எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் இருக்கலாம்.)
சுவிட்சர்லாந்தில் ஒரு பெண் `தற்கொலை பாட்’ என்ற சாதனத்தைப் பயன்படுத்தித் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பலரை காவல்துறை கைது செய்துள்ளது.
திங்களன்று சார்கோ (Sarco) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தற்கொலை சாதனத்தைப் (suicide pod) பயன்படுத்தி ஒரு பெண் இறந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, ஷாஃப்ஹவுசென் (Schaffhausen) பகுதியில் உள்ள போலீசார், தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் அதற்கு உதவி செய்தல் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் "பல நபர்களை" கைது செய்ததாகத் தெரிவித்தனர்.
சுவிட்சர்லாந்தில் சில நிபந்தைகளின் கீழ் `அசிஸ்டெட் மரணம்’ (assisted dying) சட்டப்பூர்வமானது என்றாலும், அதில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. சார்கோ நிறுவனத்தின் இந்தத் தற்கொலை சாதனம் பெரும் பிரச்னைகளை எதிர்கொண்டது.
காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திலிருந்து ஒரு தற்கொலை சாதனம் மற்றும் பெண்ணின் சடலத்தை மீட்டனர்.
சர்ச்சைக்குரிய இந்தத் தற்கொலை சாதனத்தைத் தயாரித்த நிறுவனம், ``மருத்துவ மேற்பார்வையின்றி, தனது சொந்த வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பும் நபரால் இந்தச் சாதனத்தை இயக்கி மரணிக்க முடியும்” என்கிறது.
காவல்துறையின் கூற்றுப்படி, ஜெர்மன் எல்லைக்கு அருகிலுள்ள சுவிட்சர்லாந்தின் தொலைதூரப் பகுதியான மெரிஷாவுசென் பகுதியில் திங்கள்கிழமை ஒரு வீட்டில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சார்கோ சாதனத்தைப் பயன்படுத்தி நடந்த தற்கொலை குறித்து ஒரு சட்ட நிறுவனம் தகவல் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. மேலும் இறந்தவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
சுயவிருப்ப இறப்பை (Assisted dying) ஆதரிக்கும் ஒரு குழு, கடந்த ஜூலை மாதம், சார்கோ சாதனத்துக்கு ஆதரவு தெரிவித்தது. இந்த ஆண்டு முதல் முறையாக அது பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்த்ததாக அந்தக் குழு கூறியது.
இந்த கையடக்க சாதனத்தை 3D மூலம் அச்சிட்டு வீட்டிலேயே கட்டமைக்க முடியும். எனவே இது கருணைக் கொலைக்கான அணுகலை அதிகரிக்கிறது என்றும், மருந்துகள் அல்லது மருத்துவ நிபுணர்களைச் சாராமல் சுயவிருப்ப இறப்பை நிகழ்த்த உதவுவதாகவும் இதை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், சுவிட்சர்லாந்திலும் இந்தச் சாதனம் கடும் எதிர்ப்பைச் சந்தித்தது.
இந்தச் சாதனத்தின் நவீன வடிவமைப்பு தற்கொலையைத் தூண்டுவதாக விமர்சகர்கள் அஞ்சுகின்றனர். மருத்துவ மேற்பார்வையின்றி அதை இயக்க முடியும் என்பது அதிக கவலைக்குரியது என்கின்றனர்.
பிரிட்டனிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் சுயவிருப்ப இறப்பு (Assisted dying) சட்டவிரோதமானது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள சுவிட்சர்லாந்திற்கு சென்றுள்ளனர். அங்கு நிபந்தனைகளின் கீழ் சுயவிருப்ப இறப்பு சட்டப்பூர்வமானது.
முக்கியத் தகவல்
மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
- சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணிநேர சேவை)
- மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (224 மணிநேர சேவை)
- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019 (13 மொழிகளில் சேவைகள் கிடைக்கின்றன)
- மனித நடத்தை மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம் - 9868396824, 9868396841, 011-22574820
- தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் – 080 – 26995000
bbctamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments