Ticker

6/recent/ticker-posts

இப்போ சந்தோசமா.. ஐபிஎல் தொடரால் ஆஸி அணிக்கு ஏற்பட்ட மோசமான நிலைமை.. மார்ஷ் பரிதாப பேட்டி


இந்தியாவில் கோலகாலமாக நடைபெற்று வந்த ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற இந்தத் தொடரில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா 3வது கோப்பையை வென்றது. இதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

சொல்லப்போனால் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வீரர்கள் உலகக் கோப்பைக்கு தயாராக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்பாகவே ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார்கள். அதே போல ஃபைனலில் எந்த வீரரும் இடம் பெறாததால் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணியினரும் ஒருநாள் முன்பாகவே அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றனர். இதைத் தொடர்ந்து அனைத்து அணிகளும் பயிற்சி போட்டிகளில் விளையாட தயாராகி வருகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் 2024 டி20 தொடரில் விளையாடிவிட்டு தங்களுடைய வீரர்கள் இன்னும் அமெரிக்காவுக்கு வந்து சேரவில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் தெரிவித்துள்ளார். அதனால் மே 29, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் நமீபியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான பயிற்சி போட்டிகளில் தங்களுடைய பயிற்சியாளர்களுடன் களமிறங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

அதாவது ஸ்டார்க், கமின்ஸ், டிராவிஸ் ஹெட் போன்ற வீரர்கள் மே 26ஆம் தேதி இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் ஃபைனலில் விளையாடினர். அதனால் மே 29ஆம் தேதி நடைபெறும் பயிற்சி போட்டிகளில் அவர்களால் ஆஸ்திரேலிய அணியுடன் இணைய முடியாது. எனவே ஐசிசி விதிமுறைப்படி பயிற்சியாளர்கள் குழுவில் இருக்கும் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், ப்ராட் ஹோட்ஜ், ஜார்ஜ் பெய்லி ஆகிய முன்னாள் வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்காக பயிற்சி போட்டியில் விளையாட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது பற்றி மார்ஷ் பேசியது பின்வருமாறு. “நாங்கள் போதிய ஆளில்லாமல் போகிறோம். ஆனால் இது ஒரு பயிற்சி போட்டி. எனவே விளையாடுவதற்கு எவ்வளவு வீரர்கள் தேவையோ அதை அங்கிருந்து கண்டுபிடிப்போம். ஐபிஎல் போட்டிகளில் விளையாடியவர்கள் நிறைய கிரிக்கெட்டை விளையாடினார்கள். எனவே அவர்கள் குடும்பத்தை பார்க்கவும் புத்துணர்ச்சியடையவும் வீட்டில் இருப்பதற்கு 2 நாட்கள் அவகாசம் வழங்குவதற்கு முன்னுரிமை அளித்துள்ளோம்” என்று கூறினார்.

முன்னதாக இங்கிலாந்து வீரர்கள் பாதியிலேயே வெளியேறியதால் ஒன்று முழுமையாக விளையாடுங்கள் இல்லையேல் ஐபிஎல் தொடருக்கு வராதீர்கள் என்று சுனில் கவாஸ்கர், இர்பான் பதான் ஆகியோர் விமர்சித்திருந்தனர். அந்த சூழ்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாடியதால் ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சி போட்டியை தவற விட உள்ளனர். அதனால் “இப்போ சந்தோசமா” என்ற வகையில் மிட்சேல் மார்ஷ் பரிதாபத்தை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

crictamil


 



Post a Comment

0 Comments