இரண்டு பதவிக்காலங்களை அனுபவித்த பின்னர், பதவி விலக நேர்ந்த மிதவாதி, ஹசன் ரூஹானி என்பவருக்குப் பதிலாக ஜனாதிபதியாக அமர்த்தப்பட்ட இப்றாஹிம் ரைஸி, 1989 முதல் 1994 வரை தெஹ்ரானின் தலைமை வழக்கறிஞராகவும், 2004 முதல் ஒரு தசாப்தத்திற்கு நீதித்துறை ஆணையத்தின் துணைத் தலைவராகவும், 2014ல் தேசிய அட்டர்னி ஜெனரலாகவும் இருந்தவராவார். இவரின் மரணச் செய்தி, சர்வதேச அதிர்வலைகளை ஏற்படுத்தும் நிலை மிகக் குறைவானது என்றே நம்பப்படுகின்றது.
மிகவும் கடுமையான முறையில் அரசால் கட்டுப்படுத்தப்படும் ஈரானிய ஊடகங்களில் ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து வெளிவந்த முன்னுக்கு பின் முரணான தகவல்களுக்கு மத்தியில், ஜனாதிபதியின் மரணச் செய்தி ஊர்ஜிதமாகியது!
2024 மே 19ம் திகதி, ஈரான் மற்றும் அஜர்பைஜான் எல்லையிலுள்ள அஸேரி - கிஸ் கலாஸியின் அணைக்கட்டு திறப்பு விழாவிற்குத் சென்ற ஈரானிய ஜனாதிபதி இப்றாஹிம் ரைஸி தனது அஸேரிப் பிரதிநிதி இல்ஹாம் அலியேவுடனான சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர், அராஸ் ஆற்றின் எல்லையில் அமைந்துள்ள அணைக்கட்டைத் திறந்து வைத்துவிட்டு, ரைஸியும் அவரது குழுவினரும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சிவிலியன் பெல் 212 ஹெலிகாப்டரில் திரும்பிக் கொண்டிருந்தனர். ரைஸியின் ஹெலிகாப்டருடன் மேலும் இரண்டு ஹெலிகாப்டர்கள் சென்றிருந்த நிலையில், மற்ற இரண்டு ஹெலிகாப்டர்களும் பாதுகாப்பாக முன்சென்று விட்டன.
ரைஸி பயணித்த ஹெலிகப்டர் தெஹ்ரான் தலைநகருக்கு வடமேற்கே 600 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஜுல்ஃபா (Julfa) நகரத்திற்கு அருகேயுள்ள கிஃலார் (Khilar) கிராமத்தில் இருந்து கலாம் செல்லும் வழியிலுள்ள மலைப்பாங்கான பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்தபோது விபத்து நடந்துள்ள இடம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
விபத்திற்குள்ளான ஹெலிகொப்டரில் அஸர்பைஜானிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்த ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுனர் மாலிக் ரஹ்மதி உட்பட ஒன்பது பேர் பயணிருந்ததாக ஈரான் நாட்டு மற்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஊடகங்கள் கடினமான தரையிறக்கம் என்றும், ஒப்பீட்டளவில் உயிர் பிழைக்கும் வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாகவும் பிதற்றல்களை ஆரம்பத்தில் உபயோகித்து வந்தன. முதலில், ரைஸி ஹெலிகாப்டரில் ஏறவில்லை காரில் தப்ரீஸை நோக்கி வருவதாக ஒரு தகவலையும், பின்னர் ஹெலிகாப்டரில்தான் வந்தார் என்று செய்தியை மாற்றியும் பிரயோகித்தன.
அதன் பிறகு, ஹெலிகாப்டரிலிருந்து சமிக்ஞை கிடைத்ததாகவும், மீட்புக்குழுவினர் அங்கு சென்றடைந்து விட்டதாகவும் செய்தி வந்தது.
அங்கு பனிப்பொழிவு இடம்பெற்றது என்று கூறப்பட்டபோதிலும், விபத்து நடந்த இடத்திலிருந்து பதிவாகியுள்ள வீடியோக்களில் பனிப்பொழிவுக்கான எந்த ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை என சில ஊடகங்கள் உண்ணிப்பாகக் கவனித்து, குறிப்பிடவும் தவறவுமில்லை!
இறுதியில். கடினமான தரையிறக்கம் அல்லாத ஹெலிகப்டர் விபத்து நடந்துள்ளதாகவும், அனைவரது ஜனாஸாக்களும் கடுமையான தீக்காயங்களுடன் இருப்பதாகவும், விபத்தில் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டது!
ரஷ்யா, துருக்கி, அஜர்பைஜான், ஈராக், ஈரான் ஆகிய நாடுகளின் மீட்புக்குழுவினர் நேரடியாக களத்திற்குச் சென்றுள்ளமை பற்றிய தகவல்களும் கிடைக்கப் பெற்ற நிலையில், விபத்தில் ஹெலிகொப்டர் முற்றிலும் எரிந்துவிட்டதாக ஈரானிய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி வௌிநாட்டு ஊடகங்கள் மேலும் தகவல் தெரிவித்தன.
ஈரானிய தொலைக்காட்சி, வானொலி சேவைகள் வழக்கமான நிகழ்ச்சிகளை நிறுத்தி பிரார்த்தனைகளை ஒலி/ஒளி பரப்பலாயின.
ஸவூதி அரேபியா உட்பட மத்திய கிழக்கு நாடுகளும், ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகளும் ஈரானிடம், "நாங்கள் உங்களோடு இருக்கிறோம்; தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருக்கிறோம்" என்றவாறாக நல்லெண்ணச் சமிக்ஞைகளை வெளிப்படுத்தி வருகின்றன.
சவூதி அரேபியாவுடன் ஈரான் அண்மைக்காலத்தில் மிகவும் சுமுகமான உறவை கட்டியெழுப்பி வருவதும், இதற்கு முக்கிய காரணமாக இருந்தவராக வெளிநாட்டு அமைச்சர் ஹுசைன் அமீரப்துலாஹியன் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
ஈரானிய ஜனாதிபதி தேர்தல் அண்மித்த நிலையில், இப்போது அதிகார மாற்றம் நிகழ்கின்றது. புதிய பதில் ஜனாதிபதியாக, சர்வதேச சட்டம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் இரட்டை PhD பெற்றவரான, உபஜனாதிபதி முஹம்மட் மொக்பர் அறிவிக்கப்பட்டுள்ளார். நாட்டின் உயர் தலைவர் அலி கொமேனியுடன் நெருக்கிய தொடர்பில் இருப்பவரான, 69 வயதான முகமது மொக்பர் அரசியல் அனுபவமிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022ல் சிறப்பு பொலிசாரின் காவலில் மஹ்ஷா அமினி என்ற இளம்பெண் மரணமடைந்த சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் வெடித்த தொடர் ஆர்ப்பாட்டங்களை மிகக் கொடூரமாக எதிர்கொண்டவர் இப்ராஹிம் ரைஸி ஆவார். முறையாக ஹிஜாப் அணியாததை அடுத்து கைதான மஹ்ஷா, பொலிசாரின் கொடூர தாக்குதலில் மரணமடைந்தார். அதன் பின்னணியில் நாட்டில் கலவரங்கள் உருவாகும் வாய்ப்பு இருந்தபோதிலும், ஈரான் நாட்டை பொறுத்தமட்டில் உண்மையான ஒட்டுமொத்த அதிகாரமும் ஜனாதிபதியிடம் அல்லாது உயர்பீடத்தலைவரின் வசமே உள்ளதால், அவ்வாறான கலவரங்கள் மிகக் குறைவாகவே நடந்தேறியமை குறிப்பிடத்தக்கது.
அடுத்து, புதிய ஜனாதிபதி ஒருவரை நான்கு வாரங்களுக்குள் தேர்ந்தெடுக்கும் பணி ஆரம்பமாக உள்ளது. இப்பணியில் பதில் ஜனாதிபதி முகமது மொக்பர், சபாநாயகர் முகமது பாக்கர் கலிபாஃப், உச்சநீதிமன்ற தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி ஆகியோர் அடங்கிய கவுன்சில் குழு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப் படுகின்றது!
அமெரிக்காவை தளமாகக் கொண்ட அட்லாண்டிக் பத்திரிகையில் “இப்ராஹிம் ரைஸியின் மரணத்தால் யார் பயனடைவர்?” என்ற தலைப்பில் வெளிவந்த ஒரு கருத்துரை, இந்த விபத்து உறுதி செய்யப்பட்டால், அது தற்செயலானதாக இருக்காது என்று மறைமுகமாக பரிந்துரைத்துள்ளது.
ஈரானுக்குள் இருக்கும் அரசியல் கொந்தளிப்பிலிருந்து "எவர் ஆதாயமடைகின்றனர்" என்ற பட்டியலில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுமாகத்தான் இருக்க வேண்டும் என்பதே பதிலாக அமையலாம்!
அதேவேளை, ஈரான் அதிபரின் மரணம் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என ஈரான் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் அல் கமேனீஹ் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், ஈரான் ஜனாதிபதி இப்றாஹிம் ரைஸி விபத்தில் உயிரிழந்ததற்கும் இஸ்ரேலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இஸ்ரேலின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறியதாக ஜெருசலேம் செய்திச் சேவையொன்று தெரிவித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதியின் மரணத்தில் இஸ்ரேலின் மொஷாட் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தாக அந்தச் செய்தி மேலும் குறிப்பிடுகின்றது.
"முட்டாள்களை வைத்து இந்த நாட்டை நடத்தி வருகின்ற நம்மிடம், திறமையற்றவர்கள் இருப்பதால், அடுத்த ஐந்து மாதங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக மூன்றாம் உலகப் போர் தொடங்கலாம்" என டோனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஈரான் ஜனாதிபதி இப்றாஹிம் ரைஸியின் அகால மரணம் மூன்றாம் உலக யுத்தத்தின் அடித்தளமாக இருக்குமோ என்றுகூட எண்ணத் தோன்றுகின்றது!
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments