Ticker

6/recent/ticker-posts

பாவோபாப் Baobab மரங்கள், இலங்கைக்குள் வந்தது எப்படி?


எடன்சோனியா (Adansonia) எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த இந்த பெருக்க மரம் அல்லது பாவோபாப்  மரம்,     பிரெஞ்சு தாவரவியலாளர் எம். எடன்சன் (1727-1806) என்பவரின் பெயரால் அழைக்கப்படுகின்றது.

பெருக்க மரத்தில் ஒன்பது இனங்கள் உள்ளன. இதில் ஆறு இனங்கள் மடகாஸ்கருக்கும், இரண்டு இனங்கள் ஆபிரிக்கா-அரேபிய தீபகற்பத்திற்கும், ஓர் இனம் அவுஸ்திரேலியா நாட்டிற்கும் சொந்தமானதாகும்.

இம்மரம் ஐந்து முதல் முப்பது மீட்டர் உயரத்திற்கு வளரக்கூடியது. ஏழு முதல் பதினொரு மீற்றர் விட்டம் கொண்டது. தென்னாப்பிரிக்காவில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இம்மரமானது, அங்கு 'வாழ்க்கை மரம்' என்று அழைக்கப்படுகிறது.

ஆபிரிக்காவில் காலநிலை மிகவும் வறண்டது. மற்ற மரங்கள் அங்கு சிரமத்துடன் வளரும்போது, பாவோபாப் மரம் அங்கு செழித்து வளர்கிறது.

மழைக்காலத்தில், இம்மரம் தனது பரந்த தண்டுகளில் தண்ணீரை உறிஞ்சி சேமிக்கிறது. ஒரு முழு மரம் தன்னுள் ஆயிரக்கணக்கான லீற்றர் தண்ணீரை சேமித்து வைக்கும். அதன் தண்டுகளில் சேமிக்கப்பட்ட நீரைக் கொண்டு மரம் பல ஆண்டுகளாக உயிர்வாழ முடியும். வறட்சியிலும் வாழக்கூடியது.
பாயோபாப் மரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு தங்குமிடமாகவும், உணவு மற்றும் தண்ணீரை வழங்கக் கூடியதுமாகவும் உள்ளது. அதனால்தான் பல ஆபிரிக்க சமூகங்கள் தங்கள் வீடுகளை இம்மரம் கொண்டு கட்டியுள்ளன. 

இந்த மரத்தின் பழங்கள் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களில் அதிகமாக நிறைந்து காணப்படுவன.

உலகிலேயே பாயோபாப் பழம் மட்டுமே அதன் கிளையில் இயற்கையாக காய்ந்து விடக் கூடியன. அது உதிர்ந்து கெட்டுப்போகாமல், கிளையிலேயே தங்கி 6 மாதங்கள் வெய்யிலில் காயும் - பழத்தின் கோது முற்றிலும் காய்ந்து, தேங்காய்  ஓடு போன்று மாற்றமடையும். இது பல ஆண்டுகளாக சோர்வு, செரிமானம் போன்ற நோய்களுக்கு எதிரான பாதுகாப்பாகவும், தொற்றுநோய்களுக்கு சிகிட்சையளிப்பதற்கும், சருமத்தை அழகுபடுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த மரப்பட்டையிலிருந்து கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் இலைகளை கால்நடைகள் ஆர்வத்துடன் உண்ணும். மேலும் இதன் தண்டில் உள்ள தெளிந்த நீரை அருந்தலாம். அதன் பழ விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது; சந்தையில் இதன் மதிப்பு மிக அதிகம்.

கிராமப்புற ஆப்பிரிக்காவின் சில வறண்ட பகுதிகளில் பாவோபாப் மரங்கள் வளரும். நேஷனல் ஜியோகிராஃபிக் அறிக்கையின்படி, இந்த மரத்தின் தேவை அதன் தனித்துவமான பண்புகளால் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது. 

இலங்கையில் பல இடங்களில் காணப்படும்  பெருக்க மரங்கள் அராபிய வணிகர்களால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டன.
அதனால், அரபு தாவரப் பெயரான புஹிபாப் என்பதிலிருந்து பாவோபாப் என்ற சொல் வந்ததாகக் கூறப்படுகின்றது.

அரேபிய வணிகர்கள் தங்கள் ஒட்டகங்களுடன் சேர்ந்து பாயோபாப் மரங்களை கொண்டு வந்து மன்னாரின் சூடான மணல் நிலங்களில் நட்டியதாகக் கூறப்படுகின்றது. அரேபிய ஒட்டகங்களுக்கு உணவளிப்பதற்காக மட்டுமே ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பாவோபாப் மரம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. 

2003ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இலங்கையில் சுமார் 40 பாவோபாப் மரங்கள் எஞ்சியிருக்கின்றன, அவற்றில் 34 மன்னாரில் கண்டறியப்பட்டு அளவிடப்பட்டுள்ளன.  பெரும்பாலான மரங்கள் 300-400 ஆண்டுகள் பழமையானவை என்று கணக்கிடப்பட்டது. மிகவும் பழைமையானதாகக் கூறப்படும் பள்ளிமுனையிலுள்ள பெரிய பாயோபாப் மரம், 2003ம் ஆண்டு ஆய்வின்போது, இந்த மரம் 723 ஆண்டுகள் பழமையானது எனக் கணக்கிடப் பட்டுள்ளது.  மரத்தின் சுற்றளவு 19.5 மீற்றர்;  உயரம் 7.5 மீற்றர்களுமாகும். 
1908ம் ஆண்டு ஹென்றி டபிள்யூ. கேவ் எழுதிய 'புக் ஆஃப் சிலோன்’ என்ற நூலில் இப்பகுதியில் உள்ள இத்தகைய மரங்கள் பற்றியும், அவற்றின் எண்ணிக்கைகள்  பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.                              

இலங்கையில் இம்மரங்கள் 40க்கும் அதிகமாகக் காணப்படுகிறன. அவற்றுள் மன்னாரிலும், நெடுந்தீவிலும், வில்பத்திலும் உள்ளவை மிகவும் பழைமையானது.

இவை 20 மீற்றர் சுற்றளவு கொண்டது மற்றும் 700 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது.

மன்னாரில் உள்ள உள்ளூர்வாசிகள் இதை யானை மரம் என்று குறிப்பிடுவர். ஏனெனில் அதன் கடினமான, கசப்பான பட்டை யானையின் தோலை ஒத்திருக்கிறது.

இம்மரம், மன்னார் நகர மையத்திலிருந்து வடகிழக்கில் 1.2 கிமீ தொலைவில் உள்ளது.           

பாவோபாப் மரம், போவாப், போபோவா, பாட்டில் மரம், தலைகீழான மரம், வாழ்க்கை மரம், யானை மரம் மற்றும் குரங்கு ரொட்டி மரம் என்பன போன்ற பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது.

செம்மைத்துளியான்



 Ai SONGS

 



Post a Comment

0 Comments