மார்கோஸின் மீள்வருகை: ராஜபக்‌ஷாக்களின் வருகைக்கான சாத்தியப்பாடுகளா?

மார்கோஸின் மீள்வருகை: ராஜபக்‌ஷாக்களின் வருகைக்கான சாத்தியப்பாடுகளா?


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இன்றைய அரசாங்கத்துக்கும், மக்கள் போராட்டத்துக்கு மத்தியில் பதவியில் இருந்து இறங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கத்துக்குமிடையில் பொருளாதார ரீதியான வேறுபாடு சற்று மாற்றம் கண்டுள்ளதே தவிர, அரசியல் ரீதியான எவ்விதமான மாற்றங்களும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை!

ராஜபக்‌ஷாவின் அமைச்சரவையில் இருந்தவர்களே இன்றும் முக்கிய அமைச்சர்களாகவும், இராஜாங்க அமைச்சர்களாகவும் பதவி வகித்து வருகின்றார்கள். நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளையும் அரச பதவிகளில் நியமிப்பதைக் கூட ஜனாதிபதியால் தவிர்க்க முடியாத நிலையில்  அவர் பொதுஜன பெரமுனையின் ஆதரவாளர்களின் கரங்களுக்குள் இறுகிக் கிடக்கின்றார்.

2022 ஏப்ரல் முற்பகுதியில், நாடு பொருளாதார நெருக்கடிக்குள்ளாகிவிட்ட நிலையில் மக்கள் கிளர்ந்தெழுந்தபோது, கோட்டபாய கேட்டுக் கொண்டதற்கிணங்க பதவிகளை துறந்தவர்களும், பிறகு மே மாதம் மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியிலிருந்து இறங்கியபோது, கலைந்த அமைச்சரவையில் இருந்தவர்களும் ரணிலின் இன்றைய அமைச்சரவையை ஆக்கிரமித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்! இது இலங்கையின் பொதுமக்களுக்கும், குறிப்பாக வாக்காளப் பெருமக்களுக்கும் தெரியாத ஒரு விடயமுமல்ல.

குடும்ப ஆதிக்க அரசியல், அதிகார துஷ்பிரயோகம், படுமோசமான ஊழல், சட்ட துஷ்பிரயோகம், ஆட்சிச் சீர்குலைவு மற்றும் ஆட்சிமுறையின் கெடுதியான போக்குகள் சகலவற்றையும் உருவகப்படுத்தி அதிகாரத்தில் இருப்பவர்கள் கூண்டோடு வெளியேற வேண்டும் என்பதே 'அரகலய' என்ற மக்கள் கிளர்ச்சிப் போராட்டத்தின் பிரதான முழக்கமாக இருந்தது.

இடைக்காலத்தில் வந்த  ரணில் ஆட்சியானது, தவறான ஆட்சி முறைக்கு எதிராகக் கிளர்த்து எழுந்தவர்களை  அவமதிக்கும் ஆட்சியாக இருப்பதாக நோக்கும் இந்நாட்டு மக்கள் ராஜபக்‌ஷாக்களை மீண்டும் பதவிகளில் அமர்த்துவதை ஜனாதிபதி விக்கிரமசிங்க விரும்பவில்லை என்று கூறப்படுவது ஒரு கண்துடைப்பு என்றுதான் கருதுகின்றார்கள்.

இன்று அமைச்சர்களாகவும், அரசின் அதியுயர் பதவிகளிலும் இருக்கின்ற ராஜபக்ஷாக்களின் ஆதரவாளர்கள், ரணிலின் பிரசார மேடைகளில் முழங்கி, மிகவும் புத்திசாலித்தனமாகவும், சாதுரியமாகவும் மக்கள் மனதை 'சிலிண்டர்' பக்கம் சாய்த்து வருவதாக நினைககின்றார்கள்!
பிலிப்பைன்ஸ் சர்வாதிகாரி பேர்டினண்ட் மார்கோஸ், மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் நாட்டை விட்டும் தப்பியோடினார்; அவரது மகன் பொங்பொங் மார்கோஸ் கடந்த 2022 மே மாதம் ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்தார்.

பொங்பொங்கின் வெற்றியைக் கண்டு மஹிந்த ராஜபக்‌ஷாவும், அவரது மகனும் அதிகம்  மகிழ்ச்சியடைந்திருக்கலாம்; காலப்போக்கில் தாங்களும் மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையை இந்நிகழ்வு அவர்களுக்குப் பெரும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கலாம்! அதனால்தான் மஹிந்த ராஜபக்ஷ, தன் மகனை தேர்தல் களத்தில் குதிக்க வைத்துள்ளார்.

அவரும் தனது கொள்கைப் பிரகடனப்படுத்த மாநாட்டில் பத்து வருடங்களுக்குள்  நாட்டின் பொருளாதாரத்தை இரு மடங்காக்கிக் காட்டப்போவதாக சூழுரைத்திருக்கின்றார்.

ராஜபக்ஷாக்களுக்கள் இருக்கும், தாங்கள் மறுபடியும் இலங்கையை அரசுச் வேண்டும் என்ற துரிதகதிப் போக்கானது, பொங்பொங் போன்று 36 வருடங்கள் காத்திருக்கப் போவதில்லை என்பதை, சகல கோணங்களையும் பயன்படுத்தி,  இலங்கையின் ஆட்சி அதிகாரத்துக்குள் நுழைந்து கொள்ள இவர்கள் எடுத்துக் கொள்ளும் பிரயத்தனத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது!

92 ராஜபக்ஷ ஆதரவாளர்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் சேர்ந்திருப்பதும், மொட்டுச் சின்னத்தில் நாமல் களமிறங்கியிருப்பதுவும், நாமல் பற்றி ரணிலின் பிரசாரக் கூட்டங்களில் எதுவுமே பேசாமல் நழுவிச் செல்வதுவும் வாக்காளர்களைச் சிந்திக்க வைக்காத விடயமுமல்ல!

நாமல் ராஜபக்ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டபோது, அடுத்த பத்து வருடங்களுக்குள் நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் நாட்டிலுள்ள பல பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும் என்று தெரிவித்தார். தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் வரி வருவாயை அதிகரித்துக் கொள்ள முடியும் என்று அவர் கூறுவது, வாக்காளர்களை அவர்பால் ஈர்க்கச் செய்யுமா?


இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற முன்னெப்போதுமில்லாத படுமோசமான பொருளாதார நெருக்கடியும், அதன் விளைவான மக்கள் கிளர்ச்சியும் ஒரு தற்செயல் நிகழ்வுகள்; அதில் தங்களுக்கு எந்தப் பொறுப்புமில்லை என்பது போன்று மெத்தனக் கருத்துக்களை அவர்கள் அவ்வப்போது வெளியிட்டு வருவதானது, அவர்களது தவறான ஆட்சியின் விளைவாக நாடு வங்குரோத்து அடைந்தது என்பதை ஒத்துக்கொள்ள அவர்கள் தயாரில்லை என்பதைத்தான் காட்டுகின்றது!

அத்தியாவசியப் பொருட்களுக்காக மைல் கணக்காக வரிசைகளில் இரவு பகலாக காத்திருந்த மக்கள், தங்களை சபித்து வசைமாரி பொழிந்ததைக் கூட அவர்கள் சுலபமாகவே மறந்து விட்டார்கள்!

மக்கள் ஆணையை இழந்துவிட்டதாக நோக்கப் படுகின்ற நாடாளுமன்றத்தில் தங்களது கட்சிக்கிருந்த பெரும்பான்மை ஆசனங்களைப் பயன்படுத்தி, புதிய ஜனாதிபதியாக ரணிலைத் தெரிவுசெய்ததையும், அவர் மீது நெருக்குதலைப் பிரயோகித்து காரியங்களைச் சாதிக்கக்கூடியதாக இருந்ததை வைத்துக் கொண்டு, தாங்களே இப்போதும் ஆட்சியில் இருப்பது போன்ற மருட்சியில் இருக்கும் இவர்களை இலங்கை மக்கள் இனங்கண்டு கொள்வார்களா?

இந்த இடத்தில் மார்கோஸ் குடும்பத்தின் ஆரம்பகால எழுச்சியும் அதன் பின்னரான  வீழ்ச்சியும், பிறகு அண்மையக்கால மீளெழுச்சியும், இன்றைய இலங்கை நிலைவரத்துடன் ஆழ்ந்து நோக்கப்பட வேண்டியவை; அதிலுள்ள சமாந்திரங்கள் அடையாளம் காணக் கூடியவை!

செம்மைத்துளியான்.


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post