திருச்சி. புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்ட எல்லைகளில் நில அபகரிப்பு செய்யும் ரவுடிகளை ஒடுக்குவதற்காக “ஆபரேஷன் அகழி” என்ற திட்டத்தை, திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண்குமார் கடந்த 19ம் தேதி அதிரடியாக துவங்கி ரவுடிகளை வேட்டையாடி வருகிறார்.
ஒரு குழுவிற்கு ஒரு இன்ஸ்பெக்டர் என்ற விதத்தில் 14 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 14 சப் இன்ஸ்பெக்டர்கள் 42 போலீசார் என தனித்தனியாக 14 குழுக்கள் அமைத்து நிலஅபகரிப்பு மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரவுடிகளின் வீடுகளில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் இறங்கினர்.
இதில் ரவுடிகளுக்கு தொடர்பில்லாத 258 சொத்து ஆவணங்கள், 68 வங்கி கணக்கு புத்தகங்கள், 75 புரோநோட்டுகள், 82 நிரப்பப்படாத காசோலைகள், 18 செல்போன்கள், 84 சிம்கார்டுகள் மற்றும் பிற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த அதிரடி நடவடிக்கையில் ஏற்கனவே பிரபல ரவுடி கொட்டப்பட்டு செந்தில் என்பவர் கால் உடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த சந்திர மௌலி என்ற ரவுடி கைது செய்யப்பட்டார். இந்த சோதனையில் திருவெறும்பூர் அருகே உள்ள நத்தமாடிப்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி மைக்கேல் சுரேஷ் என்கிற பட்டறை சுரேஷ் வீட்டிலிருந்து மட்டும் கணக்கில் வராத 66 அசல் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
66 அசல் பத்திரங்களும் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து மூலமாகவும், கந்து வட்டி தொழில் மூலமாகவும் மிரட்டி பெறப்பட்டவை என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் பட்டறை சுரேஷ் வீட்டில் ஆள் இல்லாத நிலையில் அவர் எங்கு சென்றார் என போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்த அதிரடி வேட்டையில், பட்டறை சுரேஷின் கூட்டாளிகள் இருவர் சிக்கினர்.
திருச்சி உறையூர் கீழ பாண்டமங்கலத்தைச் சேர்ந்த குமார், நவலூர் குட்டப்பட்டு பகுதியை சேர்ந்த ராமதாஸ் ஆகிய ரவுடிகளை, எஸ்பி தனிப்படையினர் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் பட்டறை சுரேஷ் மட்டும் சிக்காமல் போலீசாருக்கு தண்ணிகாட்டி வந்தார்.
அவரைப் பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார் புதுச்சேரி- தமிழகம் எல்லையில் மனைவியுடன் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் பட்டறை சுரேஷை சுற்றி வளைத்து கைது செய்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளியான பட்டறை சுரேஷ் மீது கொலை, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவரிடமிருந்து ஏராளமான அபகரிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆபரேஷன் அகழி அதிரடி நடவடிக்கையில் அடுத்தடுத்து பெரு முதலைகள் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments