Ticker

6/recent/ticker-posts

ரஷ்யாவுக்கு உதவியதாக 19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை - இந்தியா கூறுவது என்ன?


யுக்ரேனில் ரஷ்யா நடத்தி வரும் போருக்கு உதவும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி, அமெரிக்க அக்டோபர் 30ஆம் தேதியன்று (புதன்கிழமை) 19 இந்திய நிறுவனங்கள் மற்றும் இரண்டு இந்தியர்கள் உள்பட 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது தடை விதித்துள்ளது.

இந்திய பிரஜை ஒருவர் சீக்கிய பிரிவினைவாத ஆதரவு தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவை அமெரிக்க மண்ணில் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டால் இரு நாட்டிற்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்ற நிலையில் அமெரிக்கா இந்தத் தடையை அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "மூலோபாய வர்த்தகம் மற்றும் பரவல் தடை (non-proliferation) தொடர்பாக வலுவான சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை இந்தியா கொண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழில் அக்டோபர் 24ஆம் தேதியன்று வெளியான நேர்காணல் ஒன்றில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, "பன்னுவின் கொலை முயற்சிக்கான பொறுப்பு யாருடையது என்பதை உறுதியாக அறிந்தால் மட்டுமே அமெரிக்கா திருப்தி அடையும்," என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அதன் வெளியுறவுத் துறை அமைச்சகம், கருவூலக அமைச்சகம், மற்றும் வர்த்தக அமைச்சகம் ஒன்றாக இணைந்து இந்தத் தடையை சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது விதித்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி சீனா, மலேசியா, தாய்லாந்து, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கு உதவும் நிறுவனங்கள் என குற்றச்சாட்டு

இந்த நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு பொருள் கொடுப்பதாகவும், ரஷ்யா அதை யுக்ரேன் போரில் பயன்படுத்துவதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்துகிறது.

பொது முன்னுரிமைப் பட்டியலில் (Common High Priority List, CHPA) இடம் பெற்றுள்ள மின்னணுக் கருவிகள், கணினி எண் கட்டுப்பாட்டுக் கருவிகளை இந்த நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு அளிப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்காவின் வர்த்தகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழிற்சாலை மற்றும் பாதுகாப்புத் துறையாலும், பிரிட்டன், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தாலும் இந்தப் பொருட்கள் இந்தப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.

இந்திய நிறுவனங்களைக் குறிவைப்பது அமெரிக்காவுக்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரஷ்ய ராணுவத்திற்கு உதவியதாகக் கூறி இந்திய நிறுவனம் ஒன்றின் மீது அமெரிக்கா தடை விதித்தது.

எந்தெந்த நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது? தடையை எதிர் கொண்டிருக்கும் இந்தியர்கள் யார்? அதற்காக அமெரிக்கா கொடுத்துள்ள காரணங்கள் என்ன?

தடையை எதிர்கொள்ளும் இந்திய நிறுவனங்கள்

அமெரிக்க உள்துறை அமைச்சகம், 120 நிறுவனங்கள் அடங்கிய பட்டியலைத் தயார் செய்துள்ளது. அந்தப் பட்டியலில் நான்கு இந்திய நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸெண்ட் ஏவியேஷன் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மாஸ்க் டிரான்ஸ், டி.எஸ்.எம்.டி. குளோபல் ப்ரைவேட் லிமிட்டட், ஃபூட்ரெவோ கம்பெனி ஆகியவைதான் இந்த நான்கு நிறுவனங்கள்.

கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2024 மார்ச் வரையிலான காலகட்டங்களில் 700 முறை ரஷ்ய நிறுவனங்களுக்கு பொருட்களை அனுப்பியதாக அஸெண்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

CHPA பொருட்கள் உள்பட ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பிலான பொருட்களை அந்த நிறுவனம் அனுப்பியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் முதல் 2024 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் மாஸ்க் டிரான்ஸ் என்ற நிறுவனம் ரூ. 2.5 கோடி மதிப்பிலான பொருட்களை ரஷ்யாவுக்கு அனுப்பியதாகவும், அந்தப் பொருட்கள் ரஷ்யாவின் விமான சேவைகள் தொடர்பான பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் வெளியுறவுத்துறை குற்றம் சுமத்தியுள்ளது.

டி.எஸ்.எம்.டி. குளோபல் ப்ரைவேட் லிமிட்டட் நிறுவனம் ரஷ்ய நிறுவனங்களுக்கு ரூ.3.6 கோடி மதிப்பிலான கணினி உதிரி பாகங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

ஃபூட்ரெவோ நிறுவனம் ரஷ்யாவுக்கு ரூ.12 கோடி மதிப்பிலான மின்னணு இயந்திரங்களை, 2023 ஜனவரி முதல் 2024 பிப்ரவரி வரை வழங்கியதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. ஆளில்லா விமானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இந்த இயந்திரங்கள் வழங்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி அபார் டெக்னாலஜிஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், டென்வாஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், இஎம்எஸ்ஒய் டெக், கேலக்ஸி பீரிங்ஸ் லிமிடெட், இன்னோவியோ வென்ச்சர்ஸ், கேடிஜி இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் மற்றும் குஷ்பூ ஓனிங் பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்களின் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

லோகேஷ் மெஷின்ஸ் லிமிடெட், ஆர்பிட் ஃபைன்ட்ரேட் எல்எல்பி, பாயிண்டர் எலக்ட்ரானிக்ஸ், ஆர்ஆர்ஜி இன்ஜினியரிங் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், ஷார்ப்லைன் ஆட்டோமேஷன் பிரைவேட் லிமிடெட், ஷௌர்யா ஏரோநாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீஜி இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஷ்ரேயா லைஃப் சயின்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியர்கள் மீதான தடை

இந்த நிறுவனங்கள் மட்டுமின்றி விவேக் குமார் மிஸ்ரா, சுதிர் குமார் ஆகிய இரண்டு இந்தியர்கள் மீதும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இந்த இருவரும் அஸெண்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் இணை இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் என அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கும் தகவல்களின்படி இந்த நிறுவனம் டெல்லியை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. விமானப் பிரிவுக்குத் தேவையான உதிரிபாகங்கள் மற்றும் லூப்ரிகெண்ட் போன்ற பொருட்களை விநியோகம் செய்கிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.

நிபுணர்கள் கூறுவது என்ன?

அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் 16,500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது தடை விதித்துள்ளது. இது 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா யுக்ரேன் மீது போர் தாக்குதலை நடத்த ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை தடை செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை.

இந்த நடவடிக்கைகள் காரணமாக ரஷ்யாவின் அந்நிய செலாவணி கையிருப்பில் பாதி (276 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி ரஷ்ய வங்கிகளின் சொத்துகளில் 70% முடக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யா ஸ்விஃப்ட் வங்கி முறையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்விஃப்ட் அல்லது சொசைட்டி ஃபார் வேர்ல்ட்வைட் இன்டர்பேங்க் ஃபினான்சியல் டெலிகம்யூனிகேஷன் (Society for Worldwide Interbank Financial Telecommunication) என்பது ஒரு பாதுகாப்பான பணப் பரிமாற்ற அமைப்பாகும். அது எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் வேகமாகவும் உடனுக்குடனும் நடைபெற உதவுகிறது. சர்வதேச அளவில் நடைபெறும் வர்த்தகங்களுக்கு இது பெரிய அளவில் உதவி வருகிறது.

வெளியுறவு விவாகரங்கள் துறை நிபுணரும், தி இமேஜ் ஆஃப் இந்தியாவின் தலைவருமான ரோபிந்தர் சச்தேவ், "இந்த நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பிறகு, அவை ஸ்விஃப்ட் வங்கி அமைப்பின் கறுப்புப் பட்டியலுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளன. இதனால் இந்த நிறுவனங்கள் ரஷ்யா யுக்ரேன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போரில் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளுடன் பணப் பரிவர்த்தனை செய்ய இயலாது," என்று விவரிக்கிறார்.

இந்தத் தடையின் காரணமாக எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளில் உள்ள அந்த நிறுவனங்களின் சொத்துகளும் முடக்கப்படும் என்று கூறுகிறார் சச்தேவ்.

"ரஷ்யாவை உடைப்பதற்காக அமெரிக்கா இதைச் செய்கிறது. ரஷ்யாவின் பொருளாதாரத்தை பலவீனமாக்கவும், அதன் பாதுகாப்புப் பிரிவு போரைத் தொடர்ந்து நடத்தப் போதுமான பொருட்கள் கிடைக்காமல் திண்டாட வைக்கவும் விரும்புகிறது," என்கிறார் அவர்.

இருப்பினும், இந்த நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் இத்தகைய தடைகள் இந்தியா மற்றும் அமெரிக்கா உடனான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் அவை இரண்டும் ஏற்கெனவே நல்ல உறவில் இருக்கின்றன என்று கூறுகிறார் இவர்.

ஆனால் ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யாவில் ஐரோப்பாவின் தடைகள் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கிறார்.

அமெரிக்காவின் சிந்தனைக் குழுவான அட்லாண்டிக் கவுன்சில், ரஷ்யா வெற்றிகரமாக கச்சாப் பொருட்களை ஏற்றுமதி செய்வதாகவும், அதிலிருந்து நிறைய பண மீட்டுவதாகவும் குறிப்பிடுகிறது.

சர்வதேச எரிபொருள் முகமை (International Energy Agency), ரஷ்யா நாள் ஒன்றுக்கு 80 லட்சம் பேரல்களில் கச்சாப் பொருட்களை ஏற்றுமதி செய்வதாகவும், இந்தியாவும் சீனாவும் அதிகமாக அந்த கச்சாப் பொருட்களை வாங்குவதாகவும் கூறுகிறது.

அதே நேரத்தில் ஜார்ஜியா, பெலாரூஸ், கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் தடை செய்யப்பட்ட பொருட்களை ரஷ்யா வாங்குவதாக லண்டனின் கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்தியாவின் கருத்து

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுதொடர்பாகப் பேசியபோது, "மூலோபாய வர்த்தகம் மற்றும் பரவல் தடை (non-proliferation) தொடர்பாக வலுவான சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை இந்தியா கொண்டுள்ளது. பரவல் தடை ஏற்றுமதிக் கட்டுப்பாடு அமைப்புகளான மூன்று முக்கிய அமைப்புகளில் நாம் உறுப்பினர்களாக இருக்கிறோம்," என்று குறிப்பிட்டார்.

"தி வசினார் அரேஞ்மெண்ட், ஆஸ்திரேலியா குரூப், மிஸில் டெக்னாலஜி கண்ட்ரோல் ரெஜிம் ஆகிய அமைப்புகளில் இந்தியா ஓர் அங்கமாகச் செயல்படுகிறது. அதுமட்டுமின்றி பரவல் தடை தொடர்பான ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தடைகள் மற்றும் தீர்மானம் 1540-ஐ இந்தியா திறம்படச் செயல்படுத்தி வருகிறது. எங்கள் புரிதலின்படி இந்தத் தடை, பரிவர்த்தனைகள் மற்றும் நிறுவனங்கள் இந்திய சட்டங்களை மீறவில்லை," என்றார் ரந்தீர் ஜெய்ஸ்வால்.

இருப்பினும் "இந்தியாவின் பரவல் தடை முன்னெடுப்புகள் குறித்தும், அதன் கட்டுப்பாடுகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலமாகவும் முகமைகள் மூலமாகவும் இந்திய நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இந்திய நிறுவனங்களுக்கு, குறிப்பிடும் சூழல்களில், சாத்தியமான பாதிப்புகளை ஏற்படுத்தும் புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும்போது அவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்," என்று அவர் கூறினார்.

எழுதியவர்,அபினவ் கோயல்
பதவி,பிபிசி செய்தியாளர்
bbctamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments