Ticker

6/recent/ticker-posts

Ad Code



பொய்களால் பொழுதளக்கும் ‘கோயபல்ஸ்’ மோடி! - ஹரிபரந்தாமன்


பொய் சொல்வதையே வழக்கமாகவும்,தொழிலாகவும் கொண்டவரை கோயபல்ஸ் என்பர். ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் பிரச்சார அமைச்சர் தான் கோயபல்ஸ். இன்றைக்கு கோயபல்ஸை உயிர்பித்து, தனக்குள் ஊடுருவச் செய்துள்ளார் மோடி! ஆனால், எளிதில் அம்பலப்படுகிற பொய்யை பேச வைப்பது யார்..?

கோயபல்ஸ் பொய்களை உண்மை போல் பேசுவார். மிகுந்த பேச்சாற்றல் மிக்கவர். “ஒரு பொய்யை மீண்டும், மீண்டும் சொன்னால் அது உண்மையாகிவிடும்” என்பது கோயபல்சின் கோட்பாடு.

பல லட்சம் யூதர்களை படுகொலை செய்வதற்கு முன், கோயபல்ஸ் மூலம் ஹிட்லர் யூதர்களைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்தான். ஜெர்மனியின் விரோதிகளாக  யூதர்கள் -ஜெர்மானிய யூதர்கள் உட்பட அனைத்து யூதர்கள்- சித்தரிக்கப்பட்டனர்.

இந்தியாவில் ஹிட்லருக்கு இணையான சர்வாதிகாரியாக இருக்கும் பிரதமர் மோடி அவர்கள் கோயபல்ஸ் வேலையை தானே செய்கிறார்.

இந்தியாவின் விரோதிகளாக இஸ்லாமியர்களை சித்தரித்து, அவர்களை அழிப்பதே மோடியின் திட்டம். அதை ஒட்டியே அவரது தேர்தல் பிரச்சாரம் இருக்கிறது. இந்த பொய் பிரச்சாரத்தை -வெறுப்பு அரசியலை- செய்வதற்கு அவர் எந்த கோயபல்சையும்   நியமிக்கவில்லை. அவரே கோயபல்ஸாக செயல்படுகிறார்.

மோடி திரும்பத் திரும்ப பொய்களை சொல்வதன் மூலம் அவைகளை உண்மை போல ஆக்க முயல்கிறார். இஸ்லாமியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு அளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்ற பொய்யை திரும்பத் திரும்ப சொல்கிறார் மோடி.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் அப்படி எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் சொன்னாலும், கோயாபல்ஸ் பாணியில் திரும்பத் திரும்ப  அதே பொய்யை- இஸ்லாமியருக்கு 15% இட ஒதுக்கீடு என்ற பொய்யை- சொல்லி வருகிறார் மோடி.

அரசு வேலைகளில் சாதி அடிப்படையில்  அளிக்கப்படும்  இடஒதுக்கீடு  50% -க்கு மேல் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது .எனவே தான் மத்திய அரசு பணியில் பிற்பட்டவர்களுக்கு 27 % இடஒதுக்கீடு என்று மண்டல் கமிஷன் பரிந்துரை செய்தது. காரணம், பட்டியல் இனத்தவருக்கும், பழங்குடியினருக்கும் சேர்த்து 22. 5% இடஒதுக்கீடு அமலில் உள்ளது என்பதால் தான்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ,சாதி அடிப்படையில் அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50% என்பதை நீக்குவோம் என்று கூறுகிறது.

இப்படிக் கூறும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை, இஸ்லாமியருக்கு 15 % ஒதுக்கீடு அளிக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது என்ற கோயபல்ஸ் பொய்யை  மோடி தவிர வேறு எவரும் கூற மாட்டார்கள்.

மேற்சொன்ன 50% உச்சவரம்பை நீக்கும் பொருட்டு சாதிவாரி கணக்கெடுப்பை  செய்யும் என்றும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி ஏதும் கூறவில்லை.

1871 முதல் ஒவ்வொரு பத்தாண்டும் பிரிட்டிஷ் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை செய்தது.1931 ஆம் ஆண்டு தான் இறுதியாக சாதி வாரி கணக்கெடுப்பு நடந்தது .அதற்குப் பின் சாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறவில்லை.

சாதிவாரி கணக்கெடுப்பை மட்டுமே காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறும் போது, மோடி ஒரு பொய்யை தொடர்ந்து கூறி வருகிறார். அதாவது, ஒவ்வொருவரின்  சொத்து சம்பந்தமான கணக்கெடுப்பை காங்கிரஸ் செய்யும் என்றும், அதன் மூலம் சொத்துக்களை பிரித்து இஸ்லாமியருக்கு கொடுக்கும் என்ற தன் கற்பனை பொய்யை மோடி தொடர்ந்து பேசி வருகிறார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பொருளாதார ஏற்றத்தாழ்வு மிக அதிகமாக இருப்பதால் அதை சரி செய்வதற்கு உரிய நடவடிக்கையை எடுப்போம் என்று கூறுகிறது. இந்திய நாட்டின் மக்கள் தொகையில் 1% எண்ணிக்கையில் உள்ளவர்கள் 40 % சொத்துக்களை வைத்துள்ளனர் என்ற நிலையில், மறுபக்கம் கோடிக்கணக்கான மக்கள் ஒருவேளை உணவுக்கு வழியின்றி வறுமையில் இருக்கின்றனர். இந்த ஏற்றத்தாழ்வு களையப்படுவதற்கு ஆவண செய்யப்படும் என்பதே காங்கிரஸின் தேர்தல் அறிக்கை.

இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது மட்டுமின்றி, இந்திய மக்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் சொத்துக்களை அபகரித்து அவைகளை இஸ்லாமியருக்கு காங்கிரஸ் அளித்து விடும் என்றும் திரும்பத் திரும்ப பொய் கூறி வருகிறார் மோடி. பொருளாதார ஏற்றத் தாழ்வை நீக்குவதற்கான முயற்சிகளை காங்கிரஸ் செய்யும் என்பதை திரித்து மேற்சொன்னவாறு பொய்யாக பிரச்சாரம் செய்கிறார் மோடி.

”பெற்றோரிடமிருந்து பெற்ற பரம்பரை சொத்துக்கு வரி விதிக்க வேண்டும்” என்று காங்கிரஸ் சொல்வதாக ஒரு பொய்யை தொடர்ந்து சொல்கிறார் மோடி.

ஒருவர் இறந்தால் அவரது வாரிசுகளுக்கு சொத்துகள் சேருவதற்கும் முன்னால் அந்த சொத்துகளின் பேரில் வரிவிதிப்பதே பரம்பரை சொத்துக்கு வரி விதிப்பது என்பதாகும். அதாவது திருபாய் அம்பானி  இறந்தபின் அவரது சொத்துக்கள் அவரது மகன்களான முகேஷ் அம்பானிக்கும் அணில் அம்பானிக்கும் கிடைப்பதற்கு முன்னால் அந்த சொத்துக்களின் பேரில் வரி விதிப்பதே பரம்பரை சொத்துக்கான வரி. இம்மாதிரி வரி விதிப்பது அமெரிக்காவிலும், ஜப்பானிலும், இங்கிலாந்திலும் இன்று நடைமுறையில் உள்ளது.

ஆனால், அப்படி பரம்பரை சொத்துக்கு வரி விதிப்பது என்று ஏதும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இல்லை. இருந்தாலும் இந்த நாட்டில் உள்ள சாதாரண குடிமகன் வாரிசு என்று சொத்துக்களை அடையும் போது காங்கிரஸ் வரி விதிக்கும் என்று வழக்கமாக திரும்பத் திரும்ப பொய்யை கூறுகிறார் மோடி. மோடியின் கண்ணுக்கு அம்பானிகள் தெரிய மாட்டார்கள். இந்தியாவின் சொத்துக்களில் பெரும் பகுதியை அம்பானிகளும், அதானிகளும் தானே வைத்துள்ளார்கள். இந்த உண்மையை பொருளாதார நிபுணர் பரகால பிரபாகரும் சமீபத்தில் குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் சாதித்தது என்ன என்பதை பற்றி சொல்வதற்கு மோடிக்கு ஏதுமில்லை. டாட்டா, பிர்லா என்பதற்கு பதில் அம்பானி, அதானி என்றாக்கியது தான் மோடியின் சாதனை. தனது கோடீஸ்வர நண்பர்களுக்காக 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார் பிரதமர் மோடி . கார்ப்பரேட்டுகளின் வருமான வரியை 30 %- இல் இருந்து  22 % ஆக குறைத்தார் மோடி. நேருவின் காலத்தில் கட்டமைக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களை விற்றதே மோடியின் சாதனை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை அளிப்பதாக வாக்குறுதி அளித்தார் மோடி. வேலை அளிக்காத நிலையில், இருந்த வேலையும் பறிபோனது தான் உண்மை. மேலும், படித்த படிப்பிற்கு உரிய வேலையும் கிடைப்பதில்லை.

காங்கிரஸ் கட்சி வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு தலைவர் சாம் பிரிட்டோ பரம்பரை சொத்துக்கு வரி விதிக்க வேண்டும் என்று தனிப்பட்ட கூறிய கருத்தை வைத்து சாதாரண மக்களின் சொத்துக்களை அபகரிக்க போகிறது காங்கிரஸ் என்று அடாவடியாக பொய் சொல்கிறார் மோடி.

பரம்பரை சொத்துக்கு வரி விதிக்க வேண்டும் என்று 2014 இல்  மோடி அமைச்சரவையில் நிதி மந்திரியாக இருந்த ஜெயந்த் சின்கா கூறியது மட்டுமின்றி, அவரது பேச்சை வீடியோவிலும் வெளியிட்டார். இதனை ஆதரித்து பாஜகவின் இணைய துறைக்கு தலைவராக இருந்த  அமித் மாலவியா X இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். 2018 இல் நிதி அமைச்சராக இருந்த மறைந்த அருண் ஜெட்லி அவர்களும் பரம்பரை சொத்துக்கு வரி விதிக்க வேண்டும் என்று கூறினார். இதன் மூலம் கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் கிடைக்கும் என்று அவர் கூறினார்.

உண்மையில் 1953ல்  இருந்து வந்த இந்த சொத்து வரி  ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ரத்து செய்யப்பட்டது.

இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் கூட, ராகுல் காந்தியின் பேச்சு இடம்பெற்றுள்ளது .அதில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் என்று உறுதி அளிக்கிறது. பட்டியல் இனத்தவரும், பழங்குடியினரும், பிற்படுத்தப்பட்டவரும் மக்கள் தொகையில் 90% இருக்கையில், 650 உயர் நீதிமன்ற நீதிபதிகளில் வெறும் 100 பேர் மட்டுமே இப் பிரிவில் உள்ளனர். எனவே, இப்பிரிவினர் உச்ச நீதிமன்றம் செல்வது அரிதிலும் அரிது.  

200 பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றுகூட இப் பிரிவினருக்கு சொந்தமானதாக இல்லை. இதன் முக்கிய பொறுப்புகளிலும் இப் பிரிவினர் இல்லை என்றெல்லாம் சுட்டிக்காட்டி உள்ளார் ராகுல் காந்தி. இதனை சரி செய்யும் பொருட்டே சாதி வாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் நடத்தும் என்று தெளிவுபடுத்தி உள்ளார். ராகுல் காந்தி.

மேற்சொன்ன சமூக நீதி சம்பந்தமான ராகுல் காந்தியின் கூற்றுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை பிரதமர் மோடி.

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது மோடி அரசு. ஒரு அமெரிக்க டாலருக்கு 63 ரூபாய் என்ற நிலை 2014 ஆம் ஆண்டு இருந்தது போய், இப்போது 83 ரூபாய் என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டார் மோடி .

இதற்கெல்லாம் எப்படி பரிகாரம் காண்பது என்பதை சொல்லாமல், கோயபல்ஸ் பாணி பொய்கள் சொல்வதை  நிறுத்த வேண்டும் பிரதமர் மோடி.

கட்டுரையாளர்: ஹரிபரந்தாமன்
ஓய்வு பெற்ற நீதிபதி
ஆதாரம்: அறம் மின்னியல் 

nambikkai



 



Post a Comment

0 Comments