கடலில் போதையில் உலாவும் சுறாக்கள் - விஞ்ஞானிகள்அதிர்ச்சி!

கடலில் போதையில் உலாவும் சுறாக்கள் - விஞ்ஞானிகள்அதிர்ச்சி!


உலகம் முழுவதும் போதைப்பொருள் பயன்பாடு பெரும் தலைவலியாக இருக்கிறது. போதைப்பொருள் பயன்படுத்துவதும், அதை விற்பதும் தண்டனைக்குரிய குற்றமாக இருந்தாலும், பல நாடுகளில் அவை முறையாக பின்பற்றப்படுவதில்லை. எனவே, உலகின் பல்வேறு நாடுகளில் போதைப்பொருள் விநியோகம் தாராளமாக இருக்கிறது.

இந்நிலையில், பிரேசில் கடற்கரையில் உலாவும் சுறா மீன்கள் கோக்கைன் போதைப்பொருளை சாப்பிட்டு, எப்போதும் போதையில் சுற்றுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, அந்த சுறா மீன்களின் தசை மற்றும் கல்லீரல் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்ததில், அவற்றில் கோக்கைன் போதைப்பொருளின் தாக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

13 சுறாக்களில் இருந்து மாதிரிகளை எடுத்து சோதனை செய்ததில் அனைத்திலும் கோக்கைன் போதைப்பொருளின் கலப்பு இருந்தது தெரியவந்தது. இதன்மூலம், கடல்வாழ் உயிரினங்களில் பதிவாகியுள்ள போதைப்பொருள் செறிவை விட இது 100 மடங்கு அதிகம் என்றும், இது சுறாக்கள் மட்டுமின்றி பிற கடல் வாழ் உயிரினங்கள் உடலிலும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

சுறாக்கள் கோக்கைன் சாப்பிட்டதற்கு காரணம் என்று விளக்கியுள்ள ஆராய்ச்சியாளர்கள், சட்டவிரோத கோக்கைன் தொழிற்சாலைகளில் இருந்து திருட்டுத் தனமாக கடலில் கலக்கப்படும் கழிவுகள் ஒருபுறம் காரணமாக இருக்கலாம் என்றும், கடத்தல்காரர்கள் ரோந்து அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க கடலில் வீசப்படும் கோக்கைன் மூட்டைகள் மறுபுறம் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

கடலோரங்களில் வசிக்கும் சுறா மீன்களுக்கு இது எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆபத்து கடல்வாழ் உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

news18



 



Post a Comment

Previous Post Next Post