யாழ் பெரியபள்ளியின் முகப்புத் தோற்றம். நன்றி: Ceylon Baithulmal Fund
வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலைக் கட்டிய வைத்திலிங்கம் செட்டியார் குறித்தும், அவரது நண்பர் முகம்மது தம்பி மரைக்கார் குறித்தும் அதிகம் அறியப்படாத தகவல் ஒன்றை கலாபூஷணம் அப்துல் ரஹீம், 1979ல் தான் எழுதிய “யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்” என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இது அக்காலத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் ஐக்கியமாக வாழ்ந்ததை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
வைத்திலிங்கம் செட்டியார் வாழ்ந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் முகம்மது தம்பி மரைக்கார் என்ற முஸ்லிம் வர்த்தகப் பிரமுகர் ஒருவரும் வாழ்ந்துள்ளார். இருவருமே முத்துக்குளிப்பு குத்தைகை எடுத்துப் பெரும் பணம் சம்பாதித்து வந்துள்ளனர்; அதனால், இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.
யாழ்ப்பாணக் கோட்டையை மீள்கட்டும் பணிக்காக ஒல்லாந்தர் கொண்டுவந்த கற்களில் எஞ்சியிருந்தவற்றை வைத்திலிங்கம் செட்டியாரும், முகம்மது தம்பி மரைக்காரும் விலைகொடுத்து வாங்கி, வைத்திலிங்கம் செட்டியார் சிவன் கோயிலையும், முகம்மது தம்பி மரைக்கார் பெரிய பள்ளிவாசலையும் கட்டுவதற்கு இக்கற்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.
அது மட்டுமன்றி சிவன் கோயிலைக் கட்டுவதற்கு முகம்மது தம்பி மரைக்கார் பல வழிகளில் உதவியதாகவும், முஸ்லிம் மக்களுக்காக சோனகத்தெருவில் பெரிய குளத்தை வைத்திலிங்கம் செட்டியார் கட்டிக் கொடுத்ததாகவும் அப்துல் ரஹீம் தனது நூலில் குறிப்பிடுகின்றார்.
யாழ்ப்பாணத்து மக்கள் அண்மைக்காலம் வரை குளிப்பதற்கு இக்குளத்தைப் பயன்படுத்தியதாகவும், இக்குளம் ஒஸ்மானியா கல்லூரிக்கு வடக்கிலும், முஸ்லிம் கல்லூரி வீதிக்குத் தெற்கிலும் உள்ளதாகும்.
ஒல்லாந்தர், 1780ம் ஆண்டைய காலப்பகுதியில் கோயில்களையும், பள்ளிவாசல்களையும், கத்தோலிக்கத் தேவாலயங்களையும் கட்ட அனுமதிக்கலாயினர். வண்ணை சிவன் கோயிலுக்கு 1787ம் ஆண்டில் அத்திவாரமிடப்பட்டுள்ளது. எனவே யாழ்ப்பாணத்துப் பள்ளிவாயில், குளம் என்பனவும் இக்காலப் பகுதியிலேயே நிர்மாணிக்கப் பட்டிருக்க வேண்டும்.
யாழ்ப்பாணப் பெரிய பள்ளிவாயில் 1590ம் ஆண்டு தற்போதைய கல்லூரி சாலையில், பத்தாம் நூற்றாண்டில் இருந்ததாகக் கூறப்படும் அசல் பெரிய பள்ளிக்குப் பதிலாக திருத்தியமைக்கப்பட்டது. இது 1614ல் ஒரு போர்த்துகீசிய வெறியரால் முற்றிலும் அழிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
அப்துல் ரஹீம் அவர்களின் நூலை அடிப்படையாகக் கொண்டு. யாழ்ப்பாணத்தில் பள்ளிவாயில் மீள்கட்டப்பட்ட காலம் 1713 என்று, "யாழ் நகரம் வயது 400" எனும் ஒரு முகநூல் பக்கத்தில் 2020ம் ஆண்டளவில் பதிவிடப்பட்டுள்ளதில் சந்தேகம் இருப்பதாக, அஜ்மல் மொஹிடீன் என்பவர் சமூகவலைத் தளமொன்றில் பதிவிட்டிருந்தார்.
யாழ் கோட்டை கட்டுமான வேலைகள் 1790களின் முற்பகுதி வரை இடம்பெற்றதாகவும், அதன்போது மிகுதமாகவிருந்த கற்களைப் பணம் கொடுத்து வாங்கி, 1787ல் அத்திவாரமிடப்பட்டிருந்த வண்ணை சிவன் கோயில் கட்டப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப்படுவதால்,1793ல்தான் பெரிய பள்ளிவாசல் பணிகளை முகம்மது தம்பி மரைக்கார் தொடங்கியிருக்கலாம்; எனவே 1713 என்பதை அச்சுப்பிழையாகவே கொள்ள வேண்டியுள்ளது!
அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கை பைத்துல்மால் வெளியீடான 'Iconic Masjids of Ceylon' என்ற நூலிலும் இதே பிழை தொடரப் பட்டுள்ளது. இந்நூலின் 31வது பக்கத்தில் பின்வரும் பந்தி வந்துள்ளது:
"The Mosque underwent many changes over time from its original timber structure. It was I n 1713 that mohamed Thamby Marikkar a leading local businessman expended the Mosque further, this time using more hardy material. It is said that the Moorman together with his Tamil friend Vaithilingam Chettiar purchased the surplus stones remaining after the Dutch built the Jaffna Fort to put up the Mosque with the remainder being used the Chettiar to build the Sivan Kovil."
"பள்ளிவாயில் அதன் அசல் மர அமைப்பிலிருந்து காலப்போக்கில் பல மாற்றங்களுக்கு உள்ளானது. முகமது தம்பி மரிக்கார் ஒரு முன்னணி உள்ளூர் தொழிலதிபர் 1713ல் பள்ளிவாசலுக்காக அவர் செலவழித்தார், டச்சுக்காரர்கள் யாழ்ப்பாணக் கோட்டையைக் கட்டிய பிறகு எஞ்சியிருந்த கற்களை பள்ளிவாயிலை அமைப்பதற்காக மரிக்காரும், சிவன் கோவில் அமைப்பதற்காக வைத்தியலிங்கமும் வாங்கினர்."
அடுத்த பதிப்பில் 1713 என்பதை 1793 என்று திருத்திக் கொள்வது பொருத்தமானதாகும்.
கி.பி. 1658ம் ஆண்டு போத்துக்கீசரிடமிருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி, 1796 வரை 138 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.
சிதைந்த நிலையில் போர்த்துக்கீசர் விட்டுச்சென்ற சதுரவடிவ யாழ்ப்பாணக் கோட்டையை இடித்துவிட்டு, ஐங்கோண வடிவில் ஒல்லாந்தர் கோட்டையைக் கட்டினர்.
ஒல்லாந்தர் தமது ஆட்சியின் இறுதிக் காலத்தில் மத ரீதியான கடும்போக்கைக் குறைத்துக் கொண்டனர் என்றே வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.
யாழ்ப்பாணத்துத் தமிழரசர் காலத்துக்குப் பின், இந்துக் கோயில்கள் அனைத்தும் போத்துக்கீசரால் இடித்துத் தள்ளப்பட்ட பின்னர், சுமார் 160 ஆண்டுகள் கழித்துக் கட்டப்பட்ட முதல் கோயில்களுள் ஒன்றான யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரர் ஆலயம் 18ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வைத்திலிங்கம் செட்டியாரால் கட்டுவிக்கப்பட்டது.
வண்ணார்பண்ணைச் சிவன் கோயில் எனவும் அறியப்படும் இக்கோயில், யாழ்ப்பாண நகர மத்தியிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்குள் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில், கோபாலச் செட்டியார் என்பவர் சோழ நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இவ்வியாபாரம் மூலம் அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த ஒல்லாந்த தேசாதிபதியின் தொடர்பு இவருக்குக் கிடைத்துள்ளது.
இவருடைய மகன் வைத்திலிங்கன் சிறுவனாக இருந்தபோது இவரைக்கண்ட தேசாதிபதியின் மனைவி சிறுவனைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லாமையால் தேசாதிபதியின் மனைவி வைத்தியலிங்கத்தைத் தம் மாளிகையிலேயே வளர்த்து வந்துள்ளார்.
வளர்ந்து பெரியவனான பின்னர், தேசாதிபதியின் பரிந்துரையின்படி மூன்று முறைகள் முத்துக்குளிக்கும் குத்தகையைப் பெற்றுத் திறம்பட நடத்தி நல்ல இலாபம் பெற்று வந்துள்ளார்.
வைத்திலிங்கம் செட்டியார் வாழ்ந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் முகம்மது தம்பி மரைக்கார் என்ற முஸ்லிம் வர்த்தகப் பிரமுகர் வாழ்ந்து வந்துள்ளார்; இருவருமே முத்துக்குளிப்பு குத்தைகை எடுத்து தொழில் புரிந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ. ஏ. ஸத்தார்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments