Ticker

6/recent/ticker-posts

10வது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராகும் வைத்தியர் றிஸ்வி!


அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடம் வழங்கப்படாத நிலையில் இன்று கூடிய பாராளுமன்றில் பிரதி சபாநாயகர் பதவிக்கு டொக்டர் ரிஸ்வி சாலிஹ் அவர்கள் தெரிவாகியுள்ளமை மகிழ்ச்சி தரும் விடயமாகும்!

கொழும்பு இஸிப்பத்தான கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றுள்ள இவர், இந்தியா மற்றும் முல்தான் வைத்தியக் கல்லூரிகளில் உயர் கல்வி கற்றவராவார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவரது மகள்  விசேட வைத்திய நிபுணராக இங்கிலாந்திலும், மகன் பொறியியலாளராக கொழும்பிலும் கடமையாற்றுகின்றனர்; மனைவி ஓர் ஆங்கில ஆசிரியை என்பது குறிப்பிடத் தக்கது.

இவர் வைத்தியரானதும், முதன் முதலில் அரச வைத்திய அதிகாரியாக நுவரெலியா வைத்தியசாலையில் கடமையாற்றினார். மலையக மக்களது சுகாதார தேவைகளுக்காக  மக்களோடு மக்களாக இருந்து நான்கு வருடங்கள் சேவையாற்றிய பின்னர், 
 
கொழும்பில் பணிபுரியத் தொடங்கி, சுமார் 37 வருடங்களாக இப்பிரதேச மக்களுக்கு  சேவையாற்றி வருகின்றார்.

மூன்று தலைமுறைகளாகத் தன்னிடம் பிரசவ வைத்தியம் பார்த்த குடும்பத்தினர் மருதானை, மாளிகாவத்தை, தெமட்டகொட, குணசிங்கபுர எனப் பல பிரதேசங்களிலும் இருப்பதாகக் குறிப்பிடும் டொக்டர் ரிஸ்வி, கொழும்பில் கஷ்டமான சூழ்நிலையில்  பரம்பரை பரம்பரையாக வாழ்பவர்களின் வாழ்க்கைத் தரம், கல்வி, வருமானம், வீட்டு வசதிகள் உயர்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணியே அரசியலுக்கள் பிரவேசித்ததாகக் கூறுகின்றார்.

அரசியல் அதிகாரமிருந்தால் அதனூடாக தமது மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும் என்பது அவரது நிலைப்பாடாகும்.

கொழும்புவாழ் மக்கள் கல்வி, தொழில் வர்த்தகம், சுகாதாரம், இருப்பிட வசதி என்பனவற்றில் அபிவிருத்தி காண வேண்டும் என்பதற்காகவே ஊழலற்ற, சிறந்த ஒழுக்கமுள்ள தேசிய மக்கள் சக்தியை தேர்ந்தெடுத்து, இம்முறை தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார்.

சிறுபான்மை மக்கள் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி பயணிக்க வேண்டும். எமது எதிர்கால சந்ததியினருக்காக புதிய சிந்தனை கொண்ட இளைய அரசியல் பிரதிநிதிகளை மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்பது இவரது எதிர்பார்ப்பாகும்!

ஐ. ஏ. ஸத்தார்



 Ai SONGS

 



Post a Comment

0 Comments