Ticker

6/recent/ticker-posts

யார் இந்த ஸஜித்? அவருக்கு ஆதரவுதரும் அணிகள் அவரை வெல்ல வைக்குமா?


முஸ்லிம் மக்களில் ஒரு சாரார் இன்று ஜனாதிபதித் தேர்தலில் ஸஜித் பிரேமதாஸவின்  பக்கம் சரிந்து நிற்பதாக சில கருத்துக் கணிப்புக்கள் ஊகம் தெரிவிக்கின்றன. 

ராஜபக்ஷாக்கள் மற்றும் ரணில் விக்கிரமசிங்க  ஆகியோர் மீதான வெறுப்பு ஸஜித்துக்கு ஆதரவாக மாற்றம் பெற்றுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டும் வருகின்றனர். 

தந்தையின் அடிச்சுவட்டில் பயணிக்கும் மகன் 

57 வயது நிரம்பிய ஸஜித் பிரேமதாஸ, கொழும்பில் பிறந்தவராவார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகனான இவர்,  ஆரம்ப இடைநிலைக் கல்வியை கொழும்பில் கற்ற பின்னர், உயர்கல்வியை London School of Economicsல் இணைந்து கற்றார்.  இவர், 1993ல் தந்தை கொல்லப் பட்டதையடுத்து அங்கிந்து தாய்நாடு திரும்பி அரசியலுக்குள் நுழைந்தார்.

தந்தையின் அடிச்சுவட்டில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து, அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய இவர், கொழும்பு மாவட்டத்திலிருந்தே நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.

2001ல் சுகாதாரத்துறை பிரதி அமைச்சராக நியமனம் பெற்ற இவர், 2011ல் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவரானார்.

2015 ஜனாதிபதித் தேர்தலின்போது, மஹிந்த அணியைத் தோற்கடிக்க சில ராஜபக்ஷ் எதிர்ப்பு அணியினருடன் ஐ.தே.க. தீவிரமாக களத்தில் இறங்கியபோது,  அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபால சிரிசேனவை பொது வேட்பாளாராகக் களமிறக்கினர். 

மைத்திரி அணியின் வெற்றியைத்தொடர்ந்து ஸஜித் அவ்வாட்சியில் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவை எதிர்த்துக் களமிறங்குவது யார் என்ற விவாதம் கட்சிக்குள் சூடுபிடித்தது; வேட்பாளர் யார் என்பதில் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தீவிரமடைவதைக்கண்ட ரணில் விக்ரமசிங்க இறுதி நேரத்தில் ஸஜித்தை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அங்கீகரித்தார்.
அதில் ஸஜித் தோல்வியுற்றார். ஸஜித் இந்தத்தேர்தலில் தோல்வியடைவார் என்பதைத், தான் முற்கூட்டியே அறிந்திருந்ததாக பேட்டி ஒன்றின்போது ரணில் தெரிவித்தார்.

அதன் பின்னர், ஸஜித்துக்குச் சார்பானதும் ரணிலுக்கு  சார்பானதுமாக இரண்டு அணிகளாக ஐ.தே.கட்சி உடைந்தது. அதே ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஸஜித் தலைமையில் பிரிந்த அணி தன்னைத் தனி அரசியல் கட்சியாக  'ஸமகி ஜன பல வேகய' என்ற பெயரில் போட்டியில் இறங்கியது.

வெற்றிபெற்ற கட்சிக்கு அடுத்து அதிக ஆசனங்களைப் பெற்ற ஸஜித் கட்சியே பிரதான எதிர்க்கட்சியானது. 2020 ஜனவரியில் சபாநாயகரால் உத்தியோகபூர்வாக ஸஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்றில் நியமனம் பெற்றார்.

இன்று அவர் அந்தக் கட்சியிலிருந்தே ஜனாபதி வேட்பாளராகக் களமிறங்கி 'தொலைபேசி' சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
அவர் வெல்வாரா அல்லது தோற்பாரா என்பதை அவருடன் கூட்டணியில் இணைந்திருக்கும் கட்சிகளின் கெட்டிக்காரத்தனம் எந்தளவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டப் போகின்றது என்பதைப் பொறுத்தே நிர்ணயிக்க முடியும்.

குறிப்பாக 'அரகலை'க்குப் பிறகு மக்கள் பழைமைவாதக் கட்சிகளையும், அங்குமிங்குமாகத் தாவல் செய்து, அரசியல் பேரம் பேசும் கட்சிகளையும் வெறுத்து ஒதுக்கும் மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், அதனை மாற்றுவதற்கு வெறுமனே "ஊழல்வாதிகளை சிறைபிடிப்போம்" என்று வார்த்தை ஜாலம் புரிவது மட்டும் சரியான வழியல்ல என்பதை 'தொலைபேசி' உணரவேண்டும்!

இத்தேர்தலில் ஸஜித் பிரேமதாஸவின் வெற்றியை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள  கூட்டணியில் எட்டு முக்கிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. 
அவற்றுள் இரண்டு முஸ்லிம் பெயர் சொல்லிக் கொள்ளும் கட்சிகளாகும்; தாவலில் கைதேர்ந்த கட்சிகளான இவற்றின் சொல்பேச்சுக் கேட்கும் முஸ்லிம் மக்கள் எந்தளவிற்கு இந்த நாட்டில் இப்போது இருக்கின்றார்கள் என்பதை ஒரு கருத்துக் கணிப்பை எடுப்பதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

தன்னோடு சரிசமமாகப் போட்டியிடும் அடுத்த  வேட்பாளர்கள் இருவரினதும்  கொள்கைப் பிரகடனங்களும் மக்களைச் சென்றடைந்துள்ள அளவுக்கு, ஸஜித் பிரேமதாஸவின் கொள்கைப் பிரகடனம் இன்னும் தெளிவாக மக்களுக்குள் போய்ச் சேருமானால் அவரது வெற்றி நிச்சயமாகலாம்!

செம்மைத்துளியான் 


 Ai SONGS

 



Post a Comment

0 Comments