Ticker

6/recent/ticker-posts

வயிறு பெருசானால் இந்த பிரச்னையும் இருக்கலாம்... தொப்பைனு நினைச்சு அசால்ட்டா இருக்காதீங்க!


நார்வே நாட்டைச் சேர்ந்த தாமஸ் க்ராட் என்பவர் தான் 12 ஆண்டுகளாக உடல் பருமானால் பாதிக்கப்பட்டதாக நினைத்து வந்துள்ளார். அவருக்கு மருத்துவர்களும் தொடர்ந்து உடல் எடை குறைப்புக்கே சிகிச்சை வழங்கி உள்ளனர். 

குறிப்பாக, உடல் எடை குறைப்பாக கொடுக்கப்படும் Ozempic என்ற மருந்தையும் மருத்துவர்கள் அவருக்கு நீண்ட காலமாக வழங்கி வந்துள்ளனர். ஆனால் அவர் உடல் பருமானால் பாதிக்கப்படவில்லை என்றும் அவரது வயிற்றில் பெரிய கட்டி ஒன்று வளர்ந்திருப்பதை தற்போதுதான் மருத்துவர் கண்டறிந்துள்ளனர்.

27 கிலோ கட்டி

ஆம்... 59 வயதான தாமஸ் க்ராட்டின் வயிற்றில் சுமார் 27 கிலோ எடை உள்ள வீரியம் மிக்க புற்றுநோய் கட்டி ஒன்று வளர்ந்துள்ளதாம், அதை மருத்துவர்கள் தற்போதே கண்டறிந்துள்ளனர். தாமஸ் க்ராட் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் உடல்நல பிரச்னையை சந்தித்து வருகிறார். அப்போது இருந்து அவரது வயிறு பெருத்து வந்துள்ளது. முதலில் அவருக்கு 2012ஆம் ஆண்டில் டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. அவர் வயிற்றில் அந்த கட்டி வளர்ந்தாலும் கூட அவர் தொடர்ந்து உடல் எடையை குறைக்கவும், ஊட்டச்சத்து சார்ந்த சிகிச்சையும் அவர் பெற்றுள்ளார். 

அவருக்கு உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டு சமீபத்தில் மருத்துவர் அவரை ஆய்வு செய்த நிலையில், வயிற்றில் கட்டி இருப்பது தெரிந்துள்ளது. இதுகுறித்து தாமஸ் க்ராட் கூறுகையில்,"எனது வயிறு பெரிதாகி கொண்டே இருந்தது. நான் பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றேன், பலனில்லை. 2019ஆம் ஆண்டில்தான் அறுவை சிகிச்சை (Gastric Sleeve Operation) அனுமதி கிடைத்தது.

வயிறு மட்டும் பெருத்துள்ளது

மருத்துவர் எப்போதும் தன்னிடம் அதிக உடல் எடை குறித்தும், நீரிழிவு நோய் குறித்துமே பேசுவார்கள். எனக்கு நீரிழிவுக்காக Ozempic மருந்து கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, ஊட்டச்சத்திற்கும், அறுவை சிகிச்சைக்கு முன் உடல் கட்டுப்பாட்டுக்கும் பல்வேறு பயிற்சிகளில் பல ஆண்டுகளாக இருந்து வந்தேன்" என்றார். இதனால் அவர் உடல் எடையை குறைத்துள்ளார் என்றும் முகமும், கையும் ஒல்லியாகவே இருந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆனால் அவரின் வயிறு மட்டும் பெரிதாகவே இருந்துள்ளது. மருத்துவர்கள் அவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது என்றும் கூட கூறியிருக்கின்றனர். சிடி ஸ்கேன் செய்தபோது வயிற்றில் அவ்வளவு பெரிய கட்டியிருப்பதை பார்த்த உடன் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார். 

கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு 10 மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில் அந்த பெரிய கட்டி அகற்றப்பட்டது. எனினும், அவருக்குள் தொடர்ந்து புற்றுநோய் திசுக்கள் வளர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இந்த தாமதமான சிகிச்சையால் அவருடைய சிறுகுடல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வலதுபக்கம் சிறுநீரகம் கூட அகற்றப்பட வேண்டியதாகி உள்ளது. 

மேலும், தாமஸ் க்ராட் கூறுகையில்,"இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மனோதத்துவ நிபுணரை சந்தித்து  கலந்தாலோசனை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. புற்றுநோய் நிபுணரிடம் ஒரு வருடத்திற்கு இரண்டு முறை செல்ல வேண்டும், இன்னும் என்னுள் புற்றுநோய் திசுக்கள் வளர்கின்றன. அது பல்வேறு உறுப்புகளுடன் இணைந்துவிட்டதால் அதை முழுவதுமாக அகற்ற முடியாது என சொல்லிவிட்டனர்" என்றார். 

வாசகர்கள் கவனத்திற்கு...

தாமஸ் க்ராட்டின் வாழ்க்கையில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் நிச்சயம் உடல்நல பிரச்னைகளுக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஒருவேளை மருத்துவரே அதை கண்டறியாவிட்டாலும் கூட ஒட்டுமொத்த உடல் பரிசோதனைக்கு தயாராக இருக்க வேண்டும். அதனை எதிர்கொள்ளும் மனதிடத்துடனும் இருக்க வேண்டும். மருத்துவர்களும் மனிதர்கள்தான்... எனவே நீங்கள் தாமதிக்காமல் உங்கள் பிரச்னைகளுக்கு உரிய நிபுணரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருபோதும், எவ்வித காரணத்திற்காகவும் கால தாமதம் செய்யவே செய்யாதீர்கள். 

zeenews



 Ai SONGS

 



Post a Comment

0 Comments