இஸ்ரேலை எதிர்க்க அழைப்பு விடுத்த அலி கமேனி.. அதிகரிக்கும் போர் பதற்றம்!

இஸ்ரேலை எதிர்க்க அழைப்பு விடுத்த அலி கமேனி.. அதிகரிக்கும் போர் பதற்றம்!

பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் ஆயுதக் குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது திடிர் தாக்குதலை நடத்தியது.

அதனைத் தொடர்ந்து, பாலிஸ்தீனம், லெபனான் என தொடர்ந்து இஸ்ரேல் தனது தாக்குதலை நடத்திவருகிறது. இந்தத் தாக்குதலில், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனையடுத்து ஈரான் இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இந்தத் தாக்குதலை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டது. அதேசமயம், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதும், அமெரிக்கா தனது ராணுவ வீரர்களுக்கு ‘இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் ஈரான் ஏவுகணைகளை முறியடிக்க இஸ்ரேலுக்கு உதவுக’ என உத்தரவிட்டது. இதனால், இந்த விவகாரம் உலகப் போராக மாறுமா எனும் பார்வையும் பரவலாக இருந்து வருகிறது.

இந்நிலையில், ஈரானில் உள்ள தெஹ்ரான் பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய வழிபாட்டு தலத்தில் வெள்ளிக்கிழமையான இன்று அந்த நாட்டின் உயரிய தலைவரான அயதுல்லா அலி கமேனி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஈரானில் இருந்து பல ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.

ஈரானின் உயரிய தலைவரான அயதுல்லா அலி கமேனி பேசியதாவது: “இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதல் என்பது ஒரு பொது சேவை. ஹமாஸ் அல்லது ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் எந்த வகையிலும் வெற்றி பெறாது.

நஸ்ரல்லா தற்போது நம்மிடையே இல்லை. ஆனால், அவரது ஆன்மாவும் பாதையும் என்றென்றும் நம்மை ஊக்குவிக்கும். லெபனானில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக இருப்பது அனைத்து இஸ்லாமியர்களின் கடமை. அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு நடத்திய தாக்குதல் என்பது சரியானது.

ஆக்கிரமிப்பிற்கு எதிராக நிற்கும் லெபனான் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்க சர்வதேச சட்டத்திற்கு உரிமை கிடையாது.

பிராந்தியத்தில் இருக்கும் வளங்களையும் நிலங்களையும் தற்காத்துக்கொள்ள அமெரிக்காவிற்கு இஸ்ரேல் ஒரு கருவி. லெபனான், ஈரான், ஈராக், எகிப்து போன்ற நாடுகளின் ஒரே எதிரி இஸ்ரேல். எதிரியின் எதிரி நண்பர்கள். இஸ்ரேலை அழித்தாக வேண்டும். இஸ்லாமிய நாடுகளின் எதிரியான இஸ்ரேலை ஒழித்துக்கட்ட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்” என்று பேசினார்.

news18



 



Post a Comment

Previous Post Next Post