தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் மிகவும் எளிமையான முறையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளப்பட்டது.
மட்டுப்படுத்தப்பட்ட புதிய அமைச்சரவையில் பாதுகாப்பு, நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற அமைச்சுக்களை ஜனாதிபதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்துகொண்டதும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமனம் பெற்றனர்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்களை பிரதமரே பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சராக விஜித ஹேரத் நியமனம் பெற்றார்.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்களும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக சட்டத்தரணி ஹர்சன நாணயக்காரவும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்களும் நியமனமாயினர்.
விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக கே.டி லால் காந்தவும்,நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சராக அநுர கருணாதிலகவும்,கடற்றொழில் மற்றும் நீரியல், கடல் வளங்கள் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரும், கிராமிய அபிவிருத்தி,சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பேராசிரியர் உபாலி பன்னிலகேயும் நியமனம் பெற்றனர்.
சுனில் ஹந்துந்நெத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராகவும், ஆனந்த விஜேபால பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராகவும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சராக பிமல் ரத்னாயக்கவும் சத்தியப் பிரமாணம் செயது கொண்டனர்.
பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்கள் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராகவும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக டொக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸ அவர்களும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக சமந்த வித்யாரத்னவும் நியமனம் பெற்றுள்ளனர்.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சுனில் குமார கமகேயும், வசந்த சமரசிங்க வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராகவும், விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சராக பேராசிரியர் கிரிசாந்த அபேசேன அவர்களும்,தொழில் அமைச்சராக, பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ அவர்களும், வலுசக்தி அமைச்சராக பொறியியலாளர் குமார ஜயகொடியும், டொக்டர் தம்மிக பட்டபெந்தி சுற்றாடல் அமைச்சராகவும் நியமனம் பெற்றுக் கொண்டனர்.
புதிய அமைச்சரவை ஏதோ ஒரு விஞ்ஞான முறைமையான அடிப்படையில் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டிருப்பதும், இயலுமான வரை தகுதி அடிப்படையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும், அமைச்சர்களின் எண்ணிக்கையை இப்போதைக்கு இருபத்தொன்றாக மட்டுப்படுத்தப்பட்டிருப்பதும், தேசியப் பட்டியலூடாக வந்த பலர் - குறிப்பாக பேராசிரியர்கள் அமைச்சர்களாக நியமனம் பெற்றிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.
ஆனால் இதுவரை தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சு மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சுகளுக்கான அமைச்சர்கள் நியமனமாகவில்லை!
தமிழர்கள் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அதி கூடுதல் வாக்குகள் பெற்றுக் கொண்ட சரோஜா போல்ராஜும், தேசியப் பட்டியல் மூலம் வந்த ராமலிங்கம் சந்திரசேகரும் அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
380151 தமிழ் மக்கள் வாக்களித்து எட்டுப் பேர்களையும், 468802 முஸ்லிம் மக்கள் வாக்களித்து ஏழு பேர்களையும் வெற்றிபெறச் செய்தமை தேசிய மக்கள் சக்தியின் புதியதொரு திருப்புமுனையாகும்!
முஸ்லிம் சமூகத்தில் வெற்றி பெற்றவர்களுள் வைத்தியர், வழக்கறிஞர் மற்றும் புலமைபெற்ற ஆசிரியர் ஒருவரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதனால், முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒருவரேனும் அமைச்சரவைக்குள் இடம் பெறாமை விசனம்தரும் விடயமாகப் பார்க்கப் பட்டுவருவதோடு, தேசிய ஒருமைப்பாடு-இன உள்ளடக்க விடயத்தில் இந்த அமைச்சரவை நியமனம் சற்று சறுக்கி இருக்கியிருப்பதாக சமூகவலைத் தளங்களில் சுட்டிக்காட்டப்பட்டும் வருகின்றன!
பொருளாதார ரீதியாக இந்த நாட்டில் வரலாற்று வகிபாகம் மற்றும் முக்கியத்துவம் கொண்ட தேசிய இனங்கள் அமைச்சரவையில் இருப்பது சுபீட்சமான இலங்கையின் எதிர்கால தேச நிர்மாணத்துக்கு முக்கியமானதாகும்.
சில அமைச்சுகளுக்கான அமைச்சர்கள் நியமனம் முற்றுப்பெறாதிருக்கும் நிலையில் இவைகளுக்குள் முஸ்லிம் அமைச்சர்களின் நியமனம் இடம்பெறலாம் என்ற சாத்தியக் கூறுகள் அதிகமாகவே காணப்படுவதாக நம்பப்படுகின்றது!
நாட்டினுள் இனத்துவேசத்தை இல்லாதொழித்து எல்லா சமூகமும் ஐக்கியத்துடன் வாழ வைக்கும் பணியில் தேசிய மக்கள் சக்தி தீவிரம் காட்டி வருவது பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும். அநுரகுமார சகோதரர் உட்பட அவரது கட்சி இந்த நாட்டில் எந்த இனத்துக்கும் துரோகம் செய்ய மாட்டாது என்பதை இந்நாட்டு மக்கள் திடமாக நம்புகின்றனர். இர்நிலையில், அமைச்சரவைக்குள் முஸ்லிம்கள் உள்ளீடு செய்யப் படாதிருக்கும் இரகசியம் என்னதான் என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது!
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments