ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவனுக்கு மறுமையில் பயனளிப்பது, "ஸதகதுல் ஜாரியா" என்றழைக்கப்படும், அவன் இவ்வுலகில் செய்துவிட்டுப் போகும் நிலையான தர்மமும், பயனளிக்கும் கல்வியும், அவனுக்காகப் பிரார்த்திக்கும் வகையில் அவன் வளர்த்து விட்டுச் செல்லும் அவனது பிள்ளைகள் என்ற மூன்றுமாகும். அவன் இறந்ததும் இவற்றைத் தவிர, மற்ற அனைத்தும் அவனிடமிருந்து விலகிவிடுகின்றன என்பதாக அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறிச் சென்றார்கள்.
நிலையான தர்மம் என்பது, மனிதன் இறந்த பிறகும், பிற மனிதர்கள் மட்டுமன்றி உயிர் வாழ்வன அனைத்துக்கும் தொடர்ந்து நன்மைகளைத் தரக்கூடிய ஒன்றாகும். அவ்வாறான நற்செயல்கள் இவ்வுலகில் மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும் பயனளிக்கும் காலம் வரை, அதன் நன்மைகள் இறந்து மறுவுலகை அடைந்த மனிதனைச் சென்றடையும் என்பது பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதன் பொருளாகும்.
புத்தகங்களும், பத்திரிகைகளும் பெரிதாக புழக்கத்தில் இல்லாத கணினி யுகத்தில் இப்போது நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இந்த யுகத்தில் சஞ்சரிக்கும் இளைஞர்களாகட்டும், முதியவர்களாகட்டும் பத்திரிகைகள் புத்தகங்களை வாசிப்பதிலிருந்தும் இப்பொழுது பின் தள்ளப்பட்டுள்ளனர் என்பதுதான் யதார்த்தம்! பத்திரிகை, புத்தகங்கள் வாசிப்பதை விட, இன்றைய மனிதன் இணையத்துக்குள் நுழைந்து, சமூக ஊடகங்களுக்குள் உலா வருவதை வழக்கப்படுத்திக் கொண்டுள்ளான்.
இப்போது எழுதக்கூடியவர்கள் யாராக இருப்பினும் தமது நல்ல கருத்துகளை, நற்சிந்தனைகளை பிறருக்கு வழங்குவதற்கு மிகவும் இலகுவானதொரு வழியாக கையடக்கத் தொலைபேசிகளையும், சமூக வலைதளத்தையும் பயன்படுத்துகின்றனர்!
எமது சிந்தனைகளை பிறருக்கு வழங்கும் வாய்ப்பாகவும், எமது கருத்துக்களை நாளை வரும் சந்ததிக்கு நிலையாக வைத்துச் செல்லும் பொக்கிஷமாகவும் இணையம் திகழ்கின்றது.
புத்தகங்கள் தீக்கிரையாகலாம், கரையானுக்கு உணவாகலாம்; ஆனால் கணினியில் ஆவணப் படுத்தப்படுபவை காலத்தால் அழிந்துவிடாமல், எங்காவது ஓரிடத்தில் நிலைத்திருக்கப் போகின்றது.
நமது நல்ல பல சிந்தனைகளை ஆக்கங்களாக இணையத்தில் பதிவிடுவதன் மூலம், இதனோடு இணைந்திருக்கும் கோடிக்கணக்கான வாசகர்கள் அவற்றைப் பார்ப்பார்கள், படிப்பார்கள். அதனை அனுசரித்து நடப்பார்கள்.
எதிர்கால சந்ததிக்கு பயன் தரும் வகையிலான இவ்வாறான நல்லாக்கங்கள் பாதுகாக்கப்பட்டு, நிலையான தருமமாக என்றைக்கும் நீடித்திருக்கும்.
மரணம் மனிதன் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் நிச்சயமானது. நாம் உலகிலிருந்து மறைந்துவிட்டாலும் எமது நற்சிந்தனைகள் இணையத்துக்குள் நிலைத்திருக்கும் என்பதை உணர்வோம். அதனால், இணையத்தில் பதிவிடுகின்றபோது எப்போதும் நல்லதையே பதிவிடுவோம்!
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments