Ticker

6/recent/ticker-posts

எலான் மஸ்கின் ஸ்டார்ஷிப் திட்டம்... இனி 40 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா பயணம்?


உலகின் எந்த முனையில் இருந்தும் எந்த முனைக்கும் ஒரு மணி நேரத்தில் செல்லும் வகையில் அதிவேக பயணங்களை சாத்தியமாக்க உலகப் பணக்காரர் எலான் மஸ்க் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது எப்படி சாத்தியம் என விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

வாரணம் ஆயிரம் படத்தில் வரும் வசனத்தைப் போல இந்தியாவுக்கு மிக அருகே வர உள்ளது அமெரிக்கா. நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமான ஒன்றுதான் என்றாலும் தனது ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட் மூலம் இது சாத்தியம் என்று கூறி உள்ளார் உலகப் பணக்காரர் எலான் மஸ்க். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு ஆதரவாக செயல்பட்ட எலான் மஸ்க் தன்னுடைய தொழில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். குறிப்பாக தன்னுடைய ‘ஸ்டார்ஷிப்’ திட்ட செயல்பாடுகளை அவர் வேகப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்திலேயே பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷனின் அனுமதி கிடைத்துவிட்டால் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு 40 நிமிடங்களிலேயே பயணம் செய்துவிட முடியும் என சொல்லப்படுகிறது. இதற்காக ‘ஸ்டார்ஷிப்’ என்ற ஒரு பெரிய ராக்கெட்டை வடிவமைத்துள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் 395 அடி உயரத்தில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக விண்வெளி வீரர்கள், செயற்கைக்கோள்கள், உள்ளிட்டவற்றை பூமியில் இருந்து விண்வெளிக்கு எடுத்துச் செல்லவே ராக்கெட்டுகள் பயன்படும்.

ஆனால் எலான் மஸ்க் நிறுவனம் தயாரித்து உள்ள இந்த ராக்கெட், ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ராக்கெட்டுகளில் பொதுமக்கள் பயணிக்கும் பட்சத்தில் லண்டன் முதல் நியூயார்க் வரையிலான பயண நேரம் 29 நிமிடங்களாகவும் டோக்கியோ - டெல்லி பயண நேரம் 30 நிமிடங்களாகவும் குறையும். பொதுவாக டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ செல்ல குறைந்தபட்சம் 15 மணி நேரத்துக்கு மேலாகும். ஆனால் இந்த ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட் மூலம் 40 நிமிடங்களில் பயணம் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.

உலகின் பிரதான நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை ஒரு மணி நேரத்திற்குள் குறைக்க வேண்டும் என்பது இந்த திட்டத்தின் நோக்கம். ஆனால், கிடைமட்டமாக சென்று மேலேழும்பும் விமானத்தில் பயணிக்கும்போதே மனிதர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும்.

ஆனால் இந்த ராக்கெட்டுகள் செங்குத்தாக எழும்பி பின்னர் கிடைமட்டமாகப் பாயும் என்று விவரிக்கப்பட்டுள்ளது. அப்போது, புவி ஈர்ப்பு விசை காரணமாக உடல்ரீதியான பிரச்சினைகளை பயணிகள் சந்திக்கலாம் என சொல்லப்படுகிறது.

மணிக்கு 27,000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், மனித உடலால் இந்த அசாத்திய வேகத்தை எப்படி எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கான சோதனைகளைத்தான் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட்டிற்காக கடலுக்கு நடுவே தனி ஏவுதளங்கள் செயல்படும் உள்ளிட்டவை போன்ற கிராபிக்கல் காணொலியை எக்ஸ் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க் ‘‘இனி இது சாத்தியம்’’ என தெரிவித்துள்ளார்.

news18



 Ai SONGS

 



Post a Comment

0 Comments