புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-17

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-17


ஏழு நாட்கள் கழிந்தால் ரெங்க்மாவுக்கு  “மூப்பு நீராட்டு விழா”!

மறுநாள் தனது நண்பன் இர்வினை சந்தித்தபோது விஷயத்தைக் கூறினான்! 

“எங்களைப் பொறுத்தவரை நாங்கள் அன்பு வைத்து நேசிக்கின்றவளுக்கு சொக்கலேட்- ஆடைகள் - நகைகள் போன்ற பலதையும் பரிசாகக் கொடுப்போம். உங்கள் சமூகத்தில் அது எப்படி என்பதை நானறியேன்” என்று இர்வின் கைவிரித்தான்!

தாயிடம் விசாரித்தால் தமது சமூகத்து வழக்கைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்த  செரோக்கி அன்றிரவு சாப்பிட்டுவிட்டு தந்தை உறங்கச் சென்ற வேளையில் தாயிடத்தில் மெல்லக் கேட்டான்!

“மான் கொம்பொன்றைத் தேடி அதைக் கொண்டு ஏதாவது அணிகலன்கள் செய்து அன்பளிப்புச் செய்வதே வனவாசிகளின் வழக்காகும்” என்று கூறிவிட்டு -அவளுக்கு அவனது தந்தை செய்து கொடுத்த சில அணிகலன்களை எங்கிருந்தோ தேடி எடுத்து வந்து அவனிடம் காட்டினாள்.

அவற்றை ஒவ்வொன்றாகப் பார்த்த செரோக்கி, மான் வேட்டைக்குச் செல்லத் தீர்மானித்தான்! 

ரெங்க்மாவின் தந்தை தந்த பயிற்சிக்கொப்ப மூங்கிலைப் பதப்படுத்தி அம்புகள் செய்து கொண்டான். பயிற்சியின் போது காட்டிலிருந்து அவன் எடுத்து வந்து பத்திரப்படுத்தி இருந்த  “கியுரே” கொடியையும் அதன் இலைகளையும் வேகவைத்து  அம்புகளில் தடவிக் கொண்டான்.

மிருகங்ளை உயிரோடு பிடிப்பதாயின் அம்பில் “கியுரே” தடவ மாட்டார்கள்;  கூர்ப்பகுதியற்ற அம்புகளையே வனவாசிகள் உபயோகிப்பர். அவ்வாறான அம்புகளை மிருகங்களின் குறிப்பிட்ட இடங்களைக் குறிவைத்து எய்துவார்கள். அம்பு பட்ட இடம் காயங்களற்ற தகர்வை ஏற்படுத்தும். அதனால் அவை நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்ற நிலையைப் பயன்படுத்தி அவற்றை உயிரோடு பிடித்துக் கொள்வார்கள்.

சில வேளைகளில் ஓட விளைகின்ற மனிதர்களைத் தடுத்து நிறுத்தவும் இவ்வாறான  “கியுரே”  தடவப்படாத கூர்ப்பகுதியற்ற அம்புகளை வனவாசிகள் உபயோகிப்பர்!

செரோக்கி  “கியுரே”  தடவிய அம்புகளை இடையில் சொருவிக் கொண்டு வில்லைத் தோலில் மாட்டிக் கொண்டவனாக  அம்புலுவாவக் காட்டை நோக்கிக் கம்பீரமாக நடந்தான்! அதே காடு...  ரெங்க்மாவின் தந்தை தனக்கு அம்பெய்துவதற்குப் பயிற்சி தந்த அந்தக் காட்டினுள் அவன் நுழைந்தான்.

அமேசான் வனத்தைப் போன்ற பயங்கரமான பிரதேசமல்ல இது; வெறும் காடு.  மரங்களும் சில முயல், நரி,  மான், மரை போன்ற சாதாரண மிருகங்கள் வாழும் பகுதி!

வனவாசிகள் தமது அன்றாட உணவுக்கான மிருகங்களை இங்குதான் வேட்டையாடிக் கொள்வர்.

அதனை அடுத்து அலவத்தைப்பகுதி அமைந்துள்ளது. ”புரோகோனிஷ்” மக்கள் தமக்கு நேரம் கிடைக்கும்போது அலவத்தைப் பகுதிக்கு சென்று கிழங்கு வகைகளை நட்டிவைப்பர்! தேவையானோர் தேவைப்படும்போது பிடுங்கிக் கொள்வர்!

செரோக்கியும் அவனது தந்தையும் வனப்பகுதிக்குச் செல்லும்போது இளைப்பாறும் பெரியகல் பகுதிக்கும் அலவத்தைக்கும் வெகுதூரமில்லை!

புரோகோனிஷ் கிராமத்தின் அமேசான் வனப்பகுதி எல்லையில் அமைந்துள்ள இந்த இரண்டு பிரதேசங்களையும் நெருங்கியதாகவே  சங்குவின் ஜாகை அமைந்துள்ளது!

மரங்களுக்கு மறைந்தபடி வில்லில் அம்பைச் சொருகிக் குறிபார்த்துக் கொண்டே காட்டினுள் நகர்ந்து கொண்டிருந்தான் செரோக்கி!

அவனைக் கண்டதும் ஆங்காங்கே கூட்டங்கூட்டமாக இருந்த முயல்களும் நரிகளும் ஓட்டம் பிடித்தன. 

அவைகளை வேட்டையாடுவது அவனது நோக்கமல்ல! அழகான கொம்புகளைக் கொண்டிருக்கும் மான்கள் மட்டுமே அவனது இலக்காக இருந்தது.

மான்களில் பொதுவாக ஆண் மான்கள் அழகான கொம்புகளைக் கொண்டிருக்கும். அவற்றைக் “கலைமான்கள்” என்பர்.

மோப்பசக்தி இருந்திருந்தால், கலைமான்களை  இலேசாக இனங்கண்டு கொள்ளலாம்!  அதுதான் அவனுக்கு இல்லையே!

இருந்தபோதிலும், அவன் தன் உற்சாகத்தைக் கைவிடவில்லை. தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருந்தான். 

சில இடங்களில் மறைந்திருந்து, சற்று ஓய்வெடுத்து வில்லில் அம்பை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தபோது தூரத்தே இரண்டொரு மான்கள் அவனது கண்களில் பட்டன.

அவற்றுள் வளைந்து நெடிந்த கொம்புகளைக் கொண்ட அழகான கலைமானொன்றைக் கண்டு கொண்டான்! அதனைக் குறிவைத்து அம்பை எய்தினான்.  

குறி தவறியதால் மான்கள் களைந்து நான்கு திசைகளிலும் ஓட்டம் பிடித்தன! கைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலை! செரோக்கி கவலையடைந்தான்!

மறுபடி இன்னொரு அம்பை வில்லில் இணைத்தபடி அவன் முன்னேறினான்.  

இப்போது அவன் கண்டு கொண்டான்! அந்தப் பென்னாம் பெரிய மரத்துக்கடியில் அவனது குறியிலிருந்து தப்பிய அதே மான்!

அழகான கொம்புகள்! தனியாக இருந்து மேய்ந்து கொண்டிருந்ததை அவன் கண்டான்!

இம்முறை குறி தப்பாது; மனத்திடத்துடன் அம்பை எய்தினான்; மான் தரையில் சாய்ந்தது!

அதன் உயிர் பிரிய  சற்று நேரம் செல்லும்.  அதுவரை அந்த மரத்தை  அவனது கண்கள் உற்று நோக்கலாயின!

(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post