Ticker

6/recent/ticker-posts

இரண்டரை மாதத்தில் 3 என்கவுன்ட்டர்... ரவுடிகளை மிரளவைக்கும் சென்னை போலீஸ் கமிஷனர் அருண்!

சென்னை காவல் ஆணையராக அருண் பதவியேற்றத்தில் இருந்து மூன்று என்கவுன்ட்டர் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை காவல் ஆணையராக கடந்த ஜூலை மாதம் ஐபிஎஸ் அதிகாரி அருண் பதவியேற்றுக்கொண்டார். இவர் பதவியேற்ற பின் சென்னையில் குற்ற சம்பவங்கள் மீதான நடவடிக்கை அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக ரவுடியிசம் தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை காவல் ஆணையராக அருண் பதவியேற்றத்தில் இருந்து மூன்று என்கவுன்ட்டர் சென்னையில் நடந்துள்ளது.

முதல் என்கவுன்ட்டர் : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தவர் திருவேங்கடம். ஆம்ஸ்ட்ராங்கை கொல்வதற்கான ரூட் மேப்பை கூலிப்படையினருக்கு கொடுத்தது திருவேங்கடம் என்கின்றனர் போலீஸார். ஆம்ஸ்ட்ராங்கை இரண்டாவதாக வெட்டியதும் இவர்தான் என்கிறது போலீஸ் தரப்பு.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த சரியாக 10வது நாளில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை பறிமுதல் செய்வதற்காக மணலியில் உள்ள அவரது வீட்டிற்கு காவல்துறை அழைத்துச் சென்றது.

செல்லும் வழியில் இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் காவல் வாகனத்தை நிறுத்தியதாகவும், அப்போது போலீஸாரை தாக்கிவிட்டு திருவேங்கடம் தப்பி ஓட, அதில் எழுந்த மோதலில் அவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார் என்றும் சொல்லப்பட்டது.  ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த பரபரப்பு உச்சத்தில் இருந்தபோது, அருண் பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் என்கவுன்ட்டர் இது.

2வது என்கவுன்ட்டர் : ஏ பிளஸ் கேட்டகிரி பட்டியலில் உள்ள பிரபல வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி. இவர் மீது 25 கொலை வழக்குகள் உட்பட 59 வழக்குகள் உள்ளன. இவரை கைது செய்ய கடந்த மூன்று ஆண்டுகளாக முயற்சித்தது சென்னை காவல்துறை.

ஆனால் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவரை, ஐந்து நாட்களுக்கு முன்பு (செப்.18) சென்னை வந்ததாக கிடைத்த தகவலை அடுத்த அவரை கைது செய்ய காவல்துறை தீவிரமானது. அவர் வந்த சொகுசு காரை மடக்க முயன்ற போது எழுந்த மோதலில் சென்னை வியாசர்பாடி அருகே காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு நடந்த இரண்டாவது என்கவுன்ட்டராக இது அமைந்தது.

3வது என்கவுன்ட்டர் : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யபட்ட 29வது குற்றவாளி ரவுடி சீசிங் ராஜா. செங்கல்பட்டைச் சேர்ந்த ரவுடி சீசிங் ராஜா, 7 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். தென் சென்னை பகுதியில் ரவுடியிசம் செய்துவந்த இவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்த, அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தேடிவந்தது காவல்துறை. இந்த நிலையில் ஆந்திராவில் பதுங்கியிருந்த அவரை, நேற்று கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான விசாரணையில் கொலைக்கான ஆயுதத்தை மறைத்துவைத்திருந்த இடத்தை காண்பிக்க அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது எழுந்த மோதலில் சென்னை நீலாங்கரை பகுதியில் வைத்து இன்று ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். சென்னை கமிஷனராக பொறுப்பேற்ற இரண்டரை மாதத்தில் நடந்த மூன்றாவது என்கவுன்ட்டராக இது அமைந்தது. இந்த மூன்று என்கவுன்ட்டரில் இரண்டு ஆம்ஸ்ட்ராங் கொலையோடு தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்பட்டவர்கள்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் தமிழக அரசுக்கு சென்னை காவல்துறையின் நடவடிக்கை மீது அதிருப்தி எழ, சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக ஏடிஜிபி அருண் நியமிக்கப்பட்டார். இடமாற்ற அறிவிப்பு வெளியான அன்றே பதவியேற்றுக்கொண்டார் அருண்.

காரணம், ஆம்ஸ்ட்ராங் கொலையை தொடர்ந்து சென்னையின் சட்டம் ஒழுங்கு குறித்து எழுந்த அச்சங்களும், கேள்விக்கணைகளும் தான். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை அடுத்து எதிர்க்கட்சிகள் தமிழக அரசை வறுத்தெடுக்க, அதற்கு பதில் கொடுக்கும் விதமாக புதிய காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அந்த சந்திப்பில், “சென்னை மாநகரில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட முன்னுரிமை கொடுக்கப்படும். ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதல் பணியாக இருக்கும். ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள். ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று எச்சரித்தார்.

இந்த எச்சரிக்கையின் அடுத்தகட்டமாக அருண் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை மூன்று என்கவுன்ட்டர்கள் சென்னையில் நடந்துள்ளன. அதுவும் இரண்டரை மாதத்தில் மூன்று என்கவுன்ட்டர்கள். இது தற்போது பேசுபொருளாகி உள்ளது.

news18



 Ai SONGS

 



Post a Comment

0 Comments