Ticker

6/recent/ticker-posts

Ad Code



கல்ஹின்னை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு!

நாடாளுமன்றம் செல்லும் அல்ஹாஜ் பஸ்மின் ஷெரீப்!

10வது  நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் நவம்பர்  மாதம் 21ம் திகதி கனிசமான புதுமுகங்களுடன் கூடவுள்ளது.

18 முஸ்லிம் மற்றும்  22 தமிழ் உறுப்பினர்களும்,  வைத்தியத்துறை சார்ந்தவர்கள் 16 பேர்களும், 21 பெண்களும்,  விழிப்புலனற்றோர் சார்பில் ஒருவருமாக அமரப்போகும் இந்த நாடாளுமன்றத்தில், கல்ஹின்னை வரலாற்றிலேயே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வு இடம் பெறப்போவது கல்ஹின்னை மக்களை மகிழ்ச்சிப் படுத்தும் விடயமாகும்.

ஆசியாவிலேயே சிறந்ததொரு நாடாளுமன்றாக அமையப்போகும் இம்முறை இலங்கை நாடாளுமன்றத்துக்குள், ஆசிரியர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள்,  கணக்காளர்கள், சமூகவிஞ்ஞானிகள், கலைஞர்கள், விளையாட்டு வல்லுனர்கள்  என்று எல்லாத் துறைகளிலிருந்தும்  உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு நுழையவுள்ளார்கள்.

அந்த வகையில், கல்ஹின்னையிலிருந்து நாடாளுமன்றம் நுழையப்போகும் அல்ஹாஜ் பஸ்மின் ஷெரீப் ஒரு வர்த்தகராவார்.  தற்போது கம்பளையை வாழ்விடமாகக் கொண்டுள்ள இவர், ஒரு சமூக செயற்பாட்டாளருமாவார். அமைதியான சுபாவமும், அனைவருடனும் அன்பாகப் பழகக் கூடிய  புத்திசாதுரியம் மிக்கவருமாவார்!

நீண்டகாலமாக தேசிய மக்கள் சக்தியின் பாசறையில் செயற்பாட்டு உறுப்பினராக ஈடுபாடு காட்டிவந்துள்ள இவர், நாடு அனர்த்த நிலைக்கு வந்தபோது ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்த பல்லாயிரம் பேர்களுள் ஒருவருமாவார். 

தேசிய மக்கள் சக்தியில் இணைந்து பல்லாண்டு காலமாகப் பணி செய்துவரும் இவர், கட்சியின் கண்டி மாவட்ட முஸ்லிம் நிறைவேற்றுக் குழு உறுப்பினராவார்.

சகல துறைகளிலும் பரந்து விரிந்து நிற்கும் கல்ஹின்னை மண்ணிற்கு நீண்டகாலமாக ஒரு குறைபாடு இருந்து வந்துள்ளது; அதனைப் பெற்றுக் கொள்வதற்காக காலாகாலமாகப் பலரும் பல்வேறு முறைகளிலும் முயற்சிகள் எடுத்தபோதிலும், எதுவுமே கைகூடவில்லை!

கல்ஹின்னை மண்ணில் பிறந்து வளர்ந்தர்!


கல்ஹின்னை மண்ணில் பிறந்து வளர்ந்த பஸ்மின் ஷெரீப் ஹாஜியார் மூத்த அரசியல்வாதிகள் பலரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, வெற்றிவாகை சூடி எதிர்வரும் 21ம் திகதி கூடவுள்ள புதிய நாடாளுமன்றத்துக்குள் திடுதிப்பாக நுழைவதன் மூலம், வரலாற்றில் முதலாவது நாடாளுமன்றம் செல்பவர் என்ற பெருமையை கல்ஹின்னைக் கிராமத்துக்கு ஈட்டித் தருகின்றார்.

எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்காக, குறிப்பாகக் கண்டிவாழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடியவராக, அதிகளவான சேவைகள் செய்கின்ற பக்குவத்தை இவர்  பெறுவார் என்பதில் ஐயமில்லை!

கண்டி மாவட்டத்திலுள்ள கிராமங்களின் குறைபாடுகளை அறிந்து அவற்றுக்கான அபிவிருத்தித் திட்டங்களை வகுத்து, அதிக ஈடுபாட்டுடன் செயல்படக் கூடியவராக இவர் இருக்க வேண்டும் என்பது பிரதேச மக்களின்  எதிர்பார்ப்பாகும்!

நாமும் இவரை வாழ்த்துகின்றோம்!

ஐ. ஏ. ஸத்தார்





 Ai SONGS

 



Post a Comment

0 Comments