நரம்பியல் மருத்துவர் சுப்பையா கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி அன்று சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவங்கினர். அதன்படி, கொலை நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அதனை ஆய்வு செய்தனர்.
அதில் மொத்தம் 10 பேர் இருந்ததை கண்டறிந்த காவல்துறையினர், அவர்கள் குறித்து விசாரித்தனர். விசாரணையில், ஜேம்ஸ் சதீஷ்குமார், பொன்னுசாமி, மேரி புஷ்பம், போரிஸ், வில்லியம்ஸ், பேசில், யேசுராஜன், முருகன், ஐயப்பன், செல்வ பிரகாஷ் உள்ளிட்ட 10 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ரூ. 10 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கர் நிலம் தொடர்பான நிலத்தகராறின் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டறிந்தனர். இதில், ஐயப்பன் என்பவர் அப்ரூவரானார்.
இது தொடர்பான வழக்கு, சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி இந்த வழக்கில் ஒன்பது பேரைக் குற்றவாளிகள் என அறிவித்து, அதில், பொன்னுசாமி, பாசில், வில்லியம்ஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்ல பிரகாஷ் ஆகிய 7 பேருக்குத் தூக்குத் தண்டனையையும், மேரி புஷ்பம், யேசுராஜன் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையையும் வழங்கி உத்தரவிட்டார்.
நீதிபதி அல்லி தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மேல்முறையீடு செய்தனர். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து தமிழ்நாடு அரசு சார்பிலும், மருத்துவர் சுப்பையா மனைவியின் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீடு மனு, இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பட்டப்பகலில் ஒரு மருத்துவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுபோன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை.
அனைத்து விசாரணைகளையும் நடத்திய கீழமை நீதிமன்றம், தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்திருந்தது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது என்பதை எப்படி நாங்கள் பார்ப்பது என்றே தெரியவில்லை. இது கொடூரமான வழக்கு என்பதை நாங்கள் தெள்ளத்தெளிவாக பார்க்கின்றோம்” என்று அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments