Ticker

6/recent/ticker-posts

மஹிந்த ராஜபக்ஷவின் புத்தம் புது வியூகம்! நாமலின் திடீர் களமிறக்கம்!


ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது முதல், பிரபல தொழிலதிபர் ஒருவரையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது வேட்பாளராகக் களமிறக்கும் என்ற செய்திகள் பரவிக் கொண்டிருந்த நிலையில், திடீரென நாமல் ராஜபக்ஷ களத்தில் குதித்தது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனாரான, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இம்முறை, முதன் முதலாக ஜனாதிபதித் தேர்தலில் 'மொட்டு' சின்னத்தில் போட்டியிட இறுதிக் கட்டத்தில் முடிவெடுத்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரதான 120 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 40 பிரச்சார கூட்டங்களில்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார் எனவும் தெரிவித்துள்ள இலங்கைக்கான ரஷ்யாவின் முன்னாள் தூதுவரும், ராஜபக்ஷ குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வெற்றி பெறுவாரானால், குருணாகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிரதமராக்க உத்தேசித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர்களான இந்திக்க அனுருத்த,      (மின்சக்தி மற்றும் எரிசக்தி), சிறிபால கம்லத். (நெடுஞ்சாலைகள்) மொஹான் பிரியதர்ஷன டி சில்வா (விவசாயம்) பிரேமலால் ஜயசேகர (துறைமுக மற்றும் விமான சேவைகள்)  ஆகியோர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளமை காரணமாக,  அரசியலமைப்பில் தனக்குள்ள 47(3)(a) பிரிவு அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவர்களைப் பதவி நீக்கம் செய்துள்ளார்.

அத்துடன், சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிலிருந்து நாமல் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 1986 ஏப்ரல் 10ம் திகதி பிறந்த நாமல் ராஜபக்ஷ  2010, 2015 பொதுத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டவராவார்.

2020 பொதுத் தேர்தலில் இலங்கை பொதுசன முன்னணி சார்பில் போட்டியிட்டு, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற இவர்,  2020 - 2022 காலகட்டத்தில், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார்.

மகனை அரசியலில் இறக்கி, இந்நாட்டின் தலைமைப் பெறுப்பில் வைத்துப் பார்க்க வேண்டும் என்பது மஹிந்த ராஜபக்ஷவின் நீண்டகாலக் கனவாக இருந்து வந்தபோதிலும், 2022 காலகட்டத்தில் ஏற்பட்ட நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவான 'அரகலை'  திடல் போராட்டம் ராஜபக்ஷாக்களின் அரசியல் நகர்வை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது!

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ராஜபக்ஷ குடும்பம் நாட்டின் பலம் மிக்கதாக விளங்கியது. 2005 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் இக்குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் உயர் அரசியல் பதவிகளை வகித்தனர்.
அத்துடன், சர்வாதிகாரம், ஊழல், மோசமான ஆட்சி, குடும்ப உறுப்பினர்களுக்குச் சலுகை வழங்கல் என்றவாறு பல்வேறு குற்றச்சாட்டுக்களும் இக்குடும்ப அங்கத்தவர்கள் மீது சுமத்தப்பட்டதோடு, இக்குடும்பத்தின் செயற்பாடுகள் அரசராட்சி, ஏகாதிபத்திய ஆட்சி போன்றவற்றிற்கு முன்னெடுத்துச் சென்றதாகவும்  குற்றம்சாட்டப்பட்டது.

2009ம் ஆண்டில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமையால் பெரும்பாலான சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றபோதிலும், இனவிரோத அமைப்புக்களுக்கு ஆதரவு அளித்தமையினால் சிறுபான்மையினர் மீது மேற்கொண்ட வீண்பழி, குரோதம், தக்குதல்கள் ஆகியவற்றால் ராஜபக்ஷாக்கள் சிறுபான்மையினரினதும், மனிதநேயம் கருதும் பெரும்பான்மையினரினதும் வெறுப்பிற்குள்ளாகி, அரசியலில் பொழிவிழந்து, கீழ்மட்டம் சென்றனர்.

மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்குள் நுழைந்து கொள்ளத் துடிக்கும் இக்குடும்பம், ரணிலை ஜனாதிபதியாக்கி, நாமலை பிரதமராக்கும் திட்டம் ஒன்று அவர்களுக்கு இருப்பதாக, இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான, திரு சபா. குகதாஸ் தெரிவித்துள்ளதாக 'சமூகம்' செய்தி வெளியிட்டுள்ளது. 

'குடும்ப ஆட்சி மீண்டும் வர, மக்கள் ஆணை வழங்கக்கூடாது' என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக, ரிக்கில்லகஸ்கட பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

திரு. சபா. குகதாஸ்
இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான திரு சபா. குகதாஸ் தொடர்ந்து பேசுகையில்,

"ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ஷ குடும்ப சார்பற்ற வேட்பாளர் என்ற தோற்றப்பாட்டை காட்டி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை முழுமையாக ரணில் விக்கிரமசிங்க பெறுவதற்கான வியூகங்களை வகுத்துக் கொண்டு, மொட்டுக் கட்சியின் வேட்பாளராக நாமலை நிறுத்தி மொட்டுக்கு கிடைக்கும் வாக்குகளில் இரண்டாவது விருப்பு இலக்கத் தெரிவை  ரணிலுக்கு வழங்குமாறு கேட்கும் திட்டத்தினூடாக பிரதமராகும் எண்ணமே நாமலின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு" என்று குறிபிட்டுள்ளார்.

அத்துடன், "மொட்டுக் கட்சியின் 80% பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ரணில் விக்கிரமசிங்காவை ஆதரிக்கும் வியூகத்தை அமைத்துக் கொடுத்த மஹிந்த ராஜபக்ஷ தனது மகனின் வேட்பாளர் அறிவிப்பை ஆரவாரங்கள் இல்லாமல் சாதாரணமாகவே நடாத்தியுள்ளார்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செம்மைத்துளியான்


 Ai SONGS

 



Post a Comment

0 Comments