Ticker

6/recent/ticker-posts

சோரம் போகும் முஸ்லிம் அரசியல் பிம்பங்கள்!


திருக்குர்ஆன் பல இடங்களில் நயவஞ்சகர்களைப் பற்றிக் குறிப்பிட்டு அவர்களது சூழ்ச்சிகளின்போது மிகக் கவனமாக இருக்கும்படி   இறை நம்பிக்கை கொண்டோரை எச்சரிக்கை செய்கிறது. 

"அல்லாஹ் அவர்களைப் பரிகசிக்கிறான். மேலும், அவர்களுடைய வழிகேட்டில் கபோதிகளாக அவர்களை(த் தட்டழியும்படி) விட்டு வைத்திருக்கிறான்"  என்று அல்-குர்ஆன் (2:15) குறிப்பிடுகின்றது.

தேர்தல் காலம் வந்தால்,  இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளுள் பெரும்பாலானோருக்கு இந்த நிலைதான் வந்துவிடுகின்றது. அல்லாஹ் அவர்களைத் தட்டழிய வைத்திருக்கின்றானா அல்லது அவர்களாகவே தட்டழிகின்றார்களா என்பதுதான் புரியவில்லை!

அரசியல் மாற்றம் ஒன்றுக்காக 100 நாட்கள் போராட்டம் 

மக்களுக்கு துரோகமிழைத்து நாட்டை வங்குரோத்து ஆக்கிவிட்ட ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் இளம் தலைமுறையினர் இன-மத பேதமின்றியும், ஆண்கள்-பெண்கள் வித்தியாசமின்றியும் காலிமுகத்திடலில் ஒன்று திரண்டு போராடியபோது,  அவர்களோடு சரிசமமாக முஸ்லிம் மக்களும் முழு மனதோடு  களத்தில் திரண்டு நின்றார்கள். 
ஒரு தேசமே திரண்டெழுந்து அரசியல் மாற்றம் ஒன்றுக்காக 100 நாட்கள் போராடி வெற்றிக் கம்பத்தைத் தொட்டு நின்றது!

இப்போது ஒரு கூட்டம், தாம் இழந்த அரசியல் அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக செய்கின்ற சூழ்ச்சிகளின்போது, பேரங்கள் பேசி, கட்சித்தாவல்கள் செய்கின்ற முஸ்லிம் அரசியல் வாதிகளின் போக்கை முஸ்லிம் சமூகம் ஒருபோதும்  மன்னிக்காது.

அண்மைக்காலத்தில்  நிகழ்ந்த அமைச்சர்   நியமனங்கள் முஸ்லிம் சமூகத்தின் மீதான அனுதாபத்தினால் நிகழ்ந்ததல்ல; அரசாங்கத்தைத் தூக்கி நிறுத்துவதற்காக,  இருவர் அமைச்சரவைக்குள் ஈர்க்கப்பட்டு, இந்த அரசியல் சித்து விளையாட்டின் பங்குதாரர்களாக்கப் பட்டுள்ளனர் என்பதை இலங்கை மக்கள் மட்டுமன்றி, ஜனாதிபதியிடமிருந்து அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்ட அவர்களும் நன்கு அறிவர்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கி அவரை சர்வாதிகாரியாக ஆக்கிவிடக் காரணமாக இருந்த அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின்போது, இந்த இருவர் உட்பட ஏழு முஸ்லிம் சந்தர்ப்பவாதிகள் வாக்களித்திருந்தமை முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி, ஒட்டுமொத்த இந்நாட்டு மக்கள் அனைவருமே ஒருபோதும் மறக்க முடியாத ஒரு நிகழ்வுமாகும். 

முஸ்லிம் பெயர் சொல்லிக் கொள்ளும் இரு கட்சிகளும் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் தமது செல்வாக்கைத் தக்க வைப்பதற்கும் முஸ்லிம் வாக்காளர்களுக்கு மத்தியில் சமூகத்தைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றன.

ஒரு காலத்தில்,  நாட்டினதும் சமூகத்தினதும் பொது நலன் கருதி அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய, போற்றத்தக்க ஆளுமைகளை முஸ்லிம் சமூகம் கொண்டிருந்தது; இப்போது அந்த நிலை மாறி,டொலருக்காக சோரம் போகக்கூடிய முஸ்லிம் பிம்பங்களே அரசியல் செய்கின்றன. 

ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமாக நமது நாட்டின் செழுமையையும், அமைதியையும் பிரிவினைவாதம் அழித்து சின்னாபின்னம் ஆக்கியது.

முஸ்லிம் சமூகம் தனது வாக்குச்சீட்டை தனது சொந்த அபிப்பிராயத்தைக் கொண்டு எவரும் தேர்ந்தெடுப்பது என்று தீர்மானிப்பதன் மூலம் இந்த நயவஞ்சகர்களைத் தூர எறியும் தருணத்தை இந்நாடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது!

அதனால், 'அரகல' கிளர்ச்சிப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக அமைவது இம்முறை ஜனாதிபதித்தேர்தலே!

38 பேர்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய போதிலும், 35 பேர்கள் தாங்கள் விரும்பாத ஒருவர் வெற்றிபெறுவதைத் தடுப்பதற்காக வாக்குகளைப் பிரிக்கும் நோக்கில் குதித்துள்ளார்களே ஒழிய, தாம் வெல்ல வேண்டும் என்பதற்காகவல்ல!

அரசியல் வியாபாரிகள் 

இவர்களுள் சஜித், ரணில் இருவரும் இந்நாட்டின் அரசியற் கலாச்சாரமும் அதன் ஆட்சிப் பண்புகளும் மாறாதிருக்க வேண்டுமென விரும்புபவர்கள். ஏனெனில், அவர்கள் அந்த பழைமைக் கலாசாரம் வளர்த்துத்தந்த அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அதே கலாச்சாரத்தின் அசிங்கமான பண்புகளைத்தான் இத்தேர்தலிலும் தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்பிக் கொள்வதற்குப் பயன்படுத்துகின்றனர்.
இவர்களே அரசியலை ஒரு வியாபாரமாகக் கருதி, ஆதரவாளர்களையும் தொண்டர்களையும் விலைபேசுவதில் திறமை மிகக் கொண்டவர்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுவது தவறில்லை!

இந்தச் சீரழிந்த அரசியற் கலாச்சாரத்தை சமூகப் புரட்சி மூலம் துடைத்தெறியாதவரை இலங்கைக்கு விடிவு காலமில்லை!


செம்மைத்துளியான்


 Ai SONGS

 



Post a Comment

0 Comments