ பயன்பாட்டிற்கு மட்டுமே. அடித்தோ, கோடாரியால் வெட்டியோ, அதிகாரபூர்வமற்ற வழியில் முடித்து விடுவார்கள்.பிறகு கல்லைக் கட்டி கடலில் மூழ்கடித்தால் வாழந்ததை நிரூபிக்க முடியாதவன் ஆவணமாகாமல் அரங்கம் விடுவார். 

கொஞ்சம் முன்னால் சென்றதும் பாதையில் இருந்து ஒரு ஓலமெழுந்தது. தலை வெளியே நீட்டி பாதையைப் பார்க்கும் தைரியம் அவருக்கு இருக்கவில்லை. அங்கே ஒரு ராணுவ லாரி நின்றுக்கொண்டிருக்கும் என்பது உறுதி. அவர்களின் சமீபத்திய இரை தம்பியைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும். கணவர் சத்தமின்றி நாங்கள் நிற்குமிடத்தை இன்னும் கொஞ்சம் பின்பக்கமாக மாற்றியமைத்தார். தம்பி அடிஉதையை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்த, அவனுடைய கூக்குரல் எழுந்துக்கொண்டிருந்த அருகாமையை கடந்து நாங்கள் மெதுவாக பின்நகர்ந்தோம். தரையோடு எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஒட்டி படுத்தார் கணவர், என்னையும் அப்படியே செய்யச் சொன்னார். உப்புக்காற்றைப் போல வரண்ட மூச்சுக்காற்றினால் சருகுகளுக்கு துளையிட்டு நாங்கள் அப்படி கொஞ்சம் நேரம் படுத்திருந்திருக்கலாம். ஒருவேளை அது நெடிய பல மணிநேரங்களாகவும் இருக்கலாம். தம்பியின் வலியை விட அது நெடியதாக இருக்க முடியாது. உண்மையைச் சொன்னால் லாரி நகர்ந்து செல்லும் சத்தம் கேட்டபொழுதுதான் நான் வலியின் மயக்கத்திலிருந்து நிஜத்திற்கு மீண்டேன். 

உப்பங்கழியின் திசையில் நீண்டிருக்கும் மண்பாதையில் அது எழுப்பிய புழுதியின் பிரளயத்தில் மூழ்கியும் மிதந்தும் லாரி நகர்ந்து சென்றது. நாங்கள் எட்டிப் பார்த்த பொழுது அதன் சேறு படிந்த குண்டி பறக்கும் புழுதியில் உரசி முன்னேறிச் மறைந்துக் கொண்டிருந்தது.

இரவில் தொடங்க இருக்கும் பெரும்பயணத்தில் துணையாக இப்பொழுது குடும்பத்திலிருந்து நாங்கள் இருவர் மட்டுமாக சுருங்கி விட்டோம். ஆடுபுலி ஆட்டம் போன்று, எதிர்பாராமல் பலர் பாதியில் வெட்டுப் பட்டனர். நாங்கள் புதருக்குள் மறைந்திருந்து சிறிது நேரம் சத்தமின்றி அழுதோம். 

செங்குத்தாக விழுந்துக் கொண்டிருந்த வெய்யில் படிப்படியாக சாயத் தொடங்கியிருந்தது. காட்டினுள் மஞ்சள் வண்ணம் பரவிக் கொண்டிருந்தது. சோகம்கவிந்த கடற்காற்று உப்பங்கழியில் சுற்றித்திரிந்து மிச்சமான கூர்மையுடன் புதர்க்காட்டுக்குள்ளும் புகுந்தது. கணவர் மெதுவாக எழுந்து லாரி நின்றிருந்த பக்கமாக நகர்ந்தார். நான் உட்கார்ந்த இடத்திலிருந்து அசையவில்லை. அபசகுனம் போன்ற புழுதிப் படலத்தின் முடிவில் தெளிந்து வந்த பாதையில் எதற்காகவோ தேடுவது போல நடந்தார். சிறிதுநேரம் மட்டுமே அங்கே இருந்த அவர் திரும்பி வந்தபோது கையில் எதையோ மறைத்துப் பிடித்திருந்தார். சுருட்டிய கைப்பிடியினுள் குரங்கு பாம்பை என்பதுபோல எதையோ இறுகப் பற்றியிருப்பது போல் தெரிந்தது. 

“என்ன அது?” நான் கேட்டேன். 

ஒன்றும் சொல்ல முடியாததால் என எண்ணுகிறேன், அவர் வெறுமனே கையை விரித்துக் காட்டினார். சிவஞானத்தின் முன்வரிசைப் பற்கள் அவை. காய்ந்த இரத்தத்தில் பொதிந்து, செத்துப் பிறந்த குழந்தை போல அது கையில் அசையாமல் இருந்தது. முதல் தாக்குதலில் இல்லை இது நடப்பது. கடலில் ஆழத்தில் மூழ்கடிக்கப்பட்ட  பிணம் எப்படியாவது மேலே வருமாயின் அடையாளம் தெரியாமல் இருக்க அதன் சில உறுப்புகளை உரித்தெடுத்து விடுவார்களாம்! உறுதியாகியது, அடையாளம் காட்ட ஒரு  அட்டை இல்லாத உயிர் ஒன்று இதோ ஊரை  விட்டு ஆகாயத்திற்கே திரும்பியிருக்கிறது. கணவனின் வெடித்த உதடுகளில் அந்நேரம் தோன்றியது அழுகையா இல்லை சிரிப்பா, யாருக்குத் தெரியும்? ஒருவேளை அது ஒரு சிரிப்பாகக் கூட இருக்கலாம்.  

கடற்கரையின் திசையை நோக்கி புதர்க்காட்டுக்குள் நாங்கள் நடந்தோம். தம்பியின் பேக் எங்கள் பயணத்தில் எங்கேயும் காணக் கிடைக்கவில்லை. ஏதாவது தடையங்கள் கிடைக்குமென்று லாரியில் தூக்கிப் போட்டு கொண்டு சென்றிருக்கலாம். அதிலிருந்து என்ன கண்டெடுக்கப் போகிறார்கள் அவர்கள்? விட்டு விட்டு நடந்த யுத்தங்களின் சீசா விளையாட்டின் முடிவில் மிச்சமான நான்கு நரைத்துப் போன லுங்கிகளும் ஓட்டை விழுந்த பணியனும் கிடைத்திருக்கும். தேய்ந்துபோன டூத் பிரஷைப் பார்த்து அவர்கள் நிச்சயம் திடுக்கிடுவார்கள். அது என்ன ஆயுதம் என உலகில் ஒரு விஞானியாலும் கண்டுபிடிக்க முடியாது. அவனுடைய பிரேதத்தில் கல்லைக் கட்டி உப்பங்கழியின் ஆழமான இடமாகப் பார்த்து எறியும்பொழுது, அந்த கிழிந்த பேக்கையும் அவன் கழுத்தில் சுற்றிக் கட்ட அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். 

புதர்க்காட்டின் அடர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து டூத் பிரஷின் முனை போன்று சிறுத்து முற்றிலும் முடிந்துபோனது. பேக்குகளை கீழே வைத்து சிறிது நேரம் உட்கார்ந்தோம். இருட்டாமல் காட்டிலிருந்து வெளியேறி கடற்கரையை அடைய முடியாது. கடற்கரையை ஒட்டிய தரிசு நிலத்தில் ஒரு பக்கம் முழுவதும் கண்ணிவெடி புதைக்கப்பட்டிருக்கிறது. போர் முடிந்தபின் அரசாங்கம் வைத்த எச்சரிக்கைப் பலகைகள் அங்கே  இருக்கின்றன. அதன் ஓரமாகச் சென்றுதான் இரவு நாங்கள் கடற்கரையை எட்டவேண்டும். கண்ணிவெடிகள் இருப்பதால் அங்கே ரோந்து சுற்றும்  வழக்கமில்லையாம். போர்முயக்கங்களின் முடிவில்  மோனத்திலாழ்ந்த பகுதிகளில் மனித நடமாட்டம் குறைவெனினும் அதெல்லாம் தோற்றமதிப்பில் காண எங்களுக்கு அனுமதியில்லை. டக்ளஸ் விநாயகத்தின் அறிவுறுத்தல்களுக்கு புலியின் துல்லியம்.

“கொஞ்சம் தண்ணி எடு”, கணவர் கேட்டார். 

பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து நான் தண்ணீர் எடுத்து நீட்டினேன். பிளாஸ்டிக் கவரிலிருந்த காய்ந்துபோன இரண்டு ரொட்டித் துண்டுகளையும் எடுத்தேன் எனினும் அவர் வேண்டாமென்று சைகை செய்தார். வியர்வைக்கு மேலாக புழுதியும், புழுதிக்கு மேலாக மீண்டும் வியர்வையும் போர்வையின் மடிப்புகள்கள் போல, துயரத்தின் அடுக்குகள் அந்த முகத்தில் தெரிந்தது. 

அவர் மீது சாய்ந்து நான் கொஞ்சம் நேரம் கண்ணயர்ந்தேன். இரண்டு நாட்களாகத் தொடர்ந்த பல்வேறு பயணங்கள் என்னை களைத்துப் போகச் செய்திருந்தன. அடிவயிற்றின் அங்கலாய்ப்பும் சேர்ந்துக் கொள்ள நான் முற்றிலும் நொறுங்கி விட்டேன். அங்கே உதிரத் துளிகள் கசியத் தொடங்கியதும் மண்டைக்குள் எறும்புகள் ஊரத்தொடங்கும். Menstrual depression என்றெல்லாம் கவர்ச்சியாக அன்று கல்லூரியில் சொல்லப்பட்ட விஷயத்தை இன்று பார்த்து உணர்பவள் அந்த கல்லூரி மாணவி அல்ல. சொந்த முகத்தில் ஒட்டிக்கொண்டிருப்பது ஜனத்தொகைப் பட்டியிலில்லாத அனைவரது கண்ணாடித்துண்டுக் கண்களுமாகும். 

விழித்தபோது நீலக் கிரகணம் போன்று சுற்றுப்புறம் முழுவதும் மயங்கிக் கிடப்பதைக் கண்டேன். அதை இரவு எனச் அழைக்கலாமா எனத் தெரியவில்லை. கணவர் அப்பொழுதும் தூங்காமல் உட்கார்ந்திருந்தார். கையில் வைத்திருந்த ‘பேக்’கில் வாரித் திணித்திருந்த எதையும் கலைக்காமல் நகைகள் வைத்திருந்த பொட்டலத்தை அவர் வெளியே எடுத்திருந்தார். படகில் ஏறும் முன்  அதை டக்ளஸ் வினாயாகத்திடம் கொடுத்ததும் பயணத்திற்கான கடைசி ஒத்தப் பைசாவும் நாங்கள் கொடுத்துவிட்டோம் எனலாம். சென்னையில் இருக்கும் அப்பா தந்தது இரண்டு இலட்சம் ரூபாய். டக்ளஸின் ஆட்கள் அது வாங்கிச் செல்லும்போது தன்னுடைய வாழ்நாள் சேமிப்பையும் தாண்டி பெரிய கடன் சுமை அப்பாவின் மீது விழுந்தது எனக்குத் தெரியும். 

“என் பொண்ணுக்கு ஒரு வாள்கை கெடச்சா அதுவே போதும்”, அப்பா டக்ளஸின் ஆட்களிடம் சொன்னது இது மட்டும் தானாம். 

உலகின் மற்றொரு பாதியை நோக்கித் தான் பயணம் என்பது மட்டும் தான் அப்பாவிற்கு தெரியும். அங்கே வசந்தத்தை தட்டில் ஏந்தி மகளுக்கும் மருமகனுக்குமாக காத்திருக்க யாரும் இல்லை என்பது அவருக்கு எப்படித்தான் தெரிய முடியும். கிறிஸ்துமஸ் தீவுகள் என்னவென்று படகில் ஏறும் யாருக்கும் பெரிதாகத் தெரியாது. எரியும் நெருப்பிலிருந்து தப்பி குதிப்பவனுக்கு எண்ணைச் சட்டியும் சொர்க்கம் தான். பூமியை இருந்திருந்தபடியே எதிர்பக்கம் சூழற்றினாலும் அவர்களுக்கு என்ன பாதிப்பு வந்து விடும். பல கடல்களையும் தீவுகளையும் தாண்டிப் போகவேண்டுமென்றால் அப்படியே ஆகட்டும். கூடிக்கழித்துப் பார்த்தால் அப்படி வெளியேறினவர்களுக்கு ஊரிலும் பேரிலும் என்ன இருக்கிறது! அடியெடுத்து நடக்கையில் மண்ணில் பதியும் கால்தடங்களுக்குத் தெரிய வேண்டுமா அரசியல் சட்டங்கள்? துப்பாக்கித் தோட்டாவிற்கு தப்புவதே ஆடம்பரமாகிப்போன ஒரு இடத்திலிருந்து விடுதல் கிட்டுமாயின் எந்த அட்சக்கோடும் சொர்க்கம் தானே. 

“வா, போலாம்” கணவர் சொன்னார். 

முன்னால் இருக்கும் நரைத்த இருட்டிற்குள் நான் எழுந்தேன். 

வெறும் ஒரு திருமணத்தின் காரணமாக ஜாடிக்குள் சிக்கிய கரப்பான் போன்று மகள் ஒரு தீவிற்குள் சிக்கி விடுவாள் என ஒரு போதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் அப்பா. அவர் நடத்தி வந்த கடையை வீற்றுத் துலைத்திருந்தார் அதற்காக. எனக்கு சோரிட்டு வளர்த்தது அது தான். உள்ளே போன உணவு வெளியே விரித்திருந்த இளமை கொண்டுதான் நான் என் காதலை சாதித்திருந்தேன். கடல் தாண்டி எதற்காகவோ வந்த ஒருவனுக்காக அனைத்தையும் இழக்க தயாரானது… அப்படியெல்லாம்தான் அப்பாவை எதிர்க்கும் துணிவு வந்தது. அப்பாவின் சம்மதமின்றி தானாகவே கணவனை தேர்ந்தெடுக்கும் தைரியம் கிடைத்தது. பாவம் அப்பா, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு சும்மாவே இருந்தார். 

 முள்வேலி அமைத்து கண்ணிவெடி புதைக்கப்பட்ட நிலம் என எச்சரிக்கைப் பலகை இருந்தாலும், உண்மையில் அதன் எல்லைகள்  திட்டவட்டமாக ஆர்மிககு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் வழி என்று எண்ணி கால் பதிப்பது எங்கே கொண்டுசெல்லும் எனச் சொல்ல முடியாது. கரிய பனைமரங்களின் நிழல்கள் நெடுகிலும் வீழ்ந்திருந்த ஒற்றையடிப் பாதையில் நாங்கள் உடல் குறுக்கி நடந்தோம். சாதாரணமாகவே பிறரின் பார்வையில் படாத படி சுருங்கியொடுங்கி  நடப்பது தான் எங்களின் பழக்கமாக மாறிவிட்டிருந்தது. சொந்த உடலின் விட்டம் எங்களுக்கு கஷ்டமானது. 

தொடரும் யுத்தங்களின் இடைவெளிகளில் கணவன் வேடமிட்டாடும் அவருக்கு என்னை இப்படி கட்டிப்போட மட்டுமே சாத்தியமானது. தன்னுடைய உருமறைப்பு சீருடையிலிருந்து லுங்கிக்கு மாறவே அவருக்கு நீண்ட நாட்கள் பிடித்தது. அந்த நாட்களின் இரவுகளில் அவருடைய நெஞ்சிற்கான ஆர்மியின் தோட்டாக்களின் வெடிச்சத்தங்களை  நெஞ்சில் ஏந்திக்  கொண்டதும் நிதம் நிதம் செத்து வீழ்ந்ததும் நான் தான். இறுதிப் போரின்போது மட்டும் தான் சீருடை களைந்து லுங்கிக்கு மாறி சிவிலியன் ஆக அவர் ஒப்புக்கொண்டார். எனினும் எப்பொழுதும் நான் அவருடன் இருக்கவே விரும்பினேன். இருக்குமிடத்தில் இருந்தபடியே என்னை ஆற்றுப்படுத்தவே  பாடுபட்டார் என் தந்தை, முன்னோக்கி இழுக்க கணவன் முயன்றார். நிற்க வைக்கும் கால்களை விட நடக்கச் செய்யும் கால்களின் சுகம்  தான் என்னை சந்தோஷமடையச் செய்தது. காதலின் சுகமே அது தானே. ஆனால் சமீப நாட்களில் அடி வயிற்றிலிருந்து வீணாய் வழியும் ஏமாற்றத்தினூடே ஒரு குழந்தையின் அழுகை ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. வேட்கைகள் எதிர்முனைக்கு நகரத்தொடங்கியது போல ஒரு தோற்றம். கால்களுக்கு இப்போது நடப்பதற்கல்ல ஓரிடத்தில் நிற்கவே விருப்பம். 

எப்படியாயினும் எங்கள் பயணம் அதன் முக்கிய பகுதியை எட்டிவிட்டது. 

பனையோலைகளில் சுழல்காற்று ஊளையிட்டுக் கொண்டிருக்கிறது. இருட்டின் நிழல்களை மிதித்துக் கடப்பதற்கேற்ப கடற்கரை நெருங்கி வந்துக்கொண்டிருக்கிறது. மணல்வெளிக்கு நகர்கையில் கவனம் தேவை என்றார் அவர். டக்ளஸின் திட்டம் அவர் மனப்பாடம் செய்திருந்தார். மீன்பிடிப் படகு நூறு மீட்டருக்கும் மேல் கடலுக்குள் நிற்கும். அது வரையில் கட்டுமரத்தில் தான் பயணம். கடலோரக் காவல்படை ரோந்தின் கண்ணில் படாமல் காரியம் சாதிக்க வேண்டும். அதனால் அதிக நேரம் படகு அங்கு நிற்க முடியாது. டைமிங் ரொம்பவும் முக்கியம் என அவர் திரும்பத் திரும்பச் சொன்னார். தொலைவில் டக்ளஸ் விநாயகத்தின் டார்ச் ஒளிர்ந்ததும் மணல்வெளியில் புகுந்து ஓட வேண்டும், என்னதான் நடந்தாலும். கட்டுமரம் தயாரானதும்தான் டார்ச் வெளிச்சம் தெரியும். ஐந்து செகண்ட் இடைவெளியில் நான்கு முறை ஒளிரும். அதற்குள் சென்றடையும் தொலைவில்தான் கட்டுமரம் இருக்கும். இடைவெளி அதிகமானால் ஆபத்து என அறிக. அப்படி நேர்ந்தால் மறைந்திருக்கத் தோதாக கரையோரமாக ஓட வேண்டும். 

வெளிச்சத்திற்காக நாங்கள் காத்திருந்தோம்.

நான் அவரது தோளில் கை வைத்தேன். ஒரு வாழ்வு முழுவதும் காணத்தகாதவற்றையே காண நேர்ந்த அவரை ஏனோ நான் அந்நேரம் முத்தமிட்டேன். ஒருவேளை வேறு எதுவுமே பயனற்றுப் போகும் ஒரு கணத்தில் ஒரு பெண்ணால் ஆணுக்குச் செய்யமுடிகின்ற ஒரே தீர்வாக அது இருக்கலாம். வலது கையை நீட்டி அவர் என் முகத்தை வருடினார். யுத்தம் கொண்டு சென்ற வீரல்களைத் தவிர மிச்சமிருந்த விரல்கள் வந்து என்னைத் தீண்டின. 

“நீ படிச்ச படிப்பெல்லாம் வீணாப் போச்சு”, குற்ற உணர்வுடன் சொன்னார் அவர். 

என் கல்லூரியின் வராந்தா எழுந்து வந்து அவர் முகத்தில் ஓங்கி அறைந்திருக்க வேண்டும். அப்படியானால் அது எப்பொழுது நடந்திருக்கும்? அடிக்கடி தொடர்ந்து உணர்வதைத்தானே மனிதன் முக்கிய தருணங்களில் ஒப்புக்கொள்கிறான். நாட்டைப் பிடிக்க போராடிக்கொண்டிருக்கையிலும் இது போன்ற சாதாரண கவலைகளால் சஞ்சலம் கொண்டிருந்தாரா என கணவர்! முக்கிய தருணங்களிலானாலும்  பிரியமானவர்கள் விளக்கு போன்று நாம் முன் தெளிந்து தெரிவது சுகம் தான். 

திடீரெனத்தான் தொலைவிலிருந்து வெளிச்சம் வந்தது. 

“எழுந்திரு, ஓடு” ஒரு நொடியில் அவர் என் தகவல் மீது பேக்கை மாட்டி என்னை பிடித்து தூக்கி தள்ளினார். அடுத்த நான்கு வெளிச்சங்கள் மின்னும் முன் இலக்கை அடைய நாங்கள் ஓடினோம். 

“என்ன ஆனாலும் நீ டக்ளஸ் கிட்டே போயிடணும். நீ இல்லாம அவன் இங்கிருந்து போகமாட்டான்”, அவர் சொன்னார். 

என்னுடன் வரப்போகும் ஒருவர் இப்படிச் சொல்ல வேண்டியது இல்லையே என நினைத்தாலும் நான் சரி என்பதாக ம என்றேன். தன் உடலால் மறைத்து தான் அவர் என்னை முன்னோக்கிச் செலுத்தினார். தொலைவிலிருந்து இரண்டாவது முறையாக டார்ச் ஒளி மின்னுவதற்கு பதிலாக எதிர் திசையிலிருந்து படகின் சத்தம் தான் வந்தது. 

“வேவ் ரைடர்” எனச் சொல்வது மட்டும் தான் நான் கேட்டேன். அவர் சட்டென என்னை மணல்பரப்பிலிருந்து கரையை நோக்கி தள்ளி விட்டார். நான் ஒரு குழிக்குள் போய் விழுந்தேன். என்ன நடக்கிறதென நான் உணரும் முன்னே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அதற்கு முன் நானிருந்த குழிக்குள் என்னமோ வந்து விழுந்தது. துழாவிப் பார்க்கையில் அவர் கையிலிருந்த பேக் என் கையில் சிக்கியது. பிடிக்கப்படும்போது  எந்த சான்றுகளும் அவர் பக்கம் இருக்கக் கூடாதென அவர் உறுதிகொண்டிருக்க வேண்டும். எதிரிபாராமல் வந்தது காவல்படையின் ரோந்துப் படகாக இருக்க வேண்டுமென ஊகிக்கும் முன்னர் தோட்டாக்கள் துளைத்த வெறும் துண்டுத் துணியாக மாறியிருந்தார் அவர். அவர்கள் கரையேறி வந்திருக்கலாம். குழிக்குள் கடந்து உரத்துக் கேட்ட ஒலிகள் சிறிது நேரதிதிற்கு பிறகு நகர்ந்து சென்றன. 

விலகிச் செல்லும் படகின் ஓசை தேயும் வரை நான் அசையாமல் கிடந்தேன். தன்னைத் தவிர வேறொருவர் உடனிருக்கிறார் என சந்தேகம் கொள்ள எந்த வாய்ப்பையும் அளித்திருக்க மாட்டார் அவர். சுடப்பட்ட இடத்திலிருந்து ஒரு இஞ்ச் கூட அவரை நகர்த்தியிருக்கவில்லை அவர்கள். ஒரு கைக்குட்டையைப் போல தொய்ந்து கிடந்த அவருக்கு முகம் பெரும்பகுதி  இருக்கவில்லை. நான் திகைத்து நின்றுக் கொண்டிருந்தபோது தொலைவில் வெளிச்சம் மீண்டும் மின்னியது. அதுதான் என்னை தலைகீழாக மாற்றியது. அடிவயிற்றில் புக அனுமதி வேண்டி அருவமாக நிற்கும் குழந்தை என்னை முன்னோக்கி தள்ளியது. முழு வலுவையும் திரட்டி நான் ஓடினேன், டக்ளஸின் பாதங்களில் சென்று வீழும் வரை.  

“கட்டுமரத்தை எடு” டக்ளஸ் யாரிடமோ உறுதியாக கிசுகிசுத்தார். யாரோ என்னிடம் இருந்த பேக்கை வாங்கி என்னை கட்டுமரத்தின் இழுத்து ஏற்றினார். நகை இருந்த துணி முடிப்பை தூக்கிப் பிடித்து ‘நகை என் கையில’ என நான் சொன்னாலும் டக்ளஸ் எதையும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.                     

சுமார் ஐம்பது மீட்டர் தூரம் சென்றதும் படகு கண்ணில் பட்டது. கட்டுமரம் படகை நெருங்கியபோது டக்ளஸ் என்னிடம் இருந்த நகை முடிப்பை கேட்டு வாங்கிக் கொண்டார் 

பைலட் லாடர் வழியாக பிடித்து மேலேற்ற குக்கும் போசனும் டெக்கில் இருந்தனர். 

“மெதுவா வாங்க” டெக்கிலிருந்து படிக்கட்டுகள் வழியாக கலிக்கு நடக்கையில் குக் சொன்னார். போசன் வேறு வழியாக எங்கோ போய் விட்டார். என்னை கேபினுக்கு அழைத்துச் சென்றார். அழுகின மீன் மற்றும் கடல் சேற்றின் நாற்றம் மூக்கை எட்டியதும் வாந்தி வரும்போல் இருந்தது. கலியை எட்டியதும் குக் அங்கே இருந்த ஒருவரை வணங்கினார். 

“அவர்தான் ஸ்கிப்பர், வணக்கம் சொல்லுங்க” அவர் என் காதில் கிசுகிசுத்தார். 

டெக் ஹேன்ட் என் கையிலிருந்த பேக்கை வாங்கிக் கொண்டார். அவரிடமிருந்து அதை ஒரு சீ மேன் வாங்குவதைக் கண்டேன். பதினேழாவது கேபின் எனக்காக திறந்து கிடந்தது. இரண்டு பக்கங்களிலும் இருந்த பங்கர் பெட் களில் ஆட்கள் குறுக்கும் நெடுக்குமாக படுத்திருந்தனர். ஊசி குத்தும் இடம் கூட இல்லை எனலாம். எல்லையற்ற கடலை நோக்கி திறக்கும் போர்ட் ஹோல் மனிதர்கள் நிறைந்து அடைந்து போயிருந்தது. 

வெளி மூச்சினால் எடை கூடியிருந்த காற்றை மெதுவாக உள்ளிழுத்து அந்த மங்கிய வெளிச்சத்தில் 150 டன் எடைத் தொன் கொண்ட அந்தப் படகின் தரையில் நான் குந்தி அமர்ந்தேன். அசையும் அட்சக்கோட்டில் நகரும் இவ்விடத்தில் நான் எனது குடியுரிமையினைக் கண்டடைந்தேன். 

மலையாளம் : வி கே கே ரமேஷ்   
தமிழ் மொழியாக்கம் : அரவிந்த் வடசேரி
solvanam


 



Post a Comment

0 Comments