
இறுதியாக வெளியான தேர்தல் முடிவுகளின்படி அநுரகுமார திசாநாயக்க 5634915 (42.44%) வாக்குகளும், ஸஜித் பிரேமதாச 4363035 (32.66%) வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதன்படி ஸஜித் பிரேமதாசவை விடவும் 1271880 வாக்குகளை அநுரகுமார பெற்றபோதிலும், இரண்டு வேட்பாளர்களில் எவரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறாததால், 38 வேட்பாளர்களுள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள வேட்பாளர்கள்
மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு, அவர்களுக்கான விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு, அதிக வாக்குகளைப் பெற்றவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட தேர்தல்கள் ஆணையகம் நடவடிக்கை எடுத்தது.
இரண்டாம், விருப்பு வாக்குகளை எண்ணியதில் ஸஜித் பிரேமதாச 167867 வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 105264 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இந்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை.

அந்த வகையில், தேசிய மக்கள் சக்தி சார்பில் இரண்டாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய அநுரகுமார திசாநாயக்க, நடந்து முடிந்த தேர்தலில் 1271880+105264=1377144 மேலதிக வாக்குகளைப் பெற்று வெற்றி கண்ட நிலையில், இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்றைய தினம் பதவியேற்கின்றார்.
இலங்கை அரசியல் வரலாற்றில், குடும்ப அல்லது மேலாதிக்க வர்க்கத்தினரின் ஆட்சிகளுக்கு இம்முறை தேர்தல் மூலம் சாவுமணி அடித்துவிட்ட மக்கள், System Change என்ற கோணத்தில் சிந்தித்து வாக்களித்துள்ளனர் என்பது தெளிவாகப் புலனாகின்றது.
பொருளாதார நெருக்கடிக்குப் பின்னரான 'அரகலய' போராட்டமே, தேசிய மக்கள் சக்தி மீதும், அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்கா மீதும் மக்கள் ஆதரவு பெருகக் காரணமாக அமைந்ததெனலாம்!
ஹர்ஷவும், அலி ஸப்ரியும்
வாழ்த்து:
இலங்கையின் புதிய ஜனாதிபதியாகப்போகும் அனுரகுமார திசாநாயக்காவுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி ஸப்ரி ஆகியோர் தமது எக்ஸ் தளத்தனூடாக வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகம் மற்றும் நல்லெண்ணத்தின் உணர்வில் திஸாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்துள்ள ஹர்ஷ டி சில்வா, "முன்னோக்கிச் செல்லும் கடினமான பாதையில்" சிறந்து விளங்க வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2019 கோட்டாவின் வெற்றி:

கடந்த 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அநுராதபுரம் - ருவன் வெளிசாய புனித பிரதேசத்தில் உத்தியோக பூர்வமாகப் பதவிப் பிரமாணம் செய்தார்.
1949 ஜூன் 20ம் திகதி, தான் பிறந்தது முதல் இலங்கையராகவே இருந்து 2003ல் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுக் கொண்டார்; 2005ல் அமெரிக்க-இலங்கை இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்த இவர், 2019ல் மீண்டும் தனி இலங்கைக் குடியுரிமையுடன், ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகக் களமிறக்கப் பட்டார்!
2019 நவம்பர் 18ல் இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்ற இவர், பத்து வருடங்களாக பாதுகாப்பை சிறப்பாகக் கையாண்டதால், இலங்கையின் முழுமையான அபிவிருத்திக்கும், பாதுகாப்புக்கும் உத்தரவாதமளிப்பார் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றிய வாக்காளர்கள், அவரை அமோக வெற்றி பெறச் செய்தபோதிலும், இலங்கை மக்கள் எதிர்பார்த்தது நிறைவேறாமற்போய், நாடு வங்கரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டது!
தொடர்ந்து வந்த பொருளாதார-நிதிப் பிரச்சினைகளால் வேறும் பல பிரச்சினைகள் தோன்றியதால் பாதிப்புக்குள்ளாகி, நிர்க்கதியான மக்கள் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் எதிராக 'அரகலய' என்ற பெயரில் காலிமுகத் திடலில் போராட்டம் செய்து 2022ம் ஆண்டு ஜூலை 14ம் திகதி அவரைப் பதவியிலிருந்து ஓட வைத்தனர்!
கோட்டாபய ராஜபக்ஷ 2019 நவம்பர் 18 முதல் 2022 ஜூலை 14 ல், தான் பதவிவிலகும் வரை,2 வருடங்கள், 7 மாதங்கள், 26 நாட்களுமாக ஜனாதிபதிப் பதவியில் இருந்தார்.
ரணில் பதவிக்கு வந்தமை:
இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு மக்களின் வரம் நாடி நின்றார்.

இவர், 1993-1994, 2001-2004, 2015-2018, 2018-2019, 2022 காலப்பகுதிகளில் ஐந்து தடவைகள் பிரதமராகவும், 1994-2001, 2004-2015 காலப்பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவராவார்.
நல்லாட்சியின் தோல்வி:
ரணில் விக்கிரமசிங்கவின் அப்போதைய அரசியல் கூட்டணியான 'நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி' 2015 நாடாளுமன்றத் தேர்தலில் 106 இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 113 என்ற அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமையினால் 'ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி'யின் உறுப்பினர்கள் 35 பேர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கியதன் மூலமும், 16 உறுப்பினர்களைக் கொண்ட 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு' நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன் வந்ததையடுத்து ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அமைத்தார்.
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, விஜயதாச ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகிய ஐவரும் நல்லாட்சி அரசாங்கத்தில் வலிமையானவர்களாகச் செயற்பட்டவர்கள்.
ரணில் விக்கிரமசிங்க 'நல்லாட்சி ஐக்கிய தேசிய முன்னணி' அரசாங்கத்தின் பிரதமராகவும், சஜித் பிரேமதாச வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராகவும், அனுரகுமார திஸாநாயக்க ஊழல் எதிர்ப்புக் குழுவின் தலைவராகவும், விஜயதாச ராஜபக்ச நல்லாட்சி அரசாங்கத்தின் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராகவும், சரத் பொன்சேகா வனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்தனர்.
ஆட்சிக்குள் ஏற்பட்ட போட்டி-பொறாமை- உட்பூசல் காரணமாக, 2018 அக்டோபர் 26ல் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக்கப்பட்டார்!
இதனை ரணில் விக்கிரமசிங்க அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது எனக்கூறி பதவி விலக மறுத்ததினால் அரசியலமைப்பு நெருக்கடிக்குள்ளானது.
ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி விலக்கியது அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, 2018 டிஸம்பர் 16ம் திகதி விக்கிரமசிங்க மீண்டும் பிரதமரானார்.
52 நாள் ராஜபக்ஷ ஆட்சி:

இந்த 52 நாட்கள் தான் ஆட்சியிலிருந்த காலத்தில், தனது ஆதரவாளர்களுக்குத் தேவையான அனைத்துக் கைங்கரியங்களையும் சிறப்புறச் செய்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, 2019ல் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராசபக்ஷ அமோக வெற்றி அடைந்ததையடுத்து, ரணில் விக்கிரமசிங்க 2019 நவம்பர் 20ம் திகதி பதவி இழந்தார்.
அதன் பின்னர், 2020 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் போட்டியிட்டபோதிலும், இவரையும் இவரது கட்சியையும் இலங்கை மக்கள் முற்றுமுழுதாக நிராகரித்ததினால், இவரது கட்சியிலிருந்து, -இவர் உட்பட- எவருமே நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை!
வரலாற்றில் பழைமையான ஒரு பெருங்கட்சிக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டது இதுவே முதற் தடவையாகும்.
அதிர்ஷ்டங்கள் மூன்று:
இருப்பினும், இவர் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட பின்னர் கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு 'தேசியப்பட்டியல்' ஆசனத்தின் மூலம், 2021 ஜூன் 23ம் திகதி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தமை, இவரது முதலாவது பேரதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும்!
2022ம் ஆண்டில் நாட்டில் இடம்பெற்ற பெரும் பொருளாதார நெருக்கடியையடுத்து ராஜபக்ஷ குடும்ப ஆட்சிக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்களின் விளைவாக மஹிந்த ராஜபக்ஷ 2022 மே 9ம் திகதி பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொண்டதும், 2022 மே 12ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவரைப் பிரதமராக நியமனம் செய்தது இவரது இரண்டாவது அதிர்ஷ்டமாகும்!
2022 ஜூலை 9ம் திகதி ஜனாதிபதி மாளிகை 'அரகலய' போராட்டக்காரர்களால் கைப்பற்றப் பட்டதும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவானார்!
2022 ஜூலை 13ம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதையடுத்து, ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக்கப்பட்டது இவரின் மூன்றாவது பேரதிர்ஷ்டமாகும்!
2022 ஜூலை 14ம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ உத்யோகபூர்வமாகத் தனது ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகியதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்த ரணில் விக்கிரமசிங்க, 2022 ஜூலை 14ம் திகதி இடைக்கால ஜனாதிபதியானார்.
2022 ஜூலை 20ம் திகதி, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க, 134 வாக்குகள் பெற்று எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக உத்யோகபூர்வமாகத் நியமனம் பெற்றார்.
இடைக்கால ஜனாதிபதியாக 2022 ஜூலை 14ல் பதவியேற்ற இவர், 2 வருடங்கள், 4 மாதங்கள், 4 நாட்கள் ஆட்சி செய்து, அவரது பதவிக்காலத்தை 2024 நவம்பர் 18ம் திகதி முடிவுக்குக்கு வரவுள்ளது!
தோல்விகள் பல கண்டு, மக்கள் மனதில் இடம்பிடியாது இருந்தபோதிலும் கூட, சிறிதும் துவண்டு விடாமல் தனது அரசியல் வாழ்க்கையில் நம்பிக்கை மிகக் கொண்டிருந்த ரணில் விக்னமசிங்க, தூர்ந்துவிடும் நிலையிலிருந்த இலங்கை நாட்டை நிமிர்த்தி வைத்தார்.
பொருளாதாரத்தில் வீழ்ச்சிகண்டு, அதலபாதாளம் தள்ளப்பட்டிருந்த ஒரு நாட்டை நிமிர்த்தி எடுக்க வேண்டுமென்றால், கடன் படாமல் அதனைச் செய்வதென்பது முடியாத காரியம்.
100 பில்லியன் டொலர் கடன்:

அந்த வகையில் இலங்கை 2024 மார்ச் வரை 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாளி ஆகியுள்ளதென Ministry of Finance - Economic Stabilization and National Pilicies குறிப்பிடுகின்றது. இதில் 37.0 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக் கடன்கள் என்றும், 57.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உள்நாட்டுக் கடன்கள் எனவும் மேலும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது!
ஒரு கோடி ரூபா செலவாக்கப்பட்டு, 2024 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், இரண்டடி நீளமான வாக்குச் சீட்டில் மக்கள் தமது பொன்னான வாக்குகளை இட்டு, அநுர குமார திசாநாயக்காவை முன்னிலைப்படுத்தி, இப்போது அரசியல் மாற்றம் ஒன்றை வேண்டி நிற்கின்றனர்.
ஜனாதிபதி தேர்தல் பிரகடனத்தின் பின்னர் பல அரசியல் நாடகங்கள் அரங்கேறின. நாட்டை வங்குரோத்து செய்த அணி, மீண்டும் ஆட்சியை பிடிக்க ஜனாதிபதி ரணில் தலைமையைப் பயன்படுத்த முற்பட்டபோதிலும், மக்கள் தமது வாக்குப் பலத்தினால் அவர்களுக்குச் சரியான பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர்!
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments