பங்களாதேஷில் அரச தொழில் ஒதுக்கீடு விடயத்தில் மாணவர்கள் போராட்டம் செய்து ஷேக் ஹஷீனாவை விரட்டியடித்துவிட்டு, காபந்து அரசின் பிரதமராக நோபல் பரிசு பெற்ற டாக்டர் முஹம்மது யூனுஸ் என்பவரை பதவியமர்த்துவதில் தீவிரம் காட்டி வந்தார்கள்.
ஆக, தமது நோக்கம் என்னவென்றே தெரியாமல், நெறிப்படுத்தப்படாத மாணவர்களும், அவர்களுக்கு கூஜா தூக்கிய மற்றவர்களும் இறுதியாக ஜனாதிபதி மாளிகையிலிருந்த பொருட்களை கையில் கிடைத்தது இலாபம் என்ற நெறிக்குட்பட்டு, தூக்கிச் செல்வதைத்தான் காணொளிகளில் காணமுடிந்தது!
இருபது வருடங்களாக ஆட்சி செய்து, வங்கரோத்து நிலைக்கு வந்த இலங்கைக்கே கடன் கொடுக்கும் நிலையிலான காம்பீரமான பொருளாதார மேம்பாட்டைக் கொண்டிருந்தது பங்களாதேஷ் நாட்டுக்கா இந்தக் கதிஎன்றுகூட எண்ண வைக்கின்றது. இதே கதி இந்தியாவுக்கும் வரப்போகின்றது என்ற ஆரூடம் கூட மெல்லக் கசிந்து வருகின்றது!
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வங்கரோத்து அடைந்திருந்த காலகட்டத்தில், பங்களாதேஷிடமிருந்து 200 மில்லியன் டொலர்களை மூன்று தவணைகளில் கடனாக பெற்றது இலங்கை!
2021ஆகஸ்ட் 19ம் திகதி 50 மில்லியன் டொலர்களையும், ஆகஸ்ட் 30ம் திகதி 100 மில்லியன் டொலர்களையும், செப்தெம்பர் 21ம் திகதி 50 மில்லியன் டொலர்களையும், நாணய பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் இலங்கைக்குக் கொடுத்துதவி, நிர்க்கதியிலிருந்த நமது நாட்டை மீட்டெடுப்பதில் பங்களாதேஷும் நமக்கு உதவியதை ஒருபோதும் மறந்துவிட முடியாது.
கடன் தொகை முழுவதையும் செலுத்தி செலுத்திவிட்ட இலங்கையரசு, அதனுடன் தொடர்புடைய 4.5 மில்லியன் அமெரிக்க டொலர் வட்டித் தொகையையும் செலுத்தி நிறைவு செய்துள்ளதை பங்களாதேஷ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது வங்கரோத்து நிலையிலிருந்த இலங்கையின் பொருளாதாரம் ஸ்தீரமடைந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டாக இருக்கின்றது. அப்போது மிகுந்த துணிச்சலோடு அரசைப் பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கவின் சாணக்கியத்தனம் இதுவென்றால், அது மிகையல்ல என்று கூடக் கூறலாம்.
பொருளாதார ஸ்தீரத்தன்மையுடன் கட்டியெழுப்பப் பட்டிருந்த ஷேக் ஹஷீனா அரசை மாணவர்கள் சிதைத்து சின்னாபின்னமாக்கக் காரணமாயிருந்தது எது?
பங்களாதேஷில் நடந்த இந்த சடுதியான அரசியல் மாற்றத்தின் பின்னணியில் வெளிநாடுகளின் மறைகரம் இருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், தன்னை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் சதியின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக, எதிர்ப்புகளை எதிர்கொண்டு இராஜினாமா செய்த பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹஷீனா தெரிவித்துள்ளார்.
நாட்டில் வன்முறைகள் தொடர்வதைத் தடுப்பதற்காகவே, தான் இராஜினாமாச் செய்ததாகக் குறிப்பிடும் ஷேக் ஹஷீனா,மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அங்கேயே மறைந்திருக்கும் அவர், முதன் முறையாக இந்த அறிவிப்பை வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருந்திருக்கலாம் என்றுகூட சிலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
'பாகுபாட்டிற்கு எதிரான மாணவர்கள்' அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நஹீத் இஸ்லாம், பிரதமராக வரப்போகும் டொக்டர் முஹம்மது யூனுஸுடன் பேசியதாகவும், அவர் அரசாங்கத்தை வழிநடத்த ஒப்புக்கொண்டதாகவும் அறிவித்துள்ளார்.
நாட்டில் எந்தச் சூழ்நிலையிலும் இராணுவ ஆட்சி, இராணுவ ஆதரவு அரசு, சர்வாதிகார ஆட்சி ஆகியவை ஏற்கப்பட மாட்டாது எனவும், மாணவர்கள் முன்வைக்கும் அரசை தவிர வேறு ஆட்சி அமைப்பதை ஏற்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷின் இடைக்காலப் பிரதமராக டொக்டர் முஹம்மது யூனுஸ் கடந்த ஆகஸ்ட் 8ம் திகதி இரவு 8 மணியளவில் உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றார்.
பங்களாதேஷ் நாட்டின் அரசியல் அசாதாரண சூழல் காரணமாக, பிரதமர் ஷேக் ஹஷீனா பதவியை இராஜினாமா செய்ததைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உபைதுல் ஹஸன் பதவி விலகினார். இதனையடுத்து, பங்களாதேஷின் புதிய தலைமை நீதிபதிப் பொறுப்பை ஸெய்யது ரெஃபாத் அகமது ஏற்றுக் கொண்டார்.
தலைமை நீதிபதிக்கு பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவை அமைச்சரவை செயலாளர் மஹ்பூப் ஹூஸைன் நடத்திவைத்தார்.
ஷேக் ஹஷீனா இனி அரசியலுக்கு திரும்ப மாட்டார் என்று அவரது மகனும், அவரது தலைமை ஆலோசகருமான ஸஜீப் வஜீத் தெரிவித்தார்.
இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றிற்கும் கருத்துத் தெரிவித்த அவர், “இவ்வளவு கடின உழைப்புக்குப் பிறகும் மக்கள் தனக்கெதிராக திரும்பியதால் ஷேக் ஹஷீனா மிகவும் அதிருப்தியடைந்துள்ளார்" என்றும் குறிப்பிட்டார்.
"ஷேக் ஹஷீனா பிரதமர் பதவியில் இருந்து விலகுவது குறித்து ஞாயிற்றுக்கிழமை முதல் ஆலோசித்து வந்தார்; இனி அவர் அரசியலுக்கு திரும்பி வரமாட்டார். அவர் ஆட்சிக்கு வந்தபோது பங்களாதேஷ் ஒரு வீழ்ச்சியடைந்த நாடாக, ஏழை நாடாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது இது ஆசியாவின் அதிகம் வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாகவே இருக்கிறது” எனவும் தெரிவித்துள்ளார்.
பிந்திக் கிடைத்த செய்திகளின்படி, பங்களாதேஷில் மீண்டும் தேர்தல் நடாத்தப்படும்போது, ஷேக் ஹஷீனாவும் நாட்டுக்குத் திரும்பி வந்து தேர்தல் களத்தில் குதிக்கப் போவதாக அறிய முடிகின்றது!
இலங்கைக்கு கடன் வழங்குமளவுக்கு பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வந்த பங்களாதேஷின் கவலைக்குரிய இந்த நிலை சீரடைந்து, அங்கு ஸ்தீரமான ஆட்சி மீண்டும் நிறுவப்பட்டு, நாடு அபிவிருத்திப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்!
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments