ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணி - கின்னஸ் சாதனை படைத்த முதியவர் மரணம்!

ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணி - கின்னஸ் சாதனை படைத்த முதியவர் மரணம்!


இன்றைய உலகில் யாருக்கும் ஒரே வேலையிலோ, அல்லது ஒரே நிறுவனத்திலோ பணியாற்றுவதில் ஈடுபாடு இல்லை. பணிச் சூழல் அல்லது சம்பளம் போன்றவற்றை காரணமாக வைத்து பலரும் ஒவ்வொரு நிறுவனமாக தாவுகின்றனர். அல்லது தற்போது பணியாற்றி வரும் வேலையை விட்டுவிட்டு, வேறொரு வேலையில் நுழைகின்றனர்.

இத்தகைய சுழலில் பிரேசிலை சேர்ந்த 102 வயது முதியவர் ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இதை பலருக்கும் நம்ப முடியாது. அரசு நிறுவனத்தை தவிர வேறு எங்கும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவது சாத்தியமில்லை. அப்படியே அரசு நிறுவனமாக இருந்தாலும், பணியிட மாற்றம் வந்துவிடும். அப்படி பார்த்தாலும் 58 வயதில் வீட்டுக்குச் சென்று விட வேண்டும். ஆனால், தனியார் நிறுவனத்தில் தொடர்ந்து 84 ஆண்டுகளா? இதை சொன்னால் பலருக்கும் நம்ப முடியாது. ஆனால், நீங்க நம்பலனாலும் அதான் நெசம்.

பிரேசிலின் நாட்டின் புரூஸ்க்யூ நகரில் இயங்கி வரும் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில், கடந்த 1938ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார் வால்டர் ஒர்த்மேன். படிப்பை பாதியில் விட்ட அவர், குடும்ப கஷ்டத்திற்காக தனது 15வது வயதில் இந்த நிறுவனத்தில் பேக்கிங் வேலையில் சேர்ந்தார். படிப்பு மிகவும் குறைவு என்பதால், வேறு எதிலும் ஈடுபாடு செலுத்தாமல் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர் படிப்படியாக அதே நிறுவனத்தில் அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்றார்.

இவருடன் பணியாற்றி வந்த பலரும் ஒரு சில ஆண்டுகளில் வேறு நிறுவனங்களுக்குச் சென்றாலும், இவர் மட்டுமே அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதனால், அவருக்கு அடுத்தடுத்து பதவி உயர்வு கொடுத்த நிறுவனம், சம்பளத்தையும் உயர்த்தி கொடுத்து வந்தது. இதனால் உற்சாகத்துடன் பணியாற்றி வந்த அவர், கடந்த 2022ஆம் ஆண்டு தனது 100வது வயதில் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். அப்போது, அவர் 84 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் பணியாற்றியதற்காக, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். அப்போது அவருக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அவருக்கு சக ஊழியர்கள் மட்டுமின்றி, உறவினர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவர், தனது 102வது வயதில் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி இயற்கை எய்தினார். அவரது மரணத்திற்கு அவரது நிறுவனம் இரங்கல் தெரிவித்ததோடு, அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் சில நடவடிக்கைகளில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

news18



 



Post a Comment

Previous Post Next Post