Ticker

6/recent/ticker-posts

163க்கு ஆல் அவுட்.. ஃபார்முக்கு திரும்பி ஆஸியை தெறிக்க விட்ட பாக்.. அடிலெய்டில் 28 வருட சாதனை வெற்றி


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி நவம்பர் எட்டாம் தேதி அடிலெய்ட் நகரில் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு துவக்க வீரர்கள் மேத்தியூ ஷார்ட் 19, ஜேக் பிரேசர்-மெக்குர்க் 13 ரன்களில் ஷாஹீன் அப்ரிடி வேகத்தில் ஃபெவிலியன் திரும்பினார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 34 ரன்களில் நடையை கட்டினார்.

மிடில் ஆர்டரில் மார்னஸ் லபுஸ்ஷேன் 6, ஆரோன் ஹார்டி 14, கிளன் மேக்ஸ்வெல் 16, கேப்டன் கமின்ஸ் 13 என முக்கிய வீரர்களை ஹரிஷ் ரவூப் சொற்ப ரன்களில் பெரிய அனுப்பினார். இறுதியில் ஆடம் ஜாம்பா 18 ரன்கள் எடுத்தும் 35 ஓவரில் ஆஸ்திரேலியாவை வெறும் 163 ரன்களுக்கு பாகிஸ்தான் சுருட்டி வீசியது. அந்தளவுக்கு மிரட்டலாக பந்து வீசிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 5 விக்கெட்டுகளை எடுத்து ஃபார்முக்கு திரும்பினார்.

அவருடன் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை எடுத்து ஃபார்முக்கு திரும்பியது பாகிஸ்தான் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. பின்னர் 164 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் மற்றும் சாயும் ஆயுப் ஆகியோர் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடினார்கள். பவர் பிளே கடந்து அசத்தலாக விளையாடிய இந்த ஜோடி 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே பாகிஸ்தானை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது.

அதில் ஆயுப் அதிரடியான அரை சதம் அடித்து 82 (71) ரன்களில் ஆடம் ஜாம்பா சுழலில் அவுட்டானார். இறுதியில் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய சபிக் 64*, பாபர் அசாம் 15* ரன்களும் எடுத்தனர். அதனால் 26.3 ஓவரிலேயே 161-1 எடுத்த பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் வாயிலாக அடிலெய்ட் மைதானத்தில் 28 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.

கடைசியாக இந்த மைதானத்தில் 1996ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றியை பதிவு செய்திருந்தது. அதன் பின் அங்கே விளையாடிய போட்டிகளில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் தற்போது அதை உடைத்து 1 – 1* (3) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஹரிஷ் ரவூப் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments