Ticker

6/recent/ticker-posts

சஞ்சு சாம்சனின் மூளையற்ற முடிவால் ராஜஸ்தானின் ஃபைனல் கனவு உடைஞ்சுடுச்சு.. டாம் மூடி, சேவாக் விமர்சனம்


ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிஃபயர் 2 போட்டியில் ராஜஸ்தானை தோற்கடித்த ஹைதராபாத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மே 24ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் ஹென்றிச் க்ளாஸென் 50, ராகுல் திரிபாதி 37 ரன்கள் எடுத்த உதவியுடன் 176 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதைத் துரத்திய ராஜஸ்தான் 20 ஓவரில் 139/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. 

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 42, துருவ் ஜுரேல் 56* ரன்கள் எடுத்த நிலையில் ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக பகுதி நேர பவுலர்களான சபாஷ் அகமது 3, அபிஷேக் ஷர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்ள ஹைதராபாத் தகுதி பெற்றது. மறுபுறம் 2008க்குப்பின் கோப்பையை வெல்லாமல் ராஜஸ்தான் வெளியேறியது.

இந்நிலையில் இப்போட்டியில் சபாஷ் அகமது, அபிஷேக் சர்மா ஆகிய 2 இடது கை ஸ்பின்னர்கள் அழுத்தத்தை ஏற்படுத்திய போது இடது கை பேட்ஸ்மேனான சிம்ரோன் ஹெட்மயர் 5வது இடத்தில் களமிறங்கியிருக்க வேண்டுமென்று டாம் மூடி தெரிவித்துள்ளார். ஆனால் அந்த வலது கை பேட்ஸ்மேனான துருவ் ஜுரேலை களமிறக்கிய கேப்டன் சஞ்சு சாம்சனின் முடிவு ராஜஸ்தானின் ஃபைனல் கனவை உடைத்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார். 

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நாம் அந்த ட்ரெண்டை பயன்படுத்த ஆச்சரியப்படக்கூடாது. என்னைப் பொறுத்த வரை இது மூளையற்ற முடிவாகும். நன்றாக விளையாடிய துருவ் ஜுரேல் எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் நன்றாக விளையாடுவார். ஆனால் அந்த நேரத்தில் 2 இடது கை ஸ்பின்னர்கள் பந்து வீசினார்கள். அங்கே தான் ஓட்டை இருந்தது. சன் ரைசர்ஸ் அதை சமாளிக்க வேண்டிய நேரத்தில் அட்டாக் செய்தனர்”

“எனவே இங்கே ராஜஸ்தான் சிம்ரோன் ஹெட்மயரை உங்களுடைய ஆட்டத்தை விளையாடுங்கள் என்று சொல்லி அனுப்பியிருக்க வேண்டும். குறிப்பாக இந்த இடது கை ஸ்பின்னர்கள் போட்டியை கட்டுப்படுத்த விடாமல் உங்களுடைய ஆட்டத்தை விளையாடுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் வீரேந்திர சேவாக் பேசியது பின்வருமாறு.

“ஹெட்மயரை தாமதமாக கொண்டு வந்த முடிவு எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. ராஜஸ்தான் அவரை முன்னதாகவே கொண்டு வந்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில் 2 இடது கை ஸ்பின்னர்கள் இருந்தனர். அந்த நிலையை சமாளிக்க வேகமாக விளையாடக்கூடிய இடது கை பேட்ஸ்மேன் சிறந்த தேர்வாக இருக்கும்” என்று கூறினார். அந்த வகையில் ராஜஸ்தானின் தவறை பயன்படுத்தி பகுதி நேர பவுலர்கள் இப்போட்டியில் ஹைதராபாத்தை வெற்றி பெற வைத்தது குறிப்பிடத்தக்கது.

crictamil


 



Post a Comment

0 Comments