Ticker

6/recent/ticker-posts

127 ரன்ஸ்.. இங்கிலாந்துக்கே பஸ்பால் காட்டிய நிஷாங்கா.. 10 வருடங்கள் கழித்து இலங்கை சாதனை வெற்றி


இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலையில் சம்பிரதாய கடைசிப் போட்டி செப்டம்பர் 6ஆம் தேதி லண்டனில் இருக்கும் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 325 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஓலி போப் சதமடித்து 154, பென் டக்கெட் 86 ரன்கள் எடுத்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக மிலன் ரத்நாயகே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை மீண்டும் சுமாராக விளையாடி 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக பதும் நிசாங்கா 64, கேப்டன் டீ சில்வா 69, கமிண்டு மெண்டிஸ் 64 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ஸ்டோன் 3, ஜோஸ் ஹுல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 90 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் களமிறங்கியது வரை போட்டி இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

அதைப் பயன்படுத்தி இங்கிலாந்து குறைந்தது 300 – 400 ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அனல் பறக்க பந்து வீசிய இலங்கை பவுலர்கள் இங்கிலாந்தை வெறும் 156 ரன்களுக்கு வீசினார்கள். அதனால் இலங்கைக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 67 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக லகிரு குமாரா 4, விஷ்வா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 219 என்ற சுலபமான இலக்கை துரத்திய இலங்கைக்கு கருணரத்னே 8 ரன்களில் அவுட்டானார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் பதும் நிசாங்கா அதிரடியாக விளையாடி அரை சதமடித்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்தார்.

அவரைப் போலவே அடுத்ததாக வந்த குசால் மெண்டிஸ் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 39 (37) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி இங்கிலாந்துக்கே பஸ்பால் காட்டிய நிசாங்கா சதமடித்து 13 பவுண்டரி 2 சிக்ஸருடன் 127* (124) ரன்கள் குவித்தார். அவருடன் ஏஞ்சலோ மேத்யூஸ் 32* ரன்கள் எடுத்ததால் இலங்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் வாயிலாக 2014 லீட்ஸ் மைதானத்தில் சந்தித்த வெற்றிக்குப் பின் 10 வருடங்கள் கழித்து இங்கிலாந்தை அதனுடைய சொந்த மண்ணில் ஒரு போட்டியில் இலங்கை தோற்கடித்து சாதனை படைத்துள்ளது. இதற்கிடைபட்ட காலகட்டங்களில் இங்கிலாந்து மண்ணில் இலங்கை 9 தோல்வி 1 ட்ராவை சந்தித்தது.

மேலும் ஓவல் மைதானத்தில் 1998க்குப்பின் 26 வருடங்கள் கழித்து இலங்கை வென்றது. அதனால் ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்த்த இலங்கை ஆறுதல் வெற்றி பெற்றது. மறுபுறம் 2 – 1 (3) என்ற கணக்கில் இங்கிலாந்து கோப்பையை வென்றது.

crictamil


 Ai SONGS

 



Post a Comment

0 Comments